முத்தரையர் சமூக வாக்குகள் பாஜகவுக்கு தேவை இல்லையா? – கள்ளிக்குடி ராஜேந்திரன்
திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. துணை தலைவராக பதவி வகித்து வந்தவர் கள்ளிக்குடி எம் ராஜேந்திரன். இவரை பொறுப்பில் இருந்து நீக்கி அக்கட்சி அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று கள்ளிக்குடி ராஜேந்திரன் தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது.
நான் 1994 ல் இந்து முன்னணி அமைப்பில் இணைந்து ஒன்றிய தலைவர், மாவட்ட தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்து திறம்பட பணியாற்றி வந்தேன்.
அதன் பின்னர் 2002ல் பாஜகவில் இணைந்து மூன்று முறை மணிகண்டம் ஒன்றிய தலைவராகவும், இரண்டு முறை மாவட்ட செயலாளராகவும், ஒருமுறை விவசாய அணி மாநில செயலாளராகவும் பதவி வகித்து, தற்போது இரண்டாவது முறையாக மாவட்ட துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு கட்சி வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறேன்.
மாநில விவசாய அணி செயலாளராக பதவி வகித்த போது, விவசாய அணி மாநில மாநாட்டை சிறப்பாக நடத்தி அன்று மாநாட்டில் பங்கேற்ற மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பாராட்டினை பெற்றேன்.
நான் சமீபத்தில் நான் சார்ந்த சமூக அமைப்பான வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தில் இணைந்து கடந்த ஐந்து மாதமாக பணியாற்றி வந்தேன்.
பாஜக கட்சிப் பணிகளையும் சிறப்பாக செய்து வந்தேன். இரண்டு நாட்களுக்கு முன்பு வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்ந்த முத்தரையர் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டில் சங்கம் சார்ந்து பங்கேற்றேன்.

நான் சங்கத்தில் பொறுப்பில் இருக்கிறேன் தவிர பாஜக தவிர வேறு எந்த கட்சியிலும் பொறுப்பிலும் இல்லை. பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் உள்பட பல தலைவர்கள் தாங்கள் சார்ந்த சமூக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களின் சமுதாய உணர்வோடு பெருமை பேசி இருக்கிறார்கள்.
ஆனால் என்னை மட்டும் நான் சார்ந்த சமூக பொது நிகழ்வில் கலந்து கொண்டதற்காக என்னை கட்சிப் பதவியில் இருந்து நீக்கியது சரியானதல்ல. அப்படிப் பார்த்தால் எல்லோரையும் தான் கட்சியிலிருந்து நீக்க வேண்டும். இதனை முத்தரையர் சமூகத்தை இழிவுபடுத்தும் செயலாக பார்க்கிறேன்.
தேர்தலில் முத்தரையர் சமூக வாக்குகள் பாஜகவுக்கு தேவை இல்லையா? இதை அறிவிக்க பாஜக தலைமை தயாராக உள்ளதா? எனக் கேட்க விரும்புகிறேன்.
இது தொடர்பாக தன்னிலை விளக்கம் அளிக்கும் நோக்கத்தில் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவன் விநாயகன் ஜி ஐ தொடர்பு கொண்டு பேச முயற்சித்த போது அவர் என்னுடைய விளக்கத்தை கேட்காமல் செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். கால் நூற்றாண்டுகளாக பாஜகவுக்கு உழைத்த எனக்கு கிடைத்த பரிசை எண்ணி வருந்துகிறேன்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.