காதல் திருமணத்தை மிரட்டும் சாதி அரசியல்வாதிகள் ! சாதியா ? பெண் பாசமா ?
”உன் மவன் என்னைக்கு ஊர்ல கால் எடுத்து வைக்கிறானோ அன்னைக்கு விஸ்வரூபம்தான் ஆகும். அந்த ஆளு ஒன்றிய செயலாளரா இருக்கான். பின் யோசனை இல்லாம **யாட்சி பொண்ண தூக்குனான் பாரு. அது வந்து அவனுக்கு பாடமா இருக்கும். வண்டியிலேயே பசங்க தூக்கிறானுங்களா, இல்லையானு மட்டும் பாரு. பைக்ல தூக்குவானுங்களோ? என்பீல்டுல தூக்குவானுங்களோ? தெரியாது. சந்திக்க நீங்க தயாரா இருங்க. ”
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தை சேர்ந்த சுப்ரமணியன் என்பவருக்கு, அதே ஊரைச் சேர்ந்த ”ராயல்” ராமசாமி என்பவர் விடுத்த கொலைமிரட்டல் இது.
வாலிகண்டபுரத்தை சேர்ந்த ராஜ்கிஷோர் என்வரின் தந்தை தான் கொலைமிரட்டலுக்கு ஆளான சுப்ரமணியன். அதே ஊரைச்சேர்ந்த அதிமுக ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரனின் மகளான கிருபா என்பவரை காதலித்து கரம்பிடித்த “குற்றத்துக்காக”த்தான் இந்த கொலை மிரட்டல்.

“ஏண்டா, எவ்வளவு தைரியம் இருந்தா ஊருக்குள்ள வருவ? இது எங்க ஊருடா? என் பொண்ணு எங்ககிட்ட ஒப்படைக்கலானா, நீங்க யாரும் உசுரோடயே இருக்க முடியாதுனு சொல்லி, கும்பலா வந்து தாக்கினாங்க. ஜூலை-09 ஆம் தேதி காலையில நடந்த சம்பவம். அவங்க அடிச்சதுல, தலையில ரத்தம் கொட்டுச்சு. நான் வீட்டுக்குள்ள போயி கதவ சாத்திக்கிட்டேன். இல்லைன்னா, என்ன ஏதாச்சும் பன்னியிருப்பாங்க. 100-க்கு போன் அடிச்சு ரெண்டு மணி நேரமா போலீசே வரலை. அப்புறம் 108 வந்த பிறகுதான் பெரம்பலூர் ஜி.எச். வந்தேன். இங்க வந்து மூனு நாளாச்சு. இன்னும் எஃப்.ஐ.ஆர். போடல. என்ன ஏதுன்னு விசாரிக்கலை.” என்கிறார், சுப்ரமணியன்.
முழுமையான வீடியோ
காதல் திருமணத்தை மிரட்டும் சாதி அரசியல்வாதிகள் ! சாதியா ? பெண் பாசமா ? அங்குசம் ஆடுகளம் !
என்னதான், பிரச்சினை? ராஜ்கிஷோரும், கிருபா-வும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். ஆனால், வெவ்வேறு சாதியினர். இருவருமே உயர்த்தப்பட்ட சாதிப்பிரிவுக்குள்ளாக வருபவர்கள்தான். வாலிகண்டபுரம் கிருபா சார்ந்திருக்கும் சாதியினர் அதிகம் வசிக்கும் பகுதி. ராஜ்கிஷோர் சாதியினர் விரல்விட்டு எண்ணும் அளவிலான குடும்பத்தினர்களே வசிக்கிறார்கள். இங்கே சாதியும், கிருபாவின் தந்தை ரவிச்சந்திரனின் கட்சிப் பதவியும் செல்வாக்கும்தான் இவர்களது காதலுக்கு தடையாக இருந்திருக்கிறது.

இருவரும் காதலிக்கும் விவரம் கிருபா குடும்பத்தினருக்கு தெரியவர, அவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். “அவனைத்தான் கல்யாணம் பன்னிப்பேன்னு அடம்பிடிச்சா, சோத்துல விஷம் வச்சிருவேனு அம்மா மிரட்டினாங்க. நீ அவனோட போயிப்பாரு, அப்புறம் என்ன நடக்குதுன்னு தெரியும்னு அப்பா மிரட்டினாரு. இவங்க நம்ம காதல சேர்த்து வைக்க மாட்டாங்கனு தெரிஞ்சுதான், என் நண்பர்கள் உதவியோட ஜூன் – 14 ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறினேன். நண்பர்களின் உதவியோட, ஜூன்-16 அன்னைக்கு கடலூர் திருவந்திபுரம் அருள்மிகு தேவநாத சுவாமி திருக்கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். அதற்கு அடுத்த நாளான ஜூன்-17 அன்று கடலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் எங்கள் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்தோம்.
வீடியோ லிங்
காதல் திருமணத்தை மிரட்டும் சாதி அரசியல்வாதிகள் ! சாதியா ? பெண் பாசமா ? அங்குசம் ஆடுகளம் !
அடுத்து, சென்னையில் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளிப்பதற்காக கிளம்ப தயாரானோம். அப்போதுதான், எங்களுக்கு அடைக்கலம் கொடுத்த சூரஜ் என்பவருக்கு மங்களமேடு இன்ஸ்பெக்டர் போன் பன்னி பொண்ண காணோம்னு எங்க வீட்ல கொடுத்த கம்ப்ளையின்ட்ல எஃப்.ஐ.ஆர். போட்டுட்டோம். அவங்கள ஸ்டேஷன் வரச்சொல்லுங்கனு பேசியிருக்காரு. இதுக்குமேல தாமதிச்சா ஏதாவது நடக்க வாய்ப்பிருக்குனுதான், உடனடியா சென்னை போறத கைவிட்டு விழுப்புரம் எஸ்.பி. கிட்ட தஞ்சமடைந்தோம். அவரு காணை போலீஸ் நிலையத்துக்கு கம்ப்ளயிண்ட்ட பார்வர்டு செஞ்சாரு.” என்கிறார், கிருபா.

“கிருபா-வ காணோம்னு மங்களமேடு போலீஸ்ல அவங்க பெற்றோர் கொடுத்த புகார் தொடர்பா விசாரிக்கனும்னு ஜூன்-16 ஆம் தேதி ஸ்டேஷன் வர சொன்னாங்க. நானும் போனேன். எனக்கு எதுவுமே தெரியாது. அவன் அந்த பொண்ண கூட்டிட்டு போனதுல எனக்கே விருப்பம் இல்லை. அவன் போன சுவிட்ச் ஆப் செஞ்சிட்டான். என்னை தொடர்புகொண்டால், உடனே தகவல் சொல்றேன்னு பதில் சொல்லிட்டு வந்தேன். மறுநாள், சாயந்திரம் பொண்ணு வீட்டு தரப்பில இருந்து பாலுங்கிறவரு பேசினாரு. காணை போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து பேசுனாங்க. ரெண்டு பேரும் ரிஜிஸ்டர் மேரேஜ் பன்னிகிட்டாங்களாம். ஸ்டேஷனுக்கு வர சொல்லியிருக்காங்க. கும்பல சேர்க்காத. ஒரு நாலைஞ்சு பேரு வாங்க. நேர்ல பேசிப்போம்னு சொன்னாரு.

அத நம்பி, நாங்களும் ஜூன்-18 அன்னைக்கு கானை ஸ்டேஷனுக்கு போனேன். அங்க எங்களுக்கு முன்னாடி அம்பது பேரோட ரவிச்சந்திரன் நிக்கிறாரு. போலீஸ்காரங்க விசயத்தை சொன்னாங்க. நான் என் பையன்கிட்ட எவ்வளவோ பேசி பார்த்தேன். வெக்கத்த விட்டு சொல்லனும்னா அத்தனை பேத்துக்கும் முன்னாடி அவன் கால்ல விழுந்துகூட கெஞ்சி பார்த்துட்டேன். அந்த பொண்ண விட்டு வரமுடியாதுனு சொல்லிட்டான். நானும் இனி இவன் எனக்கு மகனே இல்லைனு எழுதி கொடுத்துட்டு வந்துட்டேன். ஆனாலும், அதுக்கப்புறமும் பொண்ணு எங்கே இருக்கா? பையன் எங்கே இருக்கானு? தினமும் கேட்டு டார்ச்சர் பன்னாங்க. அந்த பொண்ணோட அம்மாவும் பாலுங்கிறவரும் டெய்லி பேசுவாங்க. எங்க பொண்ண எங்ககிட்ட ஒப்படைச்சிடுங்கனு கேப்பாங்க. விசயம் தெரிஞ்சா நானே சொல்றேனுதான் நானும் சொல்லியிருக்கேன்.
இந்த நிலையிலதான், ஊருக்கு வந்த என்னை கும்பலா சேர்ந்து அடிச்சிட்டாங்க. என் மனைவியை கூட்டிட்டு போயி பஞ்சாயம் பேசியிருக்காங்க. பத்து நாள்ல பொண்ண ஒப்படைக்கனும்னு கெடு விதிச்சிருக்காங்க. மங்களமேடு போலீசார், அவங்களுக்கு சாதகமாத்தான் இருக்காங்க. என் மகன பத்தி எனக்கு கவலை இல்லை. அவன் எக்கேடு கெட்டு போகட்டும். ஆனா, இது என் ஊரு. ஊருக்குள்ள நீ வாழ்ந்துருவியானு பார்ப்போம்னு இவங்க எப்படி எனக்கு சொல்லலாம்? எனக்கு எப்படி கொலை மிரட்டல் விடுக்கலாம்? என்ன அடிச்சதுக்கு இன்ன வரைக்கும் கேசு இல்லை. எங்க உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கு. இவங்களுக்கு பயந்து நான் ஊரைவிட்டு போகனுமா?”னு கேள்வி எழுப்புகிறார், சுப்பிரமணியன்.
மங்களமேடு இன்ஸ்பெக்டர் பாலாஜியிடம் பேசினோம். “இது ரெண்டு குடும்ப விவகாரம். சென்சிட்டிவான பிரச்சினை. அதனாலதான் கேசு போடல. சி.எஸ்.ஆர். மட்டும் போட்டிருக்கோம். எஃப்.ஐ.ஆர். போட எவ்ளோ நேரம்சார் ஆகிடும்? சுப்ரமணியன் தேவையில்லாமல் பிரச்சினையை பெரிசு படுத்துறாரு. பொண்ண பெத்தவங்க ஆதங்கத்துல கேட்கத்தான் செய்வாங்க. அதுக்கு தணிவா அவரு பேசியிருந்தாலே இவ்வளவு பிரச்சினையில்லை. பொண்ணோட அப்பா ஹார்ட் பேஷண்ட். அவங்க பொண்ணுகிட்ட பத்து நிமிஷம் பேச விட்டிருந்தாலே பிரச்சினை வந்திருக்காது. காணை ஸ்டேஷன்ல, பொண்ண பார்த்து பேசக்கூட விடலை. அதனாலதான், அவரு பயப்படுறாரு. பொண்ணுக்கு ஏதும் ஆகிடுமோ? அந்த பொண்ணு உயிரோட இருக்கா? இல்லையானு? பயப்படுறாரு.
ஹேபியஸ் கார்பஸ் மனு போட்டிருக்காரு. கோர்ட்ல வந்து சொல்லிட்டா பிரச்சினை முடிஞ்சிரும். அவங்க சட்டப்படி கல்யாணம் செஞ்சிகிட்டாங்கனு சொல்றாங்க. ஆதாரம் எதுவுமே கொடுக்கல சார். அவங்க எங்க இருக்காங்கன்னே தெரியலியே. அதனாலதான் அவங்க பயப்படுறாங்க. மத்தபடி, சுப்ரமணியன் சொல்ற மாதிரி எல்லாம் அவரோட உயிருக்கு அச்சுறுத்தல் எல்லாம் இல்லை. ” என்கிறார், அவர்.

“எங்க அப்பா சொல்றது சுத்த பொய். காணை ஸ்டேஷன்ல என்கிட்டதான் அவ்வளவு நேரம் பேசினாரு. பேசின கொஞ்ச நேரத்துல, நெஞ்சு வலிக்கிதுனு சொன்னாரு. எல்லோரும் வண்டிய எடுத்திட்டு போனாங்க. கையில பேண்டேஜ் ஒட்டிகிட்டு வந்தாரு. திரும்பவும் பேசினாரு. நான் உறுதியா இருந்துட்டேன். அடுத்து அவங்க என்கிட்ட பேசினதுகூட, சமாதானம்லா இல்லை. உன்ன படிக்க வச்சி மேஜர் ஆக்கினது நாங்கதானே? உன்ன செலவு பன்னி படிக்க வச்சது நாங்கதானே? படிச்ச சர்டிபிகேட் எல்லாம் கொடு. நாங்க படிக்க வைப்போம். அதவச்சி நீ பிழைப்பியா? அந்த தைரியத்துல எவனையோ இழுத்திட்டு போவியா? இனி எங்கேயும் இந்த சாதினு நீ சொல்லக்கூடாது-னுதான் பேசினாங்க. நான் உயிரோட இருக்கேனா? இல்லையானு தெரிஞ்சிக்கிறதுக்காக எல்லாம் என்னை தேடலை. எப்படியாவது நாங்க இருக்க இடம் தெரிஞ்சி எங்கள ஏதாச்சும் பன்னனும்னுதான் தேடுறாங்க. அதுக்கு பயந்துதான் நாங்களே தலைமறைவா இருக்கோம்” என்கிறார் கிருபா.
“இவங்களால, எங்களுக்கும் என் குடும்பத்துக்கும் ஏதும் பாதிப்பு வந்திடுமோனுதான் கவலையா இருக்கு. நாங்க தெளிவா எடுத்து சொல்லிட்டோம். அதுக்கப்புறமும் ஏன் இப்படி பன்றாங்கனு தெரியல. எங்க அப்பாவை நேர்ல பார்த்தீங்களா, சார்? காயம் ரொம்ப இல்லைல்ல? திரும்பவும் பிரச்சினை பன்னுவாங்களா, சார்?”உண்மையிலேயே, இப்போ எங்களுக்குமே பயமாத்தான் இருக்குது.” என பதட்டத்தோடே பேசினார் ராஜ்கிஷோர்.
“மங்களமேடு இன்ஸ்பெக்டர் ஜூன்-17 ஆம் தேதி பேசினப்ப கூட, எஃப்.ஐ.ஆர். போட்டுட்டோம். அவங்கள வரச்சொல்லுங்கனுதான் சொன்னாரு. அதனாலதான் நாங்க எஸ்.பி. ஆபிசுக்கே போனோம். ஆனா, அடுத்தநாளு, காணை ஸ்டேஷன் போலீசார் கிரைம் நம்பர் கேட்டப்போதான், எஃப்.ஐ.ஆரே. போடலைனு சொல்றாரு. அதுக்கப்புறமும் கொஞ்சம் மிரட்டுற தொனியில, ஒரு நாலைஞ்சு முறை பேசினாரு. 14-ஆம் தேதி காணாம போன பொண்ணு பத்தி, 16-ஆம் தேதி ஸ்டேஷன்ல வச்சி விசாரிச்சவங்க. எப்படி, இத்தனை நாள் எஃப்.ஐ.ஆரே. போடாம இருந்தாங்க?” என கேள்வி எழுப்புகிறார், இக்காதல் தம்பதியினருக்கு ஆதரவாக செயல்படும் சூரஜ்.
கிருபாவின் தந்தை ரவிச்சந்திரனிடம் பேசினோம். “இது எங்க குடும்ப பிரச்சினைங்க. பெரிசு பன்னாதீங்க. செய்தி எல்லாம் போட வேணாம்.” என்பதோடு நறுக்கென்று முடித்துக் கொண்டார். அவரிடம் பேசி முடித்த கையோடு நம்மிடம் பேசிய, அதே பகுதியை சேர்ந்த பத்திரிகை நண்பர்கள் இருவரும் ரவிச்சந்திரன் கருத்தையே வழிமொழிந்தார்கள்.
கொலைமிரட்டல் விடுத்ததாக சொல்லப்படும், ராயல் ராமசாமியிடம் பேசினோம். முதலில், “எனக்கும் இந்த விவகாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றவரிடம், அந்த ஆடியோ குறித்து கேட்டதும், “அத நான் மிரட்டலா சொல்லல. ஊருக்குள்ள பசங்க கொஞ்சம் கோவமா இருக்காங்கனுதான் சொன்னேன். அதுவும் சுப்ரமணியன் எனக்கு நெருங்குன நண்பர்ங்கிற விதத்துலதான் அதக்கூட சொன்னேன். மத்தபடி, இதுல நமக்கு எந்த தொடர்பும் இல்லை.” என்பதாக ஒரே போடு போட்டார்.
கிருபா வீட்டை விட்டு வெளியேறி போனது எப்படி என்பது அவரது குடும்பத்திற்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், அவர் எதனால் வீட்டை விட்டு வெளியே போனார் என்பது கிருபாவின் குடும்பத்திற்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதன் காரணமாகத்தான், ஜூன்-16 ஆம் தேதி போலீஸ் ஸ்டேஷனில் வைத்து ராஜ்கிஷோர் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணையும் நடத்தியிருக்கிறார்கள். அதன்பிறகு, கிருபாவின் தாயார் ராஜ்கிஷோர் தந்தை சுப்ரமணியனிடம் தொடர்ந்து தொலைபேசியில் பேசியும் வந்திருக்கிறார்.

இதற்கிடையில், ஜூன்-18 ஆம் தேதி காணை போலீஸ் நிலையம் சென்றபோது, கோயிலில் திருமணம் நடைபெற்றது தொடங்கி சட்டப்படி திருமணத்தை பதிவு செய்திருப்பது வரையிலான சங்கதிகளை அறிந்திருக்கிறார்கள். கிருபாவிடம் பேசிப்பார்த்தும் பலனில்லை என்றுதான் திரும்பியும் வந்திருக்கிறார்கள். கிருபா வீட்டை விட்டு போன நாள் அன்று போலீஸ் கம்ப்ளையின்ட் கொடுத்து எஃப்.ஐ.ஆர். போட விரும்பாதவர்கள், இவ்வளவுக்குப் பிறகு ஜூலை-04 அன்று பெண்ணை காணவில்லை என்று புதியதாக புகார் கொடுக்கிறார்கள். அந்த புகாருக்கு போலீசும் உடனே எஃப்.ஐ.ஆர். போட்டிருக்கிறது. அதுவும், இந்த எஃப்.ஐ.ஆரின் நோக்கம், நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் வழக்குக்காக.

இந்த விவகாரம், சென்சிட்டிவான பிரச்சினை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதுவரை இந்த விவகாரத்தை கிருபாவின் தந்தையும் அவரது சாதியினரும் கையாண்ட விதமும் அவர்களின் உள்நோக்கமும் இவர்கள் விரும்பியவாறே மங்களமேடு போலீசாரும் வளைந்து கொடுத்த விதமும் பெருத்த சந்தேகத்தை எழுப்புகிறது.
இதில் கொடுமை என்னவெனில், கிருபாவின் தந்தை ரவிச்சந்திரன் அதிமுகவின் ஒன்றிய செயலாளர். இவருக்கு ஆதரவாக, சுப்ரமணியனுக்கு கொலை மிரட்டல் விடுத்த ராயல் ராமசாமி திமுக பிரமுகர். பத்து நாளில் பொண்ண கிராமத்துல ஒப்படைக்கனும்னு பஞ்சாயத்து பேசிய மற்றொரு ரவிச்சந்திரன் திமுகவின் ஒன்றிய பொருளாளர். கட்சி வேறுபாடு கடந்து சொந்த சாதி பாசத்தில் ஒன்று கூடியிருக்கிறார்கள். ”என் சாதி பொண்ண தூக்கினா என்ன நடக்கும்னு அவனுக்கு பாடம் கற்பிக்க வேண்டு”மென்று கணக்கோடு காத்திருக்கிறார்கள். இவர்களின் பிடியில் கிருபாவும் ராஜ்கிஷோரும் சிக்காமல் இருக்க வேண்டும்.
– ஆதிரன்.
முழுமையான வீடியோ பார்க்க