நீங்கள் இயந்திரங்கள் அல்ல! நீங்கள் கால்நடையல்ல! நீங்கள் மனிதர்கள்! – சார்லி சாப்ளினின் டானிக் !
(தி கிரேட் டிக்டேட்டர் என்கிற படத்தில் சார்லி சாப்ளின் படை வீரர்களிடையே ஆற்றும் புகழ்பெற்ற உரை. இதன் இன்றைய பொருத்தப்பாடு கருதி. தமிழில்: ஆர். விஜயசங்கர்
மன்னிக்கவும், நான் பேரரசனாக நினைக்கவில்லை. அது என் வேலை அல்ல. நான் ஆளவோ அல்லது யாரையோ வெற்றி கொள்ளவோ நினைக்கவில்லை. முடிந்தால் அனைவருக்கும் உதவ விரும்புகிறேன் – அது ஒரு யூதனோ, யூதனல்லாதவனோ, கருப்பு மனிதனோ அல்லது வெள்ளை மனிதனோ… யாராக இருந்தாலும்.
மனிதர்கள் அப்படித்தான். நாம் பிறரின் மகிழ்ச்சியினால் வாழ நினைக்கிறோம்; துயரத்தினால் அல்ல. நாம் யாரையும் வெறுக்கவோ இகழவோ நினைக்கவில்லை. இந்த உலகத்தில் அனைவருக்கும் இடமிருக்கிறது. இந்த நல்ல பூமி வளமானது; அது எல்லோருக்கும் வேண்டியதைத் தர முடியும். வாழ்க்கை முறை சுதந்திரமாகவும் அழகானதாகவும் இருக்க முடியும்; ஆனால் நாம் வழியைத் தொலைத்து விட்டோம்.
மனிதர்களின் ஆன்மாக்களை பேராசை விஷமாக்கி விட்டது; வெறுப்பினால் உலகிற்குள் வேலி போட்டு விட்டது; விறைப்பாக நடந்து துயரத்திற்குள்ளும், ரத்த வெள்ளத்திற்குள்ளும் தள்ளி விட்டது. நாம் வேகத்தை வளர்த்து விட்டோம், ஆனால் உள்ளுக்குள்ளே முடங்கி விட்டோம். அள்ளித் தந்த இயந்திரங்கள் நம்மை வறுமைக்குள்ளாக்கி விட்டன. நம் அறிவு மனிதர்கள் மீதான நம்பிக்கையைத் தகர்த்து விட்டது. நமது புத்திசாலித்தனத்தை கெட்டியாகவும் இரக்கமற்றதாகவும் ஆக்கி விட்டது.
நாம் அதிகம் சிந்திக்கிறோம், குறைவாக உணர்கிறோம். இயந்திரங்களை விட நமக்கு மனிதமே அதிகம் தேவை. புத்திசாலித்தனத்தை விட கருணையும், மென்மையும் அதிகம் தேவை. இந்தத் தன்மைகளில்லையெனில் வாழ்க்கை வன்முறையாகி விடும்; அதனை இழந்து விடுவோம்.
விமானமும், வானொலியும் நம்மை நெருக்கமாக்கி விட்டன. இந்தக் கண்டுபிடிப்புகளின் தன்மையே நாம் நல்லவர்களாக இருக்க வேண்டுமென்பதற்குத்தான் – உலகளாவிய சகோதரத்துவத்திற்காகத்தான். நம் அனைவரின் ஒற்றுமைக்காகத்தான்.
இப்போது கூட என் குரல் உலகம் முழுவதிலிருக்கும் லட்சக்கணக்கானோரை சென்றடைந்து கொண்டிருக்கிறது – விரக்தியிலிருக்கும் லட்சக்கணக்கான ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தைகளையும் – குற்றமற்றவர்களைச் சிறையிலடைத்து சித்திரவதை செய்ய மனிதர்ளைத் தூண்டும் அமைப்பிற்குப் பலியானவர்களை!
என் குரலைக் கேட்க முடிபவர்களுக்க்கு நான் சொல்கிறேன்; விரக்தி அடையாதீர்கள்! நம் மீது இப்போது படிந்திருக்கும் துயரம் மனித குலத்தின் முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சிக் கசப்படைந்திருக்கும் மனிதர்களின் தற்காலிகப் பேராசையின் விளைவுதான். மனிதர்களின் வெறுப்பு மறைந்து விடும்; சர்வாதிகாரிகள் இறந்து விடுவர்; மக்களிடமிருந்து அவர்கள் எடுத்துக் கொண்ட அதிகாரம் மீண்டும் மக்களிடமே வந்து சேரும். மனிதர்கள் இறக்கும் வரை சுதந்திரம் அழிவதில்லை.
படை வீரர்களே! உங்களை மிருகங்களிடம் ஒப்படைத்து விடாதீர்கள் _ உங்களை வெறுக்கும் மனிதர்களிடம், உங்களை அடிமையாக்கும் மனிதர்களிடம் _ உங்களை சிந்தனையற்ற சட்டகத்திற்குள் அடைக்கும் மனிதர்களிடம், நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன சிந்திக்க வேண்டும், என்ன உணர வேண்டும் என்று சொல்பவர்களிடம், உங்களுக்குப் பயிற்சி கொடுப்பவர்களிடம், உங்கள் உணவைக் கட்டுப் படுத்துபவர்களிடம், உங்களை கால்நடை போல் பாவிப்பவர்களிடம், உங்களை பீரங்கிக் குண்டாகப் பயன்படுத்துபவர்களிடம்…..
இயற்கைக்கு மாறான அந்த மனிதர்களிடம், இயந்திரம் போல் சிந்திக்கும் அந்த இயந்திர மனிதர்களிடம், இயந்திரம் போன்ற இதயம் கொண்டவர்களிடம் உங்களை ஒப்படைத்து விடாதீர்கள் ! ன் நீங்கள் இயந்திரங்கள் அல்ல! நீங்கள் கால்நடையல்ல ! நீங்கள் மனிதர்கள்! உங்கள் இதயங்களில் மனிதகுலத்தின் மீது காதல் கொண்டவர்கள்! நீங்கள் வெறுப்பதில்லை! அன்பு கிடைக்காதவர்கள்தாம், செயற்கையானவர்கள்தாம் வெறுக்கிறார்கள்! படை வீரர்களே! அடிமைத் தனத்திர்காகப் போரிடாதீர்கள்.! சுதந்திரத்திற்காகப் போராடுங்கள்!
புனித லூக் எழுதிய விவிலியத்தின் 17ஆவது அத்தியாயத்தில் இப்படிக் கூறப்பட்டிருக்கிறது: “மனிதர்களுக்குள்ளேதான் கடவுளின் ராஜ்ஜியம் இருக்கிறது.” அது ஒரு மனிதனுக்குள்ளோ அல்லது ஒரு மனிதக் குழுவுக்குள்ளோ அல்ல! எல்லா மனிதர்களுக்குள்ளும் இருக்கிறது. உங்களுக்குள்ளும் இருக்கிறது. மனிதர்களாகிய உங்களுக்குள் சக்தி இருக்கிறது. இயந்திரங்களை உருவாக்கும் சக்தி! மக்களாகிய உங்களுக்கு இந்த வாழ்க்கையை சுதந்திரமானதாகவும், அழகானதாகவும் மாற்றும் சக்தி இருக்கிறது! இந்த வாழ்க்கையை ஓர் அற்புதமான சாகசமாக்கும் சக்தி இருக்கிறது.
எனவே, ஜனநாயகத்தின் பெயரால் அசார்லி சாப்ளின்ந்த சக்தியை நாம் பயன்படுத்துவோம். நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். ஒரு புதிய உலகத்திற்காகப் போராடுவோம். மனிதர்கள் உழைப்பதற்கு ஒரு வாய்ப்பளிக்கும் ஒரு கண்ணியமான உலகத்திற்காக, இளைஞ்ர்களுக்கு ஓர் எதிர்காலத்தை உருவாக்கும் உலகத்திற்காக, வயதான காலத்தில் பாதுகாப்பளிக்கும் ஓர் உலகத்திற்காகப் போராடுவோம்! இவற்றையெல்லாம் தருவோம் என்கிற வாக்குறுதியுடன்தான் மிருகங்கள் அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பொய் சொல்கி/றார்கள்! அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில்லை! எப்போதும் நிறைவேற்றப் போவதில்லை!
சர்வாதிகாரிகள் தம்மைத் தாமே விடுவித்துக் கொள்கிறார்கள்; ஆனால் மற்றவர்களை அடிமையாக்கி விடுகிறார்கள். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற நாம் போராடுவோம். இந்த உலகத்தை விடுவிக்க, தேசிய எல்லைகளை அகற்ற, பேராசையை, வெறுப்பை, சகிப்பற்ற தன்மயை ஒழிக்க நாம் போராடுவோம். அறிவுப்பூர்வமான ஓர் உலகத்திற்காக, அறிவியலும், முன்னேற்றமும் எல்லா மனிதர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒர் உலகத்திற்காக நாம் போராடுவோம். வீரர்களே! ஜனநாயகத்தின் பெயரால் நாம் ஒன்றுபடுவோம்!
(தமிழில்: ஆர். விஜயசங்கர்)