உடைகிறது பாஜக ! புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை !
பாஜக மாவட்டப் பொறுப்பில் இருந்த ஒருவர், அங்குசம் இதழுக்குப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். நாமும் பதிலுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தோம். தொடர்ந்து பேசிய அவர்,“நான் இப்போது பாஜக மாவட்டப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டேன். தற்போது அண்ணாமலை நற்பணி மன்றத்தின் மாவட்டப் பொதுச்செயலாளராக அண்ணன் அண்ணாமலையால் நியமிக்கப்பட்டிருக்கிறேன். பொங்கல் வரை அண்ணாமலை நற்பணி மன்றத்தில் செயல்படுவேன். பொங்கலுக்குப் பிறகு அண்ணாமலை தொடங்குகின்ற அரசியல் கட்சியில் பயணம் செய்வேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,“ கடந்த 2025 டிசம்பர் மாதத்தில் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் அருகில் பத்திரிக்கையாளர்கள் யாருக்கும் தெரிவிக்காமல் அண்ணன் அண்ணாமலை தன் நற்பணி மன்றத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் பலர் கலந்துகொண்டனர். அனைவரும் அண்ணாமலை தமிழ்நாடு பாஜகவின் தலைவர் பொறுப்பில் இருந்தபோது மாவட்டப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டவர்கள். அதுமட்டுமல்ல, அனைவருக்கும் கட்சியிலிருந்து மாதம் 10ஆயிரம் சம்பளம் பெற்றுத் தந்தார். அதனால் அண்ணாமலை கூட்டிய கூட்டத்திற்கு அனைவரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,“நான் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட காரணம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிதான். நான் நீக்கப்பட்டதற்குப் பிறகுதான் அவர் பாஜகவோடு கூட்டணி அமைத்துள்ளார். என்னுடைய நோக்கம் பாஜக தனியாக வளரவேண்டும். அப்போதுதான் பாஜக எதிர்காலத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்படும் என்ற என் நோக்கத்திற்கு எதிராக பாஜகவும் அதிமுகவோடு கூட்டணி அமைத்துள்ளது. இதை நான் எதிர்க்கவில்லை என்றாலும் எனக்கு இந்தக் கூட்டணியோடு உடன்பாடு கிடையாது. அதனால்தான் என்னுடைய பெயரில் அண்ணாமலை நற்பணி மன்றம் என்ற ஒரு அமைப்பைப் பதிவு செய்து செய்துள்ளேன். (பதிவு எண்.15/2025) 2026 ஜனவரி தைப் பொங்கலையொட்டி புதிய அரசியல் கட்சியைத் தொடங்குகிறேன். இதன் பெயரும் அறிவிக்கப்படும்.
என்னால் அரசியல் அரங்கில் இணைந்த பாஜக பொறுப்பாளர்கள் அனைவரும், தங்களின் கட்சிப் பொறுப்பிலிருந்து முதலில் விலகுங்கள். அண்ணாமலை நற்பணி மன்றம் என்ற அமைப்பில் நீங்கள் பொறுப்பேற்றுச் செயல்பட வேண்டும். யாரும் அவசரப்பட்டு கட்சியிலிருந்து விலகிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பாஜக கட்சிப் பொறுப்பிலிருந்து நீங்கள் விலகினாலும் உங்களுக்குக் கட்சி வழங்கிய மாதம் ஊதியம் உங்கள் அனைவருக்கும் நற்பணி மன்றம் மூலம் வழங்கப்படும். தமிழ்நாட்டில் ஜனவரி மாதத்தில் நம்முடைய பிரதமர் மோடிஜியும் அமித்ஷாஜியும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்கள். அந்த நிகழ்வுகளில் நான் கலந்துகொள்கிறேனா? இல்லை என்பதை இப்போதைக்குத் தெரிவிக்கமுடியாது.
தமிழ்நாட்டிற்கு வரும் அமித்ஷாஜி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் அவர்களையும் மீண்டும் அதிமுகவில் இணைக்க முயற்சிகளை எடுப்பார். அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒத்துக்கொள்ள மாட்டார். அதைப்போலவே நடிகர் விஜய் தலைமையில் இயங்கும் தமிழக வெற்றிக் கழகத்தையும் ஜனநாயக் கூட்டணியில் இணைப்பதற்கு முயற்சிகள் நடந்து வருகின்றது. தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்னும் ஒரு மாதத்தில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையன்,‘தலைவர் விஜய் அவர்களை முதல் அமைச்சராக ஏற்றுக்கொள்பவர்களைக் கூட்டணியில் இணைத்துக் கொள்வோம்’ என்று கூறியுள்ளார்.

இதனால் அதிமுகவில் நீக்கப்பட்டவர்கள் இணைத்துக்கொள்ள வாய்ப்பில்லை. மேலும், விஜய் தலைமையில் உள்ள தவெக ஜனநாயக கூட்டணியில் இணையவும் வாய்ப்பில்லை. இதனால் அதிமுக – பாஜக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறும் சூழ்நிலையில் இல்லை. இந்த நிலையில்தான் நாம் கட்சி தொடங்குகின்றோம். 2026 சட்டமன்ற தேர்தலில் நம் கட்சி போட்டியிடும். தற்போது உள்ள திமுக கூட்டணி, தேசிய ஜனநாயக் கூட்டணி (அதிமுக – பாஜக), தவெக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 4 அணிகள் போட்டியிடுகின்றன. நம்முடைய கட்சி 5ஆவது கூட்டணியை அமைத்துப் போட்டியிட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் அமமுக டிடிவி தினகரன் ஆகியோரோடு நம் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிடும். என்னால் தவெக கட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அண்ணன் செங்கோட்டையன் அவர்களோடு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். வாய்ப்பிருந்தால் விஜய் தலைமையில் உள்ள தவெகவுடன் கூட்டணி அமையவும் வாய்ப்பு உள்ளது. நம்மோடு இணைந்து பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் நம்மோடு பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் நான் துணை முதல் அமைச்சராகவும் அறிவிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
என்னுடைய தலைமையில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 5ஆவது அணி போட்டியிடும். தவெகவுடன் கூட்டணி அமைந்தால் 4ஆவது அணியில் போட்டியிடும். நம்முடைய அணி அதிமுக – பாஜக கூட்டணியை தோல்வி அடைய செய்து, எடப்பாடியின் முதல்வர் கனவைக் கலைப்பதே நம்முடைய முக்கிய நோக்கம். இதனால் திமுகதானே வெற்றிப்பெறும் கேட்பீர்கள். அதிமுக என்ற கட்சி முதலில் செயல் இழக்கவேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சி வளரமுடியும். அந்த நோக்கத்தில்தான் நம்முடைய அரசியல் கட்சியின் பயணம் தொடங்குகின்றது. என்னுடைய தொண்டராக உள்ள அனைவரும் நான் தொடங்கும் புதிய கட்சிக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று உரையை முடித்துக்கொண்டார்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழின் முதுமொழி. தைப் பிறக்கும் இந்த ஆண்டில் ஒரு புதிய கட்சி பிறக்கப்போகிறது. பாஜகவிலிருந்து விலகி அண்ணாமலை தொடங்கப் போகும் அந்தக் கட்சி அரசியல் களத்தில் நிலைத்து நிற்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.