போதிமரத்தின் ஞான நிழல்கள் : விருது – நூல் வெளியீட்டு விழா !
அங்குசம் வெளியீடு சார்பில், முனைவர் ஜா.சலேத் எழுதி வெளியான “போதிமரத்தின் ஞான நிழல்கள்” நூல் வெளியீட்டு விழா, ஜன-10 அன்று திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி, பிராட்டியூர், தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழு அரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவில், சௌமா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சௌமா இராஜரத்தினம், இந்நூலை வெளியிட்டு பாராட்டுரை நிகழ்த்தினார். முதல் நூலை கவிஞர் இந்திரஜித் பெற்று கொண்டார்.
அங்குசம் வெளியீடு, காவிரிக் கவித்தமிழ் முற்றம், மற்றும் ஈகைச்சிறகுகள் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய இவ்விழாவிற்கு, தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழுவின் செயலர் அருள்தந்தை மரிய மிக்கேல் தலைமை தாங்கினார்.
ஈகைச்சிறகுகள் அறக்கட்டளையின் நிறுவனர், திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத்தின் சாசனத் தலைவர் லயன் B. முகம்மது ஷபி மற்றும் திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும் கவிஞருமான த.இந்திரஜித் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இவ்விழாவில், அங்குசம் வெளியீட்டின் தலைவர் பத்திரிகையாளர் ஜெ.டி.ஆர்., தூய வளனார் கல்லூரியின் மேனாள் தமிழாய்வுத்துறைத் தலைவர் ஞா.பெஸ்கி, தற்போதைய தமிழாய்வுத்துறை தலைவர் முனைவர் ஆ.ஜோசப் சகாயராஜ், மதுரை எனர்ஜி ஹோம் மருத்துவர் அனிதா ஜெரோம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
”போதிமரத்தின் ஞான நிழல்கள்” என்ற தலைப்பில் வெளியான இந்நூலை அறிமுகம் மற்றும் திறனாய்வு செய்து, அருவிபோல உரையாற்றினார் இளம்பேச்சாளர் தி.பிரபு. இந்த நூல் இளைய சமுதாயத்தினரிடையே விரிவாக கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
மணப்பாறையை தாயகமாகக் கொண்டு, சௌமா கல்வி கூடங்கள் நிறுவி ஏழை எளிய மாணவர்களின் கனவுகளுக்கு வாசல் தந்த பெருமைக்குரியவர்.
எழுத்தாளர்கள் பலரை சௌமா விருதுகளால் ஒளியூட்டியதன் மூலம் தமிழ் இலக்கிய வரலாற்றின் பக்கங்களில் எழுத்தாளர்களின் அரண் எனப் புகழப்படுபவர்.
ஆரவாரமின்றி, ஆடம்பரமின்றி, ஆத்மார்த்தமான தம் சேவைகளால் எண்ணற்றோர் வாழ்வில் ஒளியேற்றிவரும் போற்றுதலுக்குரியவர்.
கல்விக்கான அர்ப்பணிப்பு, மனிதநேயத்தின் மொழி, இலக்கியத்தின் ஆதரவு என முக்கூடலாகத் திகழும் மணப்பாறை சௌமா கல்விக் குழுமங்களின் நிறுவனர் மேனாள் அரிமா சங்க ஆளுநர், கல்வியாளர் சௌமா இராஜரெத்தினம் அவர்களுக்கு “போதி மரத்தின் ஞான நிழல்கள் “ என்ற விருதை காவிரி கலைத்தமிழ் முற்றத்தின் சார்பில் வழங்கி பெருமைப் படுத்தினார்கள்.
நிறைவாக பாராட்டுரை நிகழ்த்திய சௌமா.இராஜரத்தினம், “செவியுணர்வும் சுவை உணர்தல் தான். அந்த உணர்வை இந்த நூலில் 20 ஆளுமைகளின் வழியே அடையாளம் காட்டியிருக்கிறார்.” என்றார்.
முன்னதாக, காவிரி கவித்தமிழ் முற்றத்தின் செயல் இயக்குநர் லி.மெர்சி டயானா வரவேற்புரை நிகழ்த்தினார். நிறைவாக, தூயவளனார் கல்லூரியின் தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் கு.அந்தோணிராஜா நன்றியுரையாற்றினார். நிகழ்வுகளை மாணவர்கள் சே.பிரான்சிஸ் ஆண்டனி, ச.ஆசிக்டோனி, மற்றும் ஜா.மெ.ஆன்ஸ்டின் ஜோ ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
— இளங்கதிர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.