அண்ணாமலை அவர்களே உங்களின் செயல் தர்மம் அல்ல அவலம் !
அண்ணாமலை அவர்களே உங்களின் செயல் தர்மம் அல்ல அவலம் !
பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் தங்களிடம் கேள்வி கேட்டவரை நீங்கள் கையாண்ட விதம் அசிங்கமானது.
கேட்டவரின் கேள்விக்குப் பதில் அளிக்க விருப்பம் இல்லை என்று கூறி கடந்து போயிருக்கலாம். அல்லது உங்கள் கேள்வி ஒருபக்கச்சார்பாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டியிருக்கலாம். அல்லது யூடியூபர்களை அழைக்காமல் இருந்திருக்கலாம்.
கேள்வி கேட்டவர் யூடியூபர் என்று வெளியே தெரியாதபோது அனைத்துப் பத்திரிகை ஊடகவியலாளர்களையும் பொத்தாம் பொதுவாக அவமதிப்பதாகவே இருந்தது உங்கள் வாதம்.
அன்பளிப்பும், கையூட்டும் வாங்கும் பத்திரிகை, ஊடகவியலாளர்கள் சிலர் இருக்கவே செய்கின்றனர்.
ஆனால், அவர்கள் என்ன வாங்கினாலும் அந்தச் செய்தியை வெளியிடும் முடிவு ஆசிரியர் குழுவினுடையது. அதில் Check point இருக்கிறது.
மேலும், அவர் மீதான நம்பகத்தன்மை என்பதும் அந்தப் பத்திரிகை, ஊடகவியலாளருக்கான முக்கியமான மற்றுமொரு Check point.
இதற்காக நீங்கள் இருநூறு, ஆயிரம், இரண்டாயிரம் என்று ஏலம் போட்டிருக்க வேண்டியதில்லை.
தாங்கள் பணியாற்றிய துறையினர் “சிலர் ” சாலையோர நடைபாதைக் கடை, வண்டிக்கடை, கீரைக்காரர் கடை என ரூ.20 மாமூல் வாங்குகின்றனரே, வண்டியை மடக்கினால் 100 முதல் 3000 வரை கூட கறக்கின்றனரே. இட்லி விற்கும் ஆயாவைக்கூட விட்டுவைப்பதில்லையே. கஞ்சா முதல் டாஸ்மாக் பிளாக்கில் சரக்கோட்டுவதிலும் மாமூல் பெறுகிறார்களே.
அதற்காக ஒட்டுமொத்தத் துறையினரும் அப்படித்தான் என்று நாங்கள் எண்ணுவதில்லையே.
அந்த அடிப்படை நாகரிகம்கூட ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கு இருக்க வேண்டுமா இல்லையா?!
கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல்லெறியாதீர்கள்.
அடக்கம் அமரருள் உய்க்கும்.
நாவடக்கம் நல்ல பெயரைப் பெற்றுத் தரும்.
வருத்தம் தெரிவியுங்கள். அது நல்லது.
– கே எம் விஸ்வநாத், ஊடகவியலாளர் 27/5/22