கேத்தரீன் ஆரோக்கியசாமி அறம் போதிக்கும் வழிகாட்டி நூல் – 19
முனைவர் ஜா.சலேத்
கேத்தரீன் ஆரோக்கியசாமி அறம் போதிக்கும் வழிகாட்டி நூல் –
அறியவேண்டிய ஆளுமைகள்
-19
இறைநம்பிக்கையும், தன்னம்பிக்கையும் சேரும்போது அது முழு நம்பிக்கையாகும் என்கிற வரிகளைத் தம் வாழ்வின் விருதுவாக்காக முன்னெடுத்து அந்த வரிகளுக்குத் தம்மையே சான்றாக மாற்றியுள்ள பெருமகள். எண்ணற்ற இளையோரை உற்சாகப்படுத்தி கலை இலக்கியத்துறையில் அவர்கள் பலப்பட உந்துசக்தியாகத் திகழ்கிற பேராளுமை. வாழ்க்கையின் எதார்தத்தையும், இயல்புகளையும் உணர்வுப்பூர்வமான இயல்பான, எளிமையான நடையில் படைப்புகளாக்கித் தரும் எழுத்தாளர். அச்சம், மடம், நானம், பயிர்ப்பு என்ற வழக்கமான சிந்தனையை உடைத்து, உச்சம், திடம், ஞானம், உயிர்ப்பு என எழுத்தாளராக, சமூக செயல்பாட்டாளராக தொடர்ந்து இயங்கி வரும் எழுத்தாளர் திருமதி கேத்தரீன் ஆரோக்கியசாமி அவர்களை இன்றைய இளைஞர்கள் போதிமரமாக அடையாளம் கண்டு போற்ற வேண்டும் என்பதற்காக அவரோடு பேசி, அவர் பகிர்ந்து கொண்ட கருத்துக்களைப் போதிமரத்தின் ஞான கிளைகளாக்கி இருக்கிறோம்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆரோக்கியசாமி அவர்களின் மனைவி, ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, சிரா இலக்கியக் கழகத்தின் தலைவர். பல்வேறு கலை இலக்கிய அமைப்புகளில் பொறுப்பு. முதுதமிழ் எழிலரசி, முதுதமிழ் எழுத்தரசி. சேவைச்செம்மல், சிறுகதைச் செம்மணி, போதிமரத்தின் ஞர்ன நிழல் உள்ளிட்ட விருதுகளுக்குச் சொந்தக்காரர், சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரை நூல்கள் எனப் பல்வேறு நூல்களை தமிழ் கூறு நல்லுலகிற்குத் தந்த எழுத்தாளர் என்கிற அடையாளங்களோடு உலாவரும் அவரிடம் இத்தனைக்கும் அடிப்படை எது என்கிற வினா எழுப்பியதும் இப்படி பதில் தருகிறார்.
“அத்தனைக்கும் அடிப்படை என் அம்மா திருமதி தங்கமணி அவர்கள். வாழ்வின் அழகை, மேடு பள்ளங்களை அறிய வைத்து என் வாழ்க்கைப் பாதைக்கு வெளிச்சமாயிருந்தவர் என் அம்மா. அவர் என் உள்ளத்தில் விதைத்த ஆன்மீகம், அன்பு, ஒழுக்கம் ஆகியவற்றையே என் வாழ்நாளின் ஒவ்வொருநாளிலும் என் எழுத்தின் வழியிலுமு, ஏதாவது ஒரு செயலின் வழியாக விதைத்துக் கொண்டே இருக்கிறேன். அம்மாவைத் தொடர்ந்து, என் கணவரின் உடனிருப்பே எனக்கு பெரும் பலமாக அமைந்தது. அமைந்திருக்கிறது. கவிஞர் என்ற அறிமுகத்தில் ஒரு சில கதைகளை மட்டுமே எழுதிய என்னை, நாற்பது ஆண்டுகளுக்குப்பிறகு தொடர்ந்து சிறுகதைகளை எழுத உந்தியது அவர். ஒரு சிறந்த எழுத்தாளர். இடையறாத மக்கள்
பணிகளுக்கு மத்தியிலும் எழுத்தின்மீது அவர் கொண்டிருந்த காதல் என்னை வியப்பில் ஆழ்த்தியது. என் தொடர் இயக்கததிற்குக் காரணம் என் எண்ணங்களில் வாழும் என் கணவர் எழுத்தாளர் ஆசாவின் உந்துதலின்றி வேறேதும் இல்லை!” என்கிறபோது அவர்களின் கண்கள் பணித்திருக்கின்றன நமது கண்களும் கூடத்தான்.
இத்தனை ஆண்டு காலம் தொடர்ந்து எழுதுகிறீர்களே எப்படி என்கிற வினாவிற்கு, கல்லூரி காலத்தில் எழுதியதோடு நின்றுவிட்டது. நீண்ட இடைவெளிக்குப்பிறர். சென்னை பிராட்வேயிலிருந்து வெளிவரும் அருள் ஊற்று இதழிலே “புது வாழ்வு” என் முதல்கதை வெளிவந்தது. பிரான்சிஸ்கன் ஒலி, ஞானத்தூதன், அன்னை வேளாங்கண்ணி, அன்னையின் அருட்சுடர், நந்தவனநாதம் உள்ளிட்ட பல இதழ்களில் எனது கதைகள் வெளிவந்தன. என் எழுத்துப் பயணத்தில் என்னுடன் கைகோர்த்தவர் என் உயிர்நண்பி திருமதி லூர்து பொற்செல்வி, நான் சோர்ந்துபோகும்போது அன்புக்கரம் நீட்டுபவர் புதுவாழ்வில் தொடங்கிய எனது எழுத்துப்பயணம் இன்று நூல்களின் ஆசிரியராக என்னை மாற்றியிருக்கிறது என்கிறார்.

முதுகிற்கு பின்னால் ஒரு காரியம் செய்யலாம். அது தட்டிக்கொடுத்தல் மட்டுமே என்பார்கள் கேத்தரீன் ஆரோக்கியசாமி என்றதும் நம் கினைவுக்கு வருவது உற்சாகம் ஊட்டுபவர் உற்சாகமூட்டல் மிக அவசியமானது. தன் வளர்ச்சிக்கு உற்சாகமூட்டல் முக்கிய காரணமாக இருந்துள்ளது. உற்சாகப்படுத்துவதே பலம் என்ற மன உணர்வில் சிறுவயது முதலே அவர் வளர்க்கப்பட்டதால் இன்று எண்ணற்ற இளையோருக்கு ஏணியாகவும், தோணியாகவும் விளங்குகிறார்.
நான் எழுதிய படைப்புகளை எனது கல்லூரி காலத் தோழியர் மார்கிரேட் லீனா இல்டா ஆகியோரின் பாராட்டே எண்ணற்ற பரிசுகளை அந்தக்காலத்தில் எனக்குப் பெற்றுத்தந்தது. அகில இந்திய வானொலியில் தற்காலிகப் பணியிடத்தில் பணியாற்றி குரலின்வழி சேவையாற்றிய பொழுதுகள் என் மனத்தில் பசுமையாக இருக்கின்றன. அப்படி வளர்ந்ததால் நம்மை உற்சாகப்படுத்துபவர்கள் நம்மைச் சுற்றி எப்போதும் இருப்பதாக என்னை தகவமைத்துக் கொண்டேன். நம்மை சுற்றி நம் நலன் விரும்பிகள் நிரம்பிய சூழல் ஏற்படுகிறபோது அது நேர்மறைச் சூழலாக மாறிவிடுகிறது என்பதையும் அனுபவத்தின் மூலம் புரிந்து கொண்டேன் என்பவர் தம்மைச் சுற்றி சமூக நலன் விரும்பிகளை அரணாகக் கெண்டு இயங்குகிறார்.
அவரின் எழுத்துக்கள் வாழ்வின் எதார்தத்தை, வாழ்க்கையின் இயல்புகளை அடிப்படையாகக் கொண்டு, உணர்வுப்புர்வமான, இயல்பான, எளிமையான நடையில் வாழ்க்கைக்கான அறக்கருத்துக்களை முன்மொழிபவையாகவே அமைந்துள்ளன. தர்மம், சகோதரத்துவம், கருணை, கடமை, நிதி அன்பு இந்த மதிப்பீடுகளே என் கதைகளின் வெளிப்பாடு என்பதாலேயே 175 ஆண்டுகள் பாரம்பரியமிக்க திருச்சி தூய வளனார் கல்லூரித் தமிழாய்வுத்துறைப் பாடத்திட்டத்தில் இரண்டுமுறை இடம்பெற்று மாணவர்களுக்கு அறம் போதிக்கும் வழிகாட்டி நூலாக அமைந்துள்ளது.
அருட்கலைஞர் தொடங்கி, திருச்சியின் பெண் எழுத்தாளர் விருது வரை எண்ணற்ற விருதுகள் இவரைத்தேடி வந்திருக்கின்றன. இவரின் கதைக்களங்களும், கதாப்பாத்திரங்களும் தனிரகம். தீயின் வெம்மை, தென்றலின் இனிமை, கனியின் சுவை, மின்னலின் ஒளி, காதலின் இதம் என ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம்.
மீனவர்களின் பிரச்சனைகளை மையப்படுத்திய கடலோடிகள், துப்புரவுப் பணியாளர்களின் நிலையை வெளிப்படுத்தும் செய்யும் தொழிலே தெய்வம். மீ டூ உரத்து பேசப்பட்ட காலத்தில் வெளிவந்த எனக்கும் தான் என ஒவ்வொரு கதையும் ஒரு ரகம். இந்தப்பயணத்தில் வெற்றி, தோல்வி என்கிற மனநிலை ஏதுமில்லாது. வீட்டிற்குள்ளே முடங்கிவிடாது இயங்கிக்கொண்டே இருக்கிறார் கேத்தரீன் ஆரோக்கியசாமி.
இளைஞர்களுக்கு சொன்னால் என்ன சொல்வீர்கள் என்றதற்கு அவர் சொன்ன வரிகள்…
-
தோல்விகள் ஏற்பட்டால் அதை எண்ணி நொறுங்கி விடாமல், எதிர்த்து மோதி எந்தப் பிழையால் இந்தத் தவறு ஏற்பட்டது என்பதை உணர்ந்து பயணிப்பதுதான் வெற்றிக்கு வழி செய்யும்.
-
பொறுமையும், நிதானமும் ஆன்மாவின் குணங்கள் என்று சொல்கிறார்கள். அந்த வழியில் சென்று வெற்றி அடைந்தவர்கள் ஆயிரமாயிரம் உள்ளனர். அவர்களை உங்களின் மாதிரிகளாக முன்னிறுத்துங்கள்.
-
வெற்றிக்காக காத்திருக்காதீர்கள். வெற்றிக்காக உழையுங்கள். முயற்சிகள் பல செய்து விடாமுயற்சியுடன் உழையுங்கள்.
— முனைவர் ஜா.சலேத்








Comments are closed, but trackbacks and pingbacks are open.