ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை பதுக்கிய கருப்பு ஆடுகள் – சாட்டையை சுழற்றிய ரயில்வே எஸ்.பி !
ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை பதுக்கிய கருப்பு ஆடுகள் – சாட்டையை சுழற்றிய ரயில்வே எஸ்.பி !
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை காத்திருப்பு அறையில் பதுக்கிவைத்த இரு ரயில்வே போலீசார்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் மார்க்கமாக கர்நாடக, ஆந்திரா, கேரள மாநிலங்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகிறது. பொதுமக்களின் பயணத்தேவைக்கு இயக்கப்படும் ரயிலில், சமூக விரோத செயலில் ஈடுபடும் மர்ம நபர்கள், ரேஷன் அரிசி, வெள்ளி கட்டிகள், கஞ்சா, மது பாட்டில்கள், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தி வருவதை வாடிக்கையாக செய்து வருகின்றனர்.
இதனை தடுக்க தமிழ்நாடு ரயில்வே காவல் துறை மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் ஜோலார்பேட்டை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் 4-வது நடைமேடையில் தமிழ்நாடு ரயில்வே போலீசார் சத்துரு, மற்றும் மணிகண்டன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு கேட்பாரின்றி கிடந்த பையை எடுத்து சோதனை செய்ததில் அதில் பண்டல்களாக கட்டப்பட்டு இருந்த 9 கிலோ கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைக்காமல், அவற்றை அவர்களே வேறு இடத்தில் பதுக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து ரயில்வே எஸ்.பிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில், நடத்தப்பட்ட விசாரணையில் நடைமேடையில் கேட்பாரின்றி கிடந்த 9 கிலோ கஞ்சாவை தமிழ்நாடு ரயில்வே காவலர்கள் சந்துருவும், மணிகண்டனும் கூட்டணி அமைத்து பதுக்கியது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து, ( ஜிஆர்பி ) ரயில்வே எஸ்பி ஈஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே இன்ஸ்பெக்டர் ரத்தினகுமாரிடம் பேசினோம்.
“ பணியில் இருந்த போலீசார் சிலர் மீது பணம் மற்றும் நகைகள் அடங்கிய பையை கைப்பற்றியதாக வதந்தி பரவியது. இதுபற்றி தகவல் அறிந்த நாங்கள் ஓய்வறையில் சோதனை செய்தோம் அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்ட கஞ்சாவை மீட்டோம். அவற்றின் மதிப்பு சுமார் ₹1.5 லட்சம் இருக்கும்.
சம்மந்தப்பட்ட கான்ஸ்டபிள்கள் கஞ்சா பையை காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் கடமையைச் செய்யத் தவறியதால், காவலர்கள் எஸ்.சந்துரு, வி.மணிகண்டன், ஆகியோர் மீது ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு விதிகள் 1955-ன் கீழ் எஸ்பி உத்தரவின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். “ என்றார்.
ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களில் கைப்பற்றப்படும் போதை பொருட்களை போலீசார்களே சில நபர்களை வைத்து விற்றுவருவதாக சக காக்கிகளே புலம்பிய தாகவும்; இதன் அடிப்படையில்தான் அந்த கருப்பு ஆடுகள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
– கா. மணிகண்டன்