சாலைகளில் செல்லும் போது, இது போன்ற எரியும் புகையை நம்மில் பலரும் பார்த்திருப்போம். சிலர் மூக்கை பொத்திக் கொண்டிருப்பீர்கள். அத்துடன் அக்காட்சியை மறந்தும் இருப்பீர்கள். உண்மையில் அது நம்மை கொல்லும் நஞ்சு என்பதை அறிந்தால் இனி அதை மறக்கமாட்டீர்கள். உலக அளவில் மனிதர்கள் இறப்பிற்கு முதன்மை காரணியாக உயர் ரத்த அழுத்தம் குறிப்பிடப்படுகிறது. இதற்கு அடுத்ததாக காற்று மாசு குறிப்பிடப்படுகிறது. அதாவது மாரடைப்பு, புற்றுநோய், நீரிழிவு, சாலை விபத்துகள் முதலியவற்றை காட்டிலும் அதிகம் பேர் இறப்பதற்கு காரணமாக இருப்பது காற்று மாசுபாடு தான்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பெறப்படும் குப்பைகள் முறையாக மேலாண்மை செய்யப்படுவதில்லை. அதிலும் குறிப்பாக மாநகரத்தைச் சுற்றியுள்ள ஊராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மிகவும் மோசமாக கையாளப்படுகின்றன.
மாநகரப் பகுதிகளில் தூய்மை பணியாளர்களால் வீட்டிற்க்கே வந்து குப்பைகள் பெற்றுக் கொள்ளப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு, மாவட்ட அளவிலான குப்பைக் கிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், ஊரக பகுதிகளில் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டு, அப்படியே எரியூட்டப்படுகிறது. சாலைகள், குடியிருப்புகள், பள்ளிகள் போன்றவற்றின் அருகிலேயே குப்பைகள் எரிக்கப்படுகின்றன.
இவ்வாறு எரிக்கப்படும் குப்பைகளில் பெரும்பான்மையும் நாம் வீட்டில் பயன்படுத்தும் பல்வேறு நெகிழி பைகள், புட்டிகள், கண்ணாடி பாட்டில்கள், வீட்டு மருத்துவ கழிவுகள் போன்றவையே மிகுதி. எரித்தால் முற்றிலும் கேடு விளைவிக்கக் கூடிய இப்பொருள்களை எரியூட்டுவதால் எழும் புகையால் காற்று மிகவும் மாசுபடுகிறது. அதை சுவாசிக்கும் உயிரினங்களுக்கு உடல் நலக்கேடுகள் மெல்ல மெல்ல வந்து கொல்கின்றன. இவ்வாறு எரிக்கப்படும் குப்பைகளால் நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா, மாரடைப்பு, இதய நோய்கள் போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன.
இவ்வாறு குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் உடல் நல சிக்கல்களை Science Direct எனும் இணையதளத்தில் உள்ள ஓர் ஆய்வுக் கட்டுரை (Gauri Pathak, Mark Nichter, Anita Hardon, Eileen Moyer, Aarti Latkar, Joseph Simbaya, Diana Pakasi, Efenita Taqueban, Jessica Love, Plastic pollution and the open burning of plastic wastes) பட்டியலிட்டுள்ளது. அப்பட்டியலின் தமிழ் மொழிபெயர்ப்பு பின்வருமாறு.
பாலிஎத்திலீன் டெரெப்தலேட் (PET அல்லது PETE) :
குளிர்பான பாட்டில்கள், அழகுசாதனப் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் இவற்றின் பொதுவான வடிவங்கள். இவற்றை எரிக்கும்போது மீத்தேன், ஈத்தேன், ஈத்தைன், ஃபார்மால்டிஹைடு, கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, பாலிகுளோரினேட்டட் அரோமாடிக் ஹைட்ரோகார்பன்கள் ஆகிய நச்சுக்கள் வெளியாகின்றன். இதனால், மிதமான சுவாசப் பாதை எரிச்சல், புற்றுநோய் உண்டாக்கும் மற்றும் மரபணு மாற்றம் ஏற்படுத்தும் விளைவுகள் உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
ஹை-டென்சிட்டி பாலிஎத்திலீன் (HDPE)
(ஷாம்பூ பாட்டில்கள், மளிகைப் பைகள், பூந்தொட்டிகள், தானியப் பெட்டி உட்புற உறைகள்)
இவற்றை எரிக்கும்போது, ஓலேஃபின்ஸ், பாரஃபின், ஆல்டிஹைடுகள், மற்றும் லேசான ஹைட்ரோகார்பன்கள், கார்பன் மோனாக்சைடு, பாலிகுளோரினேட்டட் அரோமாடிக் ஹைட்ரோகார்பன்கள் ஆகிய நச்சுகள் காற்றில் கலக்கின்றன.
இதனால், மிதமான சுவாசப் பாதை எரிச்சல், புற்றுநோய் உண்டாக்கும் மற்றும் மரபணு மாற்றம் ஏற்படுத்தும் விளைவுகள் உள்ளிட்ட உடல் உபாதைகளை ஏற்படுத்துகின்றன.
பாலிவினைல் குளோரைடு (PVC அல்லது வினல்)
(வடிகால் குழாய்கள், பிளிஸ்டர் பேக்குகள், பொம்மைகள், பாட்டில்கள் மற்றும் ஜாடிகள்)
இவற்றை எரிக்கும்போது, கார்பன் மோனாக்சைடு, டையாக்சின்ஸ், குளோரினேட்டட் ஃபூரான்ஸ், ஹைட்ரஜன் குளோரைடு, பாலிகுளோரினேட்டட் அரோமாடிக் ஹைட்ரோகார்பன்கள் ஆகிய நச்சுகள் வெளியாகின்றன.
இதனால், புற்றுநோய், பிறப்புக் குறைபாடுகள், சுவாசப் பாதை கோளாறுகள், மற்றும் பிற உடல்நல சிக்கல்கள் ஏற்படுகின்றன.
லோ-டென்சிட்டி பாலிஎத்திலீன் (LDPE)
(பல்வேறு பானங்கள் மற்றும் உணவுப் பொருட்கள், உறைந்த உணவு, உறைந்த ஜூஸ், மற்றும் பால் பேக்கேஜிங்)
இவற்றை எரிக்கும்போது, ஓலேஃபின்ஸ், பாரஃபின், ஆல்டிஹைடுகள், மற்றும் லேசான ஹைட்ரோகார்பன்கள், கார்பன் மோனாக்சைடு, பாலிகுளோரினேட்டட் அரோமாடிக் ஹைட்ரோகார்பன்கள் ஆகிய நச்சுப்பொருட்கள் வெளிப்படுகின்றன.
இதன் காரணமாக, மிதமான சுவாசப் பாதை எரிச்சல், புற்றுநோய் உண்டாக்கும் மற்றும் மரபணு மாற்றம் ஏற்படுத்தும் விளைவுகள் உள்ளிட்ட உடல் நலன் சார்ந்த சிக்கல்கள் ஏற்படுகின்றன.
பாலிப்ரோப்பிலீன் (PP)
(மருந்துகள், தயிர், உணவுப் பொருட்கள், பிற உணவு மற்றும் பானங்கள் பேக்கேஜிங்)
இவற்றை எரிக்கும்போது, நாப்தலீன், மெத்தில்நாப்தலீன், பைஃபினைல், ஃப்ளூரேன், ஃபீனாந்த்ரீன், மெத்தில்ஃபீனாந்த்ரீன், ஆந்த்ரசீன், பைரீன், மற்றும் பென்சோ[a]ஃப்ளூரேன், பாலிகுளோரினேட்டட் அரோமாடிக் ஹைட்ரோகார்பன்கள் ஆகிய நச்சுபொருட்கள் காற்றில் கலக்கின்றன.
இவை, மிதமான சுவாசப் பாதை எரிச்சல், புற்றுநோய் உண்டாக்கும் மற்றும் மரபணு மாற்றம் ஏற்படுத்தும் விளைவுகள் ஆகிய உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன.
பாலிஸ்டைரீன் (PS அல்லது ஸ்டைரோஃபோன்)
(ஃபோம் கோப்பைகள், இறைச்சி தட்டுகள், முட்டை அட்டைகள், பிளாஸ்டிக் முட்கரண்டி மற்றும் கரண்டி, பேக்கேஜிங் ஃபில்லர்)
இவற்றை எரிக்கும்போது, ஸ்டைரீன் வாயு, அக்ரோலின், ஹைட்ரஜன் சயனைடு, பாலிகுளோரினேட்டட் அரோமாடிக் ஹைட்ரோகார்பன்கள் ஆகிய நச்சுப்பொருட்கள் வெளியாகின்றன.
புற்றுநோய், நரம்பு நச்சுத்தன்மை, கண் மற்றும் சளி சவ்வு சேதம், உணர்ச்சி இழப்பு, மற்றும் அதிக அளவுகளில் மரணத்தை தோற்றுவிக்கும் காரணியாகவும் அமைந்து விடுகிறது.
பாலிஉரெத்தேன் (PU)
(திரைகள், மரத்திற்கு பூச்சு, சீலண்டுகள், பசைகள்) இவற்றை எரிக்கும்போது, கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் சயனைடு, பாஸ்ஜீன் ஆகிய நச்சுக்களை காற்றில் கலக்கச் செய்கிறது. இது, அதிக அளவு மரணத்தை விளைவிக்கும் அபாயத்தைக் கொண்டதாக அமைந்திருக்கிறது.
இக்குப்பைகளை எரியூட்டும் தூய்மைப் பணியாளர்களிடம் இதைப் பற்றி கேட்டால், “குப்பைய அள்ளிப் போடற வண்டி ரிப்பேர் சார்” என்று கூறுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவ்வாறு குப்பைகளை முறை கேடாக எரித்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளாக ஒரு டிராக்டரை சரி செய்ய முடியவில்லையா அல்லது உள்ளாட்சியிடம் நிதி இல்லையா.
இது ஒப்பந்தக்காரர்களால் கூறப்படும் பொய்க் காரணமே, இதையே தூய்மைப் பணியாளர்களிடமும் சொல்லச் சொல்கின்றனர். இதில் அவர்களை குற்றம் கூறாமல் உள்ளாட்சி அமைப்பு மற்றும் அரசு மீதே நாம் கேள்வி எழுப்ப வேண்டும். திடக்கழிவு மேலாண்மை சட்டம் 2016, கழிவுகளை உருவாக்கும் எவரும் அதை எரிப்பதையும் நீர்நிலைகளில் கொட்டுவதையும் தடை செய்துள்ளது.
இந்திய காற்றுத் தர நிர்ணய அளவுகளைப் பொருத்தவரைக்கும் ஒரு ஆண்டு சராசரி நுண்துகளின் அளவு 40µg/m³ வரை இருக்கலாம். இது உலக சுகாதர நிறுவனம் நிர்ணயித்துள்ள அளவை விட எட்டு மடங்கு அதிகம். (பூவுலகு, ஜூலை 2024) இந்த அளவைவிட மோசமான அளவில் தான் இந்தியாவில் உள்ள நகரங்களின் நிலைமை உள்ளது.
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் 2023, 2024,2025 ஆண்டுகளில் காற்று தரநிர்ணய அளவுகளின் சராசரி முறையே 74,78, 83 என்ற அளவில் உள்ளது. (www.aqi.in/dashboard/india/tamil-nadu/trichinopoly) அதாவது, கடந்த ஐந்து ஆண்டுகளில் காற்றின் தரம் மூன்று சதவீதம் மோசமடைந்துள்ளதை இது சுட்டிக்காட்டுகிறது. காற்றுமாசினால் ஏற்படும் உயிரிழப்புகளில் முதியோர்களும் குழந்தைகளுமே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். அதாவது, காற்று மாசினால் ஏற்படும் 81 லட்சம் இறப்புகளில் 65 லட்சம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 7 லட்சம் பேர் குழந்தைகள். அதிலும் 6 லட்சம் குழந்தைகள் பிறந்து 27 நாட்களுக்குள்ளான பச்சிளங் குழந்தைகள். (பூவுலகு, ஜூலை 2024)
மாசடைந்த குடிநீரைக் குடித்தும் மாசுபட்ட காற்றை சுவாசித்தும் வாழ்வின் அன்றாடங்களுக்காக உழைத்தே சாக நமக்கு உரிமையிருக்கிறது. காற்று மாசினை தீவிரப்படுத்தி, பிறந்து நிலத்தையே தொடாத பிஞ்சுக்குழந்தைகளின் மூச்சை நிறுத்த யாருக்கு உரிமையிருக்கிறது.
அப்படி பார்த்தால், காற்று மாசுக்கு காரணமான பெருநிறுவங்களும் அதை நுகரும் நம்மைப் போன்ற தனிநபர்களும் இதைக் கண்டுக் கொள்ளாத அரசும் கட்டுப்படுத்தாத மாசுக்கட்டுப்பாட்டு அமைப்புகளும் என அனைவரும் அக்குழந்தைகளின் இறப்பிற்கு பொறுப்பு தானே. வளமான புவியை அடுத்த நம் மகள்களுக்கும் பேரன்களுக்கும் விட்டுச் செல்லும் பொறுப்பும் நம்முடையது தானே.
ஏற்கனவே காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து விட்ட நிலையில், அதை மேம்படுத்தக் கூடிய எந்த ஒரு பயன்தரக்கூடிய நடவடிக்கைகளையும் ஒன்றிய, மாநில அரசுகள் எடுக்கவில்லை என்பதே உண்மை. மாறாக, காற்றின் தரத்தை மோசமாக்கும் செயல்களே அதிகரிக்கின்றன. இதைத் தடுக்க வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளும் வேடிக்கை பார்க்கின்றன. காற்றே மாசுபடுத்தும் பல செயல்களில் இது போன்ற குப்பைகளை எரியூட்டலும் ஒன்று.
தமிழ்நாடு அரசு திடக்கழிவு மேலாண்மை விதிகளின் அடிப்படையில் தனிநபரோ, அமைப்புகளோ குப்பைகளை அனுமதியின்றி எரிப்பது சட்ட விரோதம். இப்படி சட்டத்திற்கு புறம்பான செயலை பொது வெளியில் வெளிப்படையாக செய்கின்றனர். நம்மையும் நம் குழந்தைகளையும் காக்க குப்பைகளை எரிப்பதை தடுக்க வேண்டும்.
இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள இனிய சூழலில் வாழ்வதற்கான உரிமை (21) மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அரசின் கடமை(48A) ஆகியவற்றின் அடிப்படையில் இதற்கு எதிரான குரலாக நாம் ஒலிக்க வேண்டும். இதை தடுக்காமல் இப்படியே தொடர்ந்தால் காற்று மாசுபாடு இன்னும் மோசமாகும்.
நம் நுரையீரல் செயல்திறன் குறைந்து, வாழ்நாளும் குறையும். நாளை டெல்லி போல் திருச்சியும் மூச்சு விட சிரமப்பட்டு சாக நேரிடலாம் என்பதே எதிர்காலம்.
கட்டுரையாளர் –
மோகன் பொன்னையா








Comments are closed, but trackbacks and pingbacks are open.