ராஜீவ்காந்தி கொலையும்… கேப்டன் பிரபாகரனும்…
’புரட்சிக் கலைஞர்’ விஜயகாந்தின் 100—ஆவது படம் ‘கேப்டன் பிரபாகரன்’. 34 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1991 ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியான இப்படம் சூப்பர்ஹிட்டாக ஓடி சாதனை படைத்தது. திரைப்படக் கல்லூரி மாணவர் ஆர்.கே..செல்வமணி இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் வசூலில் சக்கைப்போடு போட்ட அந்த ‘கேப்டன் பிரபாகரன்’ 34 ஆண்டுகள் கழித்து, வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு மீண்டும் வருகிறார்.
4கே டிஜிட்டல் தரத்துடன் கேப்டன் பிரபாகரனின் ரீ ரீலீஸ் உரிமையை வாங்கியுள்ள ’ஸ்பாரோ சினிமாஸ்’ கார்த்திக் வெங்கடேசன் 500 தியேட்டர்களில் வெளியிடும் அதிசயத்தை நிகழ்த்தப் போவதால், கோலிவுட்டே ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளது. இதில் மேலும் ஒரு ஆச்சர்யமாக புதுப்பட ரிலீஸுக்கு இணையாக ஆடியோ & டிரெய்லர் வெளியீட்டு விழாவையும் கடந்த 08—ஆம் தேதி அமர்க்களமாக நடத்தினார் கார்த்திக் வெங்கடேசன்.

சென்னை கமலா தியேட்டரில் நடந்த இந்த விழாவில் படத்தின் இயக்குனரும் தற்போது ஃபெப்சியின் தலைவருமாக இருக்கும் ஆர்.கே.செல்வமணி, இப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான மன்சூரலிகான், “ஆட்டமா தேரோட்டமா” ரம்யா கிருஷ்ணன், வசனகர்த்தா லியாகத் அலிகான் உட்பட் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
விழாவின் சிறப்பு விருந்தினர்களாக டைரக்டர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார், ஏஆர்முருகதாஸ், விக்ரமன், பேரரசு, எழில், லிங்குசாமி, தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, டி.சிவா, லலித்குமார், தனஞ்செயன், நடிகர்கள் ரவிமரியா சிங்கம்புலி, இளவரசு, உதயா ஆகியோரும் முக்கிய விருந்தினராக விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களில் ஓரிருவரைத் தவிர மற்ற அனைவருமே விஜயகாந்தை வைத்து படம் தயாரித்தவர்கள், டைரக்ட் பண்ணியவர்கள் என்பது கூடுதல் சிறப்பு.

நிகழ்ச்சியில் பேசியவர்கள்…
எஸ்.ஏ.சி., “மரியாதை, நன்றி என்றால் அது விஜயகாந்த் தான். எனது மகன் விஜய்க்கு சினிமாவில் அடையாளம் கொடுத்து நன்றிக்கு சாட்சியாக இருப்பது விஜயகாந்த் தான். விஜியை வைத்து பதினெட்டு படங்களை நான் டைரக்ட் பண்ணியிருப்பது பெருமைக்குரியது. இப்போது கேப்டன் பிரபாகரன் ரீ ரிலீசுக்குப் பிறகு ஆர்.கே.செல்வமணியைத் தேடி பல தயாரிப்பாளர்கள் நிச்சயம் வருவார்கள், புதுப்படம் தயாரிக்க”.
டி.சிவா, “அப்போது இந்தியில் வெளியான ‘ஷோலே’ தான் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டப் படம். அந்தப் படத்தின் பத்து சதவீத பட்ஜெட்டில் இந்தப் படத்தை எடுத்துக் கொடுத்து பிரமிக்க வைத்தார் டைரக்டர் ஆர்.கே.செல்வமணி. இதற்கு இப்ராஹிம் ராவுத்தரும் விஜயகாந்தும் தான் காரணம்”
கலைப்புலி தாணு, “நம் காலத்தில் நம் கண்முன்னே வாழ்ந்த எட்டாவது வள்ளல் விஜயகாந்த் தான். கேப்டன் என்ற பட்டத்திற்கு மிகவும் பொருத்தமானவர்”.

ஆர்.வி.உதயகுமார், “இந்த மேடையில் இருக்கும் எல்லோருமே கேப்டனுக்கு கடமைப்பட்டவர்கள், நன்றியுடையவர்கள். திரைப்படக் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளி ஏற்றியவர். புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் என விஜயகாந்த் கொடுத்த இரண்டு வாய்ப்புகளையும் அற்புதமாக பயன்படுத்தி ராவுத்தர் பிலிம்ஸின் பெயரை உச்சத்திற்கு கொண்டு சென்றவர் ஆர்.கே.செல்வமணி”.
இயக்குனர் விக்ரமன், “1991-ல் இந்தப் படம் ரிலீசாகி 25 நாட்களில் ராஜீவ்காந்தி தமிழ்நாட்டில் கொலை செய்யப்பட்டார். விஜயகாந்த் ஈழத்தமிழர்களின் தீவிர ஆதரவாளர் என்பதால் படம் பெரிய சரிவை சந்திக்கும் என நம்பினார்கள். ஆனால் படமோ பம்பர்ஹிட்டாகி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது”.
விஜயபிரபாகரன், “எனது அப்பாவும் ராவுத்தர் வாப்பாவும் எந்தளவுக்கு உயிர் நண்பர்களாக இருந்தார்கள் என்பது எனக்கு ஓரளவு தெரியும். அப்படிப்பட்ட நண்பர்களின் படம் மீண்டும் ரிலீஸ் ஆவது பெருமிதமாக உள்ளது. இனிமேல் கேப்டனின் பிறந்த நாளன்று அவரது ஹிட் படங்கள் ரீ ரிலீசாகும்”.
ஆர்.கே.செல்வமணி, “எனது பெற்றோருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பவர்கள் கேப்டன் விஜயகாந்தும் இப்ராஹிம் ராவுத்தரும் தான். இந்த இருவரால் தான் நான் இன்று இந்த மேடை வரை வந்துள்ளேன். நூறு ஜென்மத்திற்கு சேர வேண்டிய புண்ணியத்தை தனது வாரிசுகளுக்காக சேர்த்து வைத்துவிட்டுப் போயிருக்கும் கேப்டனின் புகழ் இன்னும் நூறாண்டுகள் கடந்தும் நிலைத்து நிற்கும்”.
— மதுரை மாறன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.