“சினிமா தயாரிக்க சரியான இடம் சென்னை தான்” — ‘எல்ஜிஎம்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் சாக் ஷி தோனி ஓப்பன் டாக்!
தோனி எண்டெர்டெய்ன்மெண்ட் பேனரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி தனது மனைவி சாக் ஷி தோனியுடன் இணைந்து ‘எல்ஜிஎம்’ என்ற படத்தை முதல் படைப்பாக தயாரித்துள்ளார். இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடந்தது. இவ்விழாவில்
சாக்ஷி தோனி பேசியபோது,
இந்தப் படத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் என் நண்பர்கள் மற்றும் எங்களுக்கு தெரிந்த பல பேரின் வாழ்க்கையில் இப்படத்தில் வரும் சம்பவங்கள் உண்மையாகவே நடந்திருக்கிறது. அப்பொழுது தான் தோன்றியது ஏன் இதை ஒரு படமாக எடுக்கக்கூடாது என்று. இப்படித் தான் இப்படம் உருவானது. இதனை தமிழில் எடுப்பதற்கு மிக முக்கியக் காரணம் என் கணவர் தோனி தான். நாங்கள் எல்லோருமே தமிழில் படத் தயாரிப்பு தொடங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு தான் இருந்தோம். ஏனென்றால் முதல்முறையாக படத் தயாரிப்பில் இறங்கும் போது ஒரு மிகப்பெரிய சப்போர்ட் வேண்டும். இது போன்ற ஒரு சிறப்பான துவக்கத்திற்கு சென்னை சரியான இடமாக இருக்கும் என்று தோன்றியது.
இயக்குனர் ரமேஷ் தமிழ் மணி பேசியபோது,
”முதலில், தோனி சார் மற்றும் சாக்ஷி தோனி மேடமுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சாக்ஷி மேடம் தான் எனக்கு இந்த அருமையான கதைக் கருவை கொடுத்தார். அதன்பின் நாங்கள் இதுகுறித்து நிறைய விவாதித்து இக்கதையை உருவாக்கினோம். எனக்கு இந்த படக்குழு ஒரு குடும்பம் போல் இருந்த காரணத்தால், நான் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் படத்தில் வேலை செய்தேன். எனக்கு கிடைத்த இந்த சிறப்பான குழுவுக்காக நான் நன்றி கூறிக் கொள்கிறேன். LGM ஒரு ஜாலியான திரைப்படம்.
இப்படத்தின் உருவாக்கத்தில் எனக்கு எந்தவிதமான சிரமமும் ஏற்படவில்லை. இப்படம் உலகமெங்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையைப் பேசுகிறது. எல்லோருமே இதை அனுபவித்து இருப்பார்கள்.சாக்ஷி தோனி மேடம் மருமகளும் மாமியாரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஒரு ட்ரிப் போகிறார்கள் என்று ஒரு அற்புதமான ஐடியாவை எங்களுக்குக் கொடுத்தார்கள். இப்பட உருவாக்கத்தின் போதே சாக்ஷி தோனி மேடம் எங்களுடனேயே இருந்து எல்லா காட்சிகளையும் பார்த்துக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட நாங்கள் மூன்று நான்கு முறை இக்கதையை திருத்தி எழுதினோம். தோனி சார் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததே இல்லை. ஆனால் எப்போதும் எங்களுக்கு பக்கபலமாக இருந்து தேவைப்படும் ஆலோசனைகளை வெளியில் இருந்தே கொடுத்துக் கொண்டிருந்தார். மேலும் முடிவைப் பற்றி கவலைப்படாதிருங்கள். ஆனால் உங்கள் செயல் திட்டங்களில் முழு கவனத்தோடு இருங்கள் “Dont worry about the result, Follow the process” என்று ஊக்குவித்தார்” என்று பேசினார்.
நடிகை நதியா பேசியபோது,
”அனைவருக்கும் வணக்கம்! தோனி கம்பெனியில் இருந்து அழைப்பு வந்த போது, பெண்களின் கிரிக்கெட் பிரிமியர் லீக்-காக தான் அழைக்கிறார்கள் என்று நினைத்தேன். தோனி படம் எடுக்கிறார் என்பது ஆச்சர்யமாக தான் இருந்தது. ஒரு வேளை இது ப்ராங்க் போன்காலாக இருக்குமோ என்று கூடத் தோன்றியது. நான் அதிகமாக கிரிக்கெட் விளையாடும் ஒரு குடும்பப் பிண்ணனியில் இருந்து வந்தவள், என் கணவரின் உறவினர்கள் பலர் கிரிக்கெட் விளையாடுபவர்கள். பல கோடி மக்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு நபராக வழிகாட்டியாக இருந்து வரும் தோனி அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
LGM ஒரு ஜாலியான படம், இப்படம் உறவுகளை பற்றி பேசும். இப்படம் எல்லா உறவுகளுக்கும் ஒரு பாசிட்டிவ்-வான எனர்ஜியைக் கொடுக்கும் என்று நம்புகிறேன். இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி மிகச்சிறப்பான திறமை வாய்ந்தவர். அது போல் இப்படத்தின் கதைக்கரு மிகவும் தனித்துவம் வாய்ந்த்து. அதற்காக சாக்ஷி தோனிஷி அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ” என்று பேசினார்.
-மதுரை மாறன்