காதல் திருமணம் செய்த மகளையே ஆணவக்கொலை செய்த சாதிவெறி பெற்றோர்கள் !
காதல் திருமணம் செய்த மகளையே ஆணவக்கொலை செய்த சாதிவெறி பெற்றோர்கள் !
சாதி மறுத்து காதல் திருமணம் செய்து கொண்டதற்காக பெற்ற மகளையே, சித்திரவதை செய்து ஆணவக்கொலை செய்திருக்கிறார்கள் சாதிவெறி பெற்றோர்கள்.
பட்டுக்கோட்டை அருகே வாட்டாத்திக்கோட்டையடுத்த நெய்வவிடுதி கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவுக்கு வயது 19. பக்கத்து ஊரான பூவாளூரைச் சேர்ந்த நவீனை பள்ளி காலத்திலிருந்தே காதலித்து வந்திருக்கிறார். நவீன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், இடைநிலைச் சாதியைச் சேர்ந்த ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இருவரும் திருப்பூரில் தங்கி வெவ்வேறு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்திருக்கின்றனர். வேலைக்கு வந்த இடத்தில், நண்பர்களின் உதவியோடு வீட்டின் எதிர்ப்பை மீறி காதல் திருமணமும் செய்திருக்கின்றனர். இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்ட விசயத்தை நண்பர்கள் – உறவினர்களின் வழியே இருவீட்டாரின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருக்கின்றனர்.
இதனையடுத்தே, ஐஸ்வர்யாவின் பெற்றோர்களான பெருமாள் – சரோஜா தம்பதியினர், பல்லடம் போலீசு நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். புகாரை விசாரித்த பல்லடம் ஆய்வாளர் முருகையா, மிகவும் பொறுப்பாக 18 வயது நிரம்பிய அந்தப் பெண்ணை அவரது காதல் கணவரிடமிருந்து பிரித்து பெற்றோர்களுடன் சட்டவிரோதமான முறையில் அனுப்பி வைத்திருக்கிறார்.
போலீசாரின் உதவியோடு, நவீனிடமிருந்து பிரித்து ஐஸ்வர்யாவை அழைத்து சென்ற பெற்றோர்கள், அப்பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்து கொலை செய்திருக்கின்றனர். பின்னர், யாருக்கும் தெரிவிக்காமல் சடலத்தை எரியூட்டியிருக்கின்றனர். காதல் மனைவியின் சாம்பல்கூட நவீன் கைகளுக்குச் சென்றுவிடக்கூடாதென்ற சாதிய வன்மத்தோடு செயல்பட்டிருக்கின்றனர் பெருமாள் – சரோஜா தம்பதியினர்.
சாதிவெறியோடு பெற்ற மகளையே கொன்று எரித்ததோடு, இந்த தகவலையும் நவீனுக்குத் தெரியப்படுத்தவும் செய்திருக்கின்றனர். பதறிப்போன நவீன் போலீசில் புகார் அளித்ததையடுத்தே இந்த விவகாரம் வெளியில் வந்திருக்கிறது. தற்போது பெருமாள் – சரோஜா தம்பதியினர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் ஆணவப்படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது. தமிழுக்கும் தமிழனுக்கும் உலகறியும்படியான ஆயிரம் அடையாளங்கள் இருந்தாலும்; அடுத்தவேளைச் சோற்றுக்கு வக்கற்றுக் கிடந்தாலும் சொந்த சாதிப் பெருமிதத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார்கள் பெருமாள் – சரோஜா தம்பதியினர்.
– ஆதிரன்.