கோவையில் திமுக கட்சியினர் இடையே முதல்வர் நடத்திய அதிரடி ஆய்வு !
தமிழகத்தில் அரசால் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்கிறதா? அரசின் வளர்ச்சி பணிகள் சரியாக நடக்கின்றனவா? என்பதை மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து, நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொள்ள போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி தனது முதல் கள ஆய்வினை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவையில் தொடங்கினார்.
கோவை மாவட்டம் சுந்தராபுரத்தை அடுத்துள்ள சிட்கோ பகுதியில் தொழிலாளர்கள் தங்கும் விடுதி கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். சிட்கோ தங்கும் விடுதி கட்டடப் பணிகள் முடிவுக்கு வரும் நிலையில் முதல்வர் நேரில் ஆய்வு செய்தார். தொழிலாளர்களுக்கான புதிய விடுதி அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்நாளில் அரசு நிகழ்ச்சிகளை ஆய்வு செய்த பிறகு கோவையை சேர்ந்த கட்சியினருக்கும் ஆய்வு நடத்தினர் அதில் முதல்வர் பேசும் போது….
நம்முடைய கழகத்திற்கு உள்ள கட்டமைப்பு தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சிக்கும் இல்லை. நாம் நினைத்தால் எந்தச் செய்தியையும் நினைத்த நேரத்தில் ஆறரைக் கோடி வாக்காளர்களிடமும் கொண்டு சேர்த்துவிட முடியும். எனவே நம் சாதனைகளைக் கொண்டு சேர்க்கும் பணிகளைச் செய்ய வேண்டும்.
இளைஞர்களுக்கு கொள்கைகளை விதைப்பது மிக முக்கியம். அவர்கள் தான் எதிர்காலத்திற்கான விதைகள். பேச்சாளர்களை அழைத்து பாசறைக் கூட்டங்களை நடத்துங்கள். ஒவ்வொரு பகுதியிலும் கொள்கை வீரர்களாக பத்து அல்லது பதினைந்து இளைஞர்களை உருவாக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமை.
நிர்வாகிகள் அவரவர் குடும்பத்திற்கும் நேரத்தை செலவிடுங்கள். தொழில் செய்பவர்களாக இருந்தால் அதற்கும் கவனம் செலுத்துங்கள். அதே சமயம் ஒரு நாளில் இரண்டு மணி நேரத்தை கட்சிக்காக ஒதுக்குங்கள். வார இறுதியில் ஒரு நாளை முழுமையாக கழகப்பணிக்கு ஒதுக்குங்கள்.
எந்த எதிர்பார்ப்புமின்றி கழகத்திற்காக உழைக்கும் தொண்டர்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். உங்களுக்கு கீழாக உள்ள கழகத்தினருக்கு நீங்கள்தான் பலமாக இருக்க வேண்டும். பாலமாகவும் இருக்க வேண்டும் – நிர்வாகிகளுக்கு வலியுறுத்தல்
நிர்வாகிகளை மினிட் புத்தகங்களைக் கொண்டு வரச் செய்து அவற்றை ஆய்வு செய்தார்.
உள்ளே செல்போன் அனுமதியில்லை என்பதில் கடைசி வரை உறுதியாக இருந்தனர்.