இறைவனிடம் கையேந்தினாலும் … இன்னொருமுறை கிடைக்கப்பெறாத இசைக்கலைஞன் !
திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி, யாவரும் கேளீர் மாத இதழ் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இணைந்து நடத்திய இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபாவின் நூற்றாண்டு விழா – கருத்தரங்கம், 2026-ஜனவரி-09 அன்று திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி – எம்.எஸ் ஜார்ஜ் அரங்கில் நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் அருள்தந்தை எஸ்.லூயிஸ் பிரிட்டோ தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.உமாமகேஸ்வரி, யாவரும் கேளீர் இலக்கிய மாத இதழின் ஆசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில பொறுப்பாளர் கவிஞர் கோ.கலியமூர்த்தி, நாகூர் அனிபா இசைக் குழுவில் கீ-போர்டு வாசித்த DSS கென்னடி, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கோவன், ஆகியோர் கருத்தரங்க உரை நிகழ்த்தினார்கள். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் சிறப்பு விருது பெற்ற திருச்சி தி.அன்பழகன் முன்னிலை வகித்தார்.

முன்னதாக, கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் கி.சதீஷ்குமரன் வரவேற்புரை நிகழ்த்தினார். கருத்தரங்க செயலரும் தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியருமான முனைவர் ரெ.நல்லமுத்து நிகழ்வை தொகுத்து வழங்கினார். நிறைவாக நன்றியுரை நிகழ்த்தினார். விழாவிற்கான மொத்த ஏற்பாடுகளையும் அங்குசம் சமூக நல அறக்கட்டளையின் தலைவர், பத்திரிக்கையாளர் ஜெ.டி.ஆர். உடன் இணைந்து, கருத்தரங்க செயலரும், கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியருமான சதீஷ்குமாரன் ஒருங்கிணைத்தார்.

இவ்விழாவில், கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி முன்னாள் மாணவர் பி.பாஸ்டின்ராஜ் எழுதிய அனிபாவின் இசைப் பணிகள் என்ற நூலை, மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டு விழா பேரூரையாற்றினார்.
அவரது உரையில், “இசைமுரசு நாகூர் இ.எம். அனிபாவின் நூற்றாண்டை தமிழக அரசுக்கு அடுத்து, அதுவும் ஒரு கல்லூரியின் சார்பில் நடைபெறும் விழா இது ஒன்றாகத்தான் இருக்கும். மத நல்லிணக்கத்தின் அடையாளமாக, இதுதான் இந்தியா என்று சொல்லும்விதமாக இந்த விழா இங்கே நடைபெறுகிறது. 5000-க்கும் மேற்பட்ட மேடைகளில் பாடிய பாடகர் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். அவர் பிறந்த நாகை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் என்ற வகையில் பெருமையாக கருதுகிறேன். அவர் வாழ்ந்த தெருவிற்கு அவரது பெயரை சூட்டியிருக்கிறோம்.
1953-இல் தமிழகத்தில் நெசவாளர்கள் பட்டினிக்கு தள்ளப்பட்டபோது, திருச்சியின் தெப்பக்குள வீதியில் நெசவுத்துணிகளை சுமந்து கொண்டு அதை விற்று அதில் கிடைக்கும் வருவாயை நெசவாளர்களின் நலனுக்கு சென்று சேர வேண்டுமென்ற களத்தில் இறங்கினார் அறிஞர் அண்ணா. அவருடன் இணைந்து பாட்டுப்பாடி நெசவுத்துணிகளை விற்றவர் நாகூர் அனிபா. அவர்களுடன் உடன் சென்றது எனது தாத்தா அன்பில் தர்மலிங்கம். இன்று அவருடையை பேரனாக இந்த விழாவில் பங்கேற்றிருக்கிறேன்.” என்பதாக நெகிழ்வான உரையாற்றினார்.
”இசுலாமியர் என்ற அடையாளத்தோடு அவரை அணுகாமல், நுண்கலையில் இசையும் ஒரு பிரிவுதான் என்பதை உணர்ந்து, இந்த விழாவை நடத்துவதற்கு முன்வந்த திருச்சி கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் அருள்தந்தை எஸ்.லூயிஸ் பிரிட்டோவின் முடிவு போற்றுதலுக்குரியது.

தமிழகத்தில் நூற்றாண்டு கடந்த ஆளுமைகளை பெருமைபடுத்தும் விதமாக, யாவரும் கேளீர் சார்பில் தொடர்ந்து சிறப்பு அமர்வுகளை நடத்தி வருகிறோம். அதன் தொடர்ச்சிதான் இந்நிகழ்வு. 90 வயதை கடந்தும் மேடைக் கச்சேரிகளில் அவரது குரல் ஒலித்தது. சுமார் 75 ஆண்டு காலம் மக்கள் இசையோடு பயணித்தவர். உணர்வுகளை கடத்தியது அவரது குரல். கொள்கை வழி வழுவாது வாழ்ந்து காட்டியவர்.” என்பதாக நோக்க உரையில் சுட்டிக்காட்டினார், யாவரும் கேளீர் இதழாசிரியர் பேரா.நெடுஞ்செழியன்.
” நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும் … இதில் அடுத்தடுத்து கேட்பதற்கு அஞ்சுதே என் உள்ளம்.” என்ற நாகூர் ஹனிபாவின் பாடல் வரிகளை உள்ளம் உருகி பாடியவர், சாதி, மதம், சமயம் கடந்து அனைவரிடத்திலும் கலையை கொண்டு செல்லும் நோக்கில், திருச்சி கலைக்காவிரியின் முன்னெடுப்புகளின் வரிசையில் நாகூர் ஹனீபாவுக்கும் நூற்றாண்டு விழா எடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார் கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் அருள்தந்தை எஸ்.லூயிஸ் பிரிட்டோ.

கருத்தரங்க நிகழ்வின் முத்தாய்ப்பாக, நாகூர் ஹனீபாவின் மேடைகளில் அவருடன் இணைந்து கீபோர்ட் வாசித்த டி.எஸ்.எஸ். கென்னடியின் உரை அமைந்தது. முறையான சங்கீதம் கற்றிராத அவர் சுருதி குறையாமல் பாடும் திறமையை பெற்றிருந்தார் என்பதை சுட்டிக்காட்டினார். பொதுவாக அவர் புதியதாக மெட்டமைக்கும் பாடல்களுக்கு இரண்டு நாள் மெனக்கெடுவார். ஆனால், அந்த மெட்டு இறுதி வரை மாறாமல் அப்படியே நிலைக்கும் என்றார். அவரது இடத்தை நிரப்ப யாருமில்லை என்றவர், திருச்சி ஆர்.ஆர். சபாவில் நாகூர் ஹனீபாவை அழைத்து விழா நடத்தி’போது, அதில் குறைந்தது 15 முறையாவது , “இறைவனிடம் கையேந்துங்கள் “ என்ற பாடலை பாட வைத்தார்கள் என்பதாக மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

அவர் என்றைக்கும் எப்போதும் தன்னை பெரிய பாடகர் என்பதாக கருதிக் கொண்டதே இல்லை என்பதாக குறிப்பிட்டவர், கச்சேரிகளுக்கு செல்லும்போதெல்லாம் ஆர்மோனியை பெட்டியை தலையில் சுமந்தபடியேதான் சென்றார். தொலைதூர பயணங்களின்போது இரயிலில் ஜன்னல் வழியாக அவரே நுழைந்துதான் சீட்டு பிடிப்பார் என்பதாக அவர் பேசியபோது நாகூர் ஹனிபாவின் தலைக்கணமில்லா எளிமை மெய்சிலிர்க்க வைத்தது.
“அவர் பங்கேற்கும் எந்த மேடையிலும் திமுகவின் பாடல் ஒன்றையாவது பாடாமல் இறங்கியதே இல்லை. அதற்காக, எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் அசரமாட்டார். கையில் மைக்கின் ஸ்டேண்டை தூக்கிக்கொண்டு வந்து பார் என்று நிற்பார்” என்ற தகவல், அவரைப்பற்றிய மற்றொரு கோணத்தையும் எடுத்துரைப்பதாக இருந்தது.

வெறுமனே, வார்த்தைகளால் மட்டும் அவரது நற்பண்புகளை எடுத்துரைக்காமல், அவரது குரலிலே அது என்ன ராகத்தில் அமைந்தது என்பதையும் குறிப்பிட்டு பாடலாகவும் பாடி, தான் பேசி முடிக்கும் வரையில் அரங்கை தன்வயப்படுத்தியிருந்தார் டி.எஸ்.எஸ். கென்னடி.
மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பொதுச்செயலர் தோழர் கோவன், இன்றைய இளைஞர்களிடத்தில் நிலவும் அரசியலற்ற போக்கை சாடியவர், அரசியல் தளத்தில் அவரது குரல் ஏன் ஓங்கி ஒலித்தது என்பதையும், தற்போதைய சூழலில் அவரைப்போல அரசியல் தளத்தில் ஓங்கி ஒலிக்கும் குரல் அவசியமாக இருக்கிறது என்பதையும் தனது உரையில் அழுத்தமாக பதிவு செய்தார்.

“அவர் ஒரு ஆல் ரவுண்டர். முறைப்படி சங்கீதம் கற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அவரது பாடல்களில் அத்தனை ராகங்களும் அடங்கியிருக்கின்றன. அவரது பாவங்களை, அவரது உணர்ச்சிகளை இசை கற்கும் மாணவர்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அதன் வழியேதான், மாணவர்கள் தனித்தன்மையோடு இந்தத் துறையில் சிறந்து விளங்க முடியும்.” என்பதாக, மாணவர்களிடம் எடுத்துரைத்தவர், “சிலரது குரலைத்தான் நம்மால் இமிடேட் செய்ய முடியும். ஆனால், நாகூர் ஹனிபாவின் காந்தக்குரலை யாராலும் இமிடேட் செய்யவே முடியாது.” என்றார், கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.உமாமகேஸ்வரி.
“நாகூர் ஹனிபாவை, இசுலாமியனாக, திமுக காரனாக மட்டுமே அடையாள படுத்திவிட முடியாது. கூடாது. அவர் தான் பிறந்த மதத்திற்கான மார்க்க பாடல்களை பாடியிருக்கிறார். அடுத்து, தான் சார்ந்து இருந்த அரசியலுக்கான பாடல்களை பாடியிருக்கிறார். அவர் எந்த மதத்தையும் அழிக்க வேண்டுமென்று பாடியதில்லை. பணத்துக்காக கலைஞனை அடிமைப்படுத்திவிட முடியாது என்பதை நடைமுறையில் வாழ்ந்துகாட்டியவர் நாகூர் ஹனிபா.” என்பதாக, அவரது சிறப்பை நறுக்கென்று தனக்கே உரிய பாணியில் எடுத்துரைத்தார், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில பொறுப்பாளர் கவிஞர் கோ.கலியமூர்த்தி.

கலைக்காவரி மாணவர்களின் வரவேற்பு நடனம் மற்றும் திரளான மாணவர்களின் பங்கேற்பும் இறுதிவரையில் விழாவை உயிர்ப்போடு வைத்திருந்தது.
திமுகவின் பிரச்சார பாடகர், இசுலாமிய மார்க்க பாடகர் என்ற சட்டகங்களைத்தாண்டி, அவர் மக்கள் இசைக்கலைஞர், கொண்ட கொள்கையின்பால் இறுதிவரை உறுதியோடு நின்ற கலைஞர், அவரது இடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாத தனித்துவமான கலைஞர் என்ற அவரது பன்முகத்தன்மையும், பங்கேற்ற மாணவர்களிடத்தில் ”இப்படி ஒரு கலைஞனாக நாமும் உருவெடுக்க வேண்டுமென்ற” வேட்கையை விதைக்கத் தவறவில்லை.
— இளங்கதிர்




1953-இல் தமிழகத்தில் நெசவாளர்கள் பட்டினிக்கு தள்ளப்பட்டபோது, திருச்சியின் தெப்பக்குள வீதியில் நெசவுத்துணிகளை சுமந்து கொண்டு அதை விற்று அதில் கிடைக்கும் வருவாயை நெசவாளர்களின் நலனுக்கு சென்று சேர வேண்டுமென்ற களத்தில் இறங்கினார் அறிஞர் அண்ணா. அவருடன் இணைந்து பாட்டுப்பாடி நெசவுத்துணிகளை விற்றவர் நாகூர் அனிபா. அவர்களுடன் உடன் சென்றது எனது தாத்தா அன்பில் தர்மலிங்கம். இன்று அவருடையை பேரனாக இந்த விழாவில் பங்கேற்றிருக்கிறேன்.” என்பதாக நெகிழ்வான உரையாற்றினார்.



Comments are closed, but trackbacks and pingbacks are open.