கவின்குமார் கொலையே தமிழ்நாட்டின் கடைசி ஆணவக்கொலையாக இருக்கட்டும்! மதியவன் இரும்பொறை
தூத்துக்குடி, ஆறுமுகமங்கலம் என்ற ஊரைச் சேர்ந்த, தேவேந்திரகுல_வேளாளர் சாதியைச் சேர்ந்த மென் பொறியாளர் கவின்குமார் (28), 27.07.25 அன்று மறவர் சாதிவெறியால் ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார். கவின்குமாரின் இக்கொலையை தமிழ் மக்கள் உரிமை முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்த கவின்குமாரும், சுபாசினி என்ற மறவர் சாதியைச் சேர்ந்த சித்தா மருத்துவரும் காதலித்து வந்துள்ளார்கள். காதலர்கள் இருவரும் திருமணத்திற்கு அணியமாகி பெற்றோர்களிடம் இது குறித்து பேசி வந்துள்ளார்கள்.

இந்நிலையில் தான், சென்னையிலிருந்து விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த கவின்குமாரை 27.07.25 அன்று பிற்பகலில், சுபாசினியின் தம்பி சுர்ஜித் தன் நண்பர் ஒருவருடன் வந்து, தனியாகப் பேச வேண்டும் என்று கவின்குமாரை அழைத்துச் சென்றுள்ளார். கவின்குமாரை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு, தானே காவல்நிலையத்தில் சரணடைந்தும் உள்ளார்.
சுபாசினியின் பெற்றோர் சரவணக்குமார், கிருஷ்ணவேணி இருவரும் தமிழ்நாடு காவல்துறை இராஜபாளையம் மணிமுத்தாறு படைப்பிரிவுகளில் சார்பு ஆய்வாளர்கள் ஆவர். சுபாசினியின் பெற்றோர் திட்டமிட்டுத் தான் சுர்ஜித் வழியாக தனது மகனை கொலை செய்துள்ளார்கள் என்று, கவின்குமாரின் தாயார் செல்வி பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சுர்ஜித் கைது செய்யப்பட்டுள்ளார். சுர்ஜித்தின் பெற்றோர் தமிழ்நாடு காவல்துறை பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற இதே போன்ற ஆணவக்கொலைகளில், சம்பந்தப்பட்ட பெண்ணை பிறழ்சாட்சியாக்கி குற்றவாளிகளைத் தப்பவைக்கும் உத்தி, சாதி வெறியர்களாலும், சாதி வெறிக்குப் பலியாகியுள்ள காவல்துறையினராலும் கையாளப்படும் என்பது நமக்குத் தெரியும். அதே போல சாதிய ஆணவக் குற்றங்கள் ஒரு தனிவகைக் குற்றச்செயலாக நமது சமூகத்தில் நிலைபெற்றுள்ள போது, அவற்றுக்கான தனிவகைச் சட்டம் இருந்தால் தான், நாம் அக்குற்றங்களை கட்டுக்குள் கொண்டுவர இயலும். பொதுவாகவே பட்டியல் சாதி மக்கள் மீதான வன்கொடுமைகளில், தங்களுக்கான நீதியினை சட்டவழியில் நிலைநாட்டிக்கொள்ள அம்மக்கள் பெரும்பாடு பட்டாக வேண்டியுள்ளது. தமிழ்ச் சமூகத்தின் சாதியக் கட்டுமானம் துறைதோறும் ஆதிக்கம் செலுத்துவதே இதன் அடிப்படை ஆகும்.

ஆகையால், சமூகநீதியே இலக்கெனச் சொல்லி ஆட்சி செய்துவரும் தமிழ்நாட்டின் திராவிடமாடல் அரசு, கவின்குமார் கொலைவழக்கில், சுர்ஜித்தின் பெற்றோரையும் தயங்காமல் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டும். சமூகநீதியில் நம்பிக்கையுள்ள, சாதிய பாகுபாட்டுக்கு இடங்கொடாத நேர்மையான காவல்துறை அதிகாரிகொண்டு இவ்வழக்கை விசாரித்து, குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
கவின்குமார் கொலையே தமிழ்நாட்டின் கடைசி ஆணவக்கொலையாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம், கவின்குமார் வழக்கு தான் தனிச்சட்டமின்றி விசாரிக்கப்பட்ட கடைசி வழக்காக இருக்க வேண்டும். ஆகவே தமிழ்நாடு அரசு சாதி ஆணவக் குற்றங்களைத் தடுக்கவும் தண்டிக்கவும் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ் மக்கள் உரிமை முன்னணி அமைப்பாளர் மதியவன் இரும்பொறை கேட்டுக்கொண்டுள்ளார்.