அங்குசம் பார்வையில் ‘நீல நிறச் சூரியன்’ திரைப்படம்
தயாரிப்பு : ஃபர்ஸ்ட் காப்பி புரொடக்ஷன்ஸ் மாலா மணியன். இயக்கம் : சம்யுக்தா மேனன். நடிகர்-நடிகைகள் : சம்யுக்தா மேனன், கஜராஜ், கீதா கைலாசம், ஹரிதா, பிரசன்னா பாலசந்திரன்,கே.வி.என்.மணிமேகலை, மசாந்த் நடராஜன், கிட்டி, வின்னர் ராமச்சந்திரன்,’செம்மலர்’ அன்னம், கெளசல்யா சரவணராஜா, விஷ்வந்த் சுரேந்திரன், சாவித்ரி, ஒளிப்பதிவு—எடிட்டிங்—இசை : ஸ்டீவ் பெஞ்சமின், இணை இயக்குனர்கள் : கெளசிக், பாஸ்கரன். பி.ஆர்.ஓ.: கே.எஸ்.கே.செல்வா.
பிறந்து ஓரளவு விபரம் தெரிந்த வயதிலிருந்தே தான் ஒரு பெண், தனக்குள் பெண் தன்மை இருப்பதாக உணர்கிறான் அரவிந்த். படித்து முடித்து ஒரு பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக வேலை கிடைத்த பின், அந்த பெண் தன்மை அவனுக்குள் இன்னும் தீவிரமாகிறது. தனக்குத் தானே பானு என்ற பெயரையும் சூட்டிக் கொள்கிறான். வீட்டில் பெற்றோருக்குத் தெரியாமல், தனியறையில் கண்ணாடி முன் அமர்ந்து, “என் பேர் பானு” என பெண் குரலில் பேச பயிற்சி எடுக்கிறான்.
பள்ளியின் பிரின்சிபாலிடம் [ கெளசல்யா சரவணராஜா }விடம் தான் ஒரு பெண், அதனால் சேலை அணிந்து பள்ளிக்கு வருகிறேன் என்றதும் பிரின்சிபாலும் மற்ற ஆசிரிய—ஆசிரியைகளும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் கரெஸ்பாண்டெண்ட் விஷ்வந்த் சுரேந்திரன் மட்டும் அரவிந்துக்கு, ஸாரி… பானுவுக்கு ஆதரவாக நிற்கிறார். உடற்பயிற்சி ஆசிரியை ஹரிதாவும் பானுவுக்கு பக்கத் துணையாக நின்று தைரியம் ஊட்டுகிறார்.
இதற்குப் பிறகு தான் அரவிந்தின் பெற்றோரான கஜராஜுக்கும் கீதா கைலாசத்திற்கும் விசயத்தின் வீரியம் புரிகிறது. அதன் பின் பானுவாக மாறிய அரவிந்த், இந்த சமூகத்தில் சந்திக்கும் அவமரியாதைகள், மனக்கிலேசங்கள் தான் இந்த ‘நீல நிறச் சூரியன்’.
சந்தோஷ் என்ற ஆணாகப் பிறந்து சம்யுக்தாவாக மாறிய தனது வாழ்க்கைக் கதையைத் தான் ‘நீல நிறச் சூரியனாக ஜொலிக்க வைத்திருக்கிறார் சம்யுக்தா மேனன். யாரிடமும் உதவி இயக்குனராகக் கூட பணிபுரியாமல், சினிமாவை நேசித்து, சுவாசித்து இந்தப் படைப்பைத் தந்திருக்கிறார் சம்யுக்தா மேனன். கேமரா கோணம், சீன் ஃபிரேம் மெச்சூரிட்டி, அனுபவ நடிகர்—நடிகைகளின் அளவான நடிப்பு, நிறைவான வசன உச்சரிப்பு, உடல் மொழி இவற்றையெல்லாம் மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் திரை மொழியில் பேசியிருக்கிறார் சம்யுக்தா மேனன்.
அரவிந்த் போன்றவர்கள் வீட்டைவிட்டு வெளியே விரட்டப்பட்டு, வெளியிலும் அவமானங்களைச் சந்தித்து கேலிக்குரியவர்களாவதை இன்றும் நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் இந்தப் படத்தில் அரவிந்தின் தகப்பனார் கஜராஜுக்கு வருத்தமும் கோபமும் இருந்தாலும் தாய் கீதா கைலாசம் அரவிந்தை கண்ணீருடன் அரவணைத்துக் கொள்வது, ‘டிரான்ஸ்ஜெண்டர்ஸு’க்கு ஒரு மாஸ் சப்போர்ட். அதிலும் பானுவாக மாறி சேலை அணிந்த பின், சமையல்கட்டில், அரவிந்தை பக்கவாட்டில் கட்டிப் பிடித்து, அவ[ர]ளது வயிற்றைத் தடவியபடி, கீதா கைலாசம் கண்ணீர் சிந்தும் சீன், செம கிளாஸ் சீன்.
இதே போல் அரவிந்தின் அக்கா உறவு முறையுள்ள செம்மலர் அன்னம், “நீ பொம்பளயா மாறி என்னடா சாதிக்கப் போற. நானும் உங்க அம்மாவும் படுறபாட்டைப் பாத்தில்ல. கல்யாணமாகி எட்டு வருசமாகியும் எனக்குப் புள்ள பொறக்கலன்னு என் மாமியாக்காரி கரிச்சுக் கொட்றா. உன்னோட மாமாவை எவளும் குத்தம் சொல்றதுல்ல” என பொங்கி வெடித்து அழும் காட்சியில் சம்யுக்தாவின் முத்திரை அழுத்தமாக பதிகிறது. இதற்கடுத்து, தன்னைப் போல பெண்ணாக மாற நினைக்கும் மாணவனுக்கு சம்யுக்தா சொல்லும் அறிவுரை, அருமையான தெளிவுரை.
படத்தில் நடித்த எல்லா கதாபாத்திரங்களுமே ஏதாவதொரு காட்சியில் கவனத்தை ஈர்க்கின்றன. அதிலும் அரவிந்துக்கு மிக ஆதரவாக இருந்து, ஆத்மார்த்தமாக உதவும் ஹரிதா டீச்சர் [ நிஜத்திலும் இவரது பெயர் ஹரிதா தான் ] கேரக்டர், அரவிந்துக்கு சேலை செலக்ஷன் பண்ணுவது, லேடீஸ் செருப்பு வாங்குவது, ரெஸ்ட்ரூம் பிரச்சனையில் ஆதரவாக நிற்பது, நாட்டியப் பள்ளி மாணவிகள் முன்பாக ஆடச் சொல்வது என பல காட்சிகளில் மிளிர்கிறார் ஹரிதா.
ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என மூன்று முக்கியப் பணிகளிலும் திறம்பட பணியாற்றியுள்ளார் ஸ்டீவ் பெஞ்சமின். படத்தின் பெரும்பாலான காட்சிகளில் அமைதியையே பின்னணி இசையாக்கிவிட்டு, ஜவுளிக்கடையில் அரவிந்த் சேலை எடுக்கும் காட்சியில் இசையைப் பதிவு செய்து அசத்திவிட்டார் ஸ்டீவ் பெஞ்சமின்.
வன்முறைக் குப்பைகள், ஆபாசக்கூத்து சினிமாக்கள் மத்தியில் இந்த ‘நீல நிறச் சூரியன்’ ஜொலிக்கிறான். இப்படத்தைத் தயாரித்த மாலா மணியனும் பிரகாசமாகத் தெரிகிறார்.
–மதுரை மாறன்