அப்படி நடக்கவே நடக்காது என்று உங்களால் உறுதியாக கூற முடியுமா ?
அப்படி நடக்கவே நடக்காது என்று உங்களால் உறுதியாக கூற முடியுமா ?
செயின் பறிப்பு, திருட்டு, மற்றும் கொள்ளை / திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் கைகளை உடைத்து, அவர்கள் காவல் நிலைய பாத்ரூமில் வழுக்கி விழுந்தார்கள் என்று காவல் துறை புகைப்படங்களை வெளியிடுவது சமீப காலமாக வழக்கமாகி வருகிறது.
சிசிடிவியில், சங்கிலிப் பறிப்பு மற்றும் ரவுடித்தனங்களை பார்க்கையில், நமக்கு அடக்க முடியாத கோபம் வருவது உண்மையே. ஆனால், இந்தியாவை ஜனநாயக நாடாக பார்ப்பவர்கள், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளின் மீது, நம்பிக்கை கொண்டவர்கள், இவ்வாறு கை கால்களை காவல் துறையினர் உடைப்பதை கண்டிக்கவே வேண்டும்.
வெளிப்படையாக பார்ப்பதற்கு, இவனுங்களுக்கு இப்படித்தான் தண்டனை கொடுக்க வேண்டும் என்று தோன்றினாலும், நமது நாட்டில் சட்டத்தின் ஆட்சி உள்ளது என்பதை மறக்கக் கூடாது.
இதை தொடர்ந்து நாம் ஊக்குவித்துக் கொண்டிருந்தோம் என்றால், நாளை நமக்கும் இது நடக்கலாம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
தஞ்சையில், ஒருவர் பீப் சூப் குடிப்பதை முகநூலில் போட்டதற்காக நால்வர் சேர்ந்து அவரை தாக்கினர். தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டதோடு, தாக்கப்பட்டவரும் கைது செய்யப்பட்டார். அவர் தனது முகநூலில், பீப் சூப் போன்ற சுவையான உணவு இல்லை என்று போட்டார். இது எப்படி இரு பிரிவினருக்கு இடையே வன்முறையை தூண்டுவதாக அமையும் ?
இதையடுத்து, எழிலன் என்பவர், பீப் விருந்து வைக்கிறோம். காவிகளுக்கு சிறப்பு இடம் என்று ஒரு போஸ்ட் போட்டார். அவரும் கைது.
இரு நாட்களுக்கு முன்னர், NIA அமைப்பு, முத்துப்பேட்டையில் இஸ்லாமியர்களை தொடர்ந்து கைது செய்து வருகிறது. ஜமாத்திலிருந்து இதை கேள்வி கேட்க ஆளில்லையா என்று வாட்ஸப்பில் செய்தி அனுப்பினார். அவரும் இரு பிரிவினருக்கு இடையே வன்முறையை தூண்டுவதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை குற்றம் சாட்டப்பட்டவர்களின் கைகளை உடைப்பதை, மகிழ்ச்சியோடு ஆதரிப்பவர்கள், நமக்கு இது ஒரு நாளும் நேராது என்ற நம்பிக்கையிலேயே இதை ஆதரிக்கிறார்கள். என்றாவது ஒரு நாள், ஒரு போக்குவரத்து விதியை மீறியதற்காக, நீங்கள், காவல் துறையினரோடு சிறு வாக்குவாதத்தில் ஈடுபட்டால், செவிட்டில் அறை விழுகையில் உங்களுக்கு அதன் வலி தெரியும்.
இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை, கைது செய்வதோடு, அவர்கள் மீதான வழக்கின் புலனாய்வை, விரைவாக நடத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதே சரியான நடவடிக்கை. வன்முறையில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தண்டனை கிடைத்தால், 10 வருடம் சிறைவாசம். சட்டபூர்வமாக நடக்க வேண்டிய ஒரு அரசு, இதைத்தான் செய்ய வேண்டும்.
இது போக, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில், தொடர்ந்து குற்றத்தில் ஈடுபடுபவர்களை, அந்த மாவட்டத்திலேயே நுழைய விடாமல் செய்வதற்கும் சட்டத்தில் இடமிருக்கிறது. ஆனால் அந்த நடைமுறைகளை பின்பற்றாமல், இவ்வாறு கை கால்களை உடைப்பது, தமிழகம் ஒரு போலீஸ் ஸ்டேட்டாக மாறுவதற்கே வகை செய்யும்.
இவர்களை ரிமாண்ட் செய்யும், மேஜிஸ்ட்ரேட்டுகள் கூட இதை கண்டுகொள்வதில்லை என்பதுதான் இதில் அடங்கியிருக்கும் மாபெரும் ஆபத்து.
இன்றும் நாம் இதை ஆதரித்தால் நாளை அரசையோ, முதல்வரையோ, பிரதமரையோ விமர்சித்து எழுதுபவர்கள் கூட இதே நிலையை சந்திக்க நேரிடும்.
அப்படி நடக்கவே நடக்காது என்று உங்களால் உறுதியாக கூற முடியுமா ?
– சவுக்கு சங்கர்