உயிரோடு இருந்த நபரை இறந்ததாக காட்டி சொத்தை அபகரிக்க முயற்சி ! தேனி திமுக பிரமுகர் மீது பதிவான வழக்கு !
உயிரோடு இருந்த நபரை இறந்ததாக பொய்யாக கணக்கு காட்டி நீதிமன்றத்தை ஏமாற்றிதாக திமுக பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கும் விவகாரம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா, தேவதானப்பட்டி காந்தி மைதானம் வீதி பகுதியில் வசித்து வருபவர் திமுக பிரதிநிதி அருணா சேகர். திமுக தேனி மாவட்ட முன்னாள் பொருளாளராக பதவி வகித்தவர்.
இவர் தனது சித்தப்பா கரியம்பிள்ளை என்பவரது மகன் ராஜேந்திரன் என்பவரின் இரண்டாவது மனைவி காமேஷ்வரி என்பவரது பெயரில் உள்ள தேவதானப்பட்டி பிட் 1 கிராமம் புல எண் 1888 / A ல் கட்டுப்பட்ட 2 .1/4 செண்ட் அளவிலான இடம் இருக்கிறது. காமேஷ்வரி என்பவருக்கு வாரிசு யாரும் இல்லாத நிலையில், மேற்படி சொத்தை அபகரிக்கும் நோக்கில் அருணாசேகர் கூட்டு சதி செய்து, காமேஷ்வரி 14.1.1996 ல் இறந்ததாகவும்; அவரது கணவர் ராஜேந்திரன் 21.12.1996 ல் இறந்ததாகவும் காரணம் காட்டி நீதிமன்றத்தை ஏமாற்றி வந்தார்.

இதற்கிடையில், காமேஷ்வரி என்பவர் தேவதானப்பட்டி கிராமம் நாடார் தெரு பகுதியில் வசித்து வரும் ராஜமலை நாடார் மகன் சக்திவேல் என்பவருக்கு சொத்தின் பவர் ஏஜென்ட், (பெரியகுளம் இணை 2 சார்பதிவாளர் அலுவலகம்,பொது அதிகார பத்திரம் ஆவண எண் 74/1998 ன் கீழ் ) செண்பகம் பிள்ளை மற்றும் காமேஷ்வரி ஆகியோர் வத்தலக்குண்டு சார்பதிவாளர் அலுவலகம் ஆவண எண் 1491 /1998 ன் கீழ் கிரையம் செய்து கொடுத்துள்ளனர். சொத்தினை கிரையம் செய்து கொடுத்த சொத்தின் உரிமையாளர் காமேஷ்வரி கடந்த 9.6.2012ல் தான் இறந்திருக்கிறார் என்ற உண்மையும் தெரிய வந்திருக்கிறது.
இந்நிலையில் காமேஷ்வரி கடந்த 14.1. 1996 ல் இறந்து விட்டதாக பொய்யான ஆவண உற்பத்தி செய்தும், சொத்திற்கு சம்மந்தமில்லாத காமேஷ்வரியின் மாமியார் தாயம்மாள் என்பவரை வைத்து சொத்து விபரம் குறிப்பிடாமல் தேவதானப்பட்டி பகுதியைச் சார்ந்த ராம சுப்பிரமணியன் என்பவர் மூலம் போலி உயில் சாசனம் மேற்கொண்டு, அவற்றை பெரியகுளம் பகுதியில் தட்டச்சு செய்து பதிவில்லா உயில் ஆவணத்தை உற்பத்தி செய்து, நீதிமன்றத்தில் பொய்யான ஆவணங்களை தாக்கல் செய்தும் மேற்கொண்ட சொத்தை அபகரிக்க முற்பட்டு வரும் திமுக பிரமுகர் அருணா சேகர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சக்திவேல் என்பவரது மகன் கார்த்திகைராஜா என்பவர் தேவதானப்பட்டி காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார் .
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அந்தப் புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் திமுக பிரமுகர் சேகர் என்ற அருணாசேகர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர் .
— ஜெய்ஸ்ரீராம்.