“குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று” என்ற பாடல் நினைவு கூறும் அதே வேளையில் சின்னப்பயலே சேதி கேளடா என்ற பாடலில் வரும் “பழைய பொய்யடா” என்ற வார்த்தையும் நினைவுக்கு வருகிறது.
சமீபகாலமாக தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு வகையான குற்றச் சம்பவங்களில் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களே பெரும்பாலும் ஈடுபடுகின்றனர். இப்படி இளம் குற்றவாளிகள் அதிகரிக்க காரணம் என்ன என்று பார்க்கும் பொழுது பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் கிடைக்கின்றன. ஒருபுறம் சிறுவர்கள் குற்றவாளி யாக உருவாக்கப்படுகிறார்கள் மற்றொருபுறம் சமூகச் சூழலால் சிறுவர்கள் குற்றவாளியாக மாறுகின்றார்கள்.
சிறுவர்களை குற்றவாளியாக மாற்றும் சமூகக் காரணங்கள் :-
சமீபகாலமாக இளம் குற்றவாளிகள் அதிகரித்திருப்பது உண்மையே, கொரோனோ ஊரடங்கு காலத்தில் பலர் இளம் குற்றவாளிகளாக உருவெடுத்து இருக்கின்றனர். ஒரே சிறுவன் மீண்டும் மீண்டும் குற்ற சம்பவங்கள் ஈடுபடுவது என்பதும் அதிகரித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் சிறுவர்களின் குடும்பப் பொருளாதாரப் பின்னணியே!
குடும்பச் சுமையால் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்கும் சிறுவர்கள் போதைப் பழக்கத்திற்கு தள்ளப்படுகின்றனர். மேலும் மிகவும் கரடுமுரடான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். திரைப்படங்களும் சிறுவர்கள் மனதில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் சொல்லப்போனால் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் இளம் சிறார்களிடம் விசாரிக்கும் பொழுது அந்தப் படத்தில் ஒரு முன்னணி நடிகரின் பெயரை கூறி அவர் அந்த படத்தில் அப்படி இருந்தார், இந்தப் படத்தில் இப்படி இருந்தார், ரவுடிகள் தான் கெத்து, நான் மாஸா இருக்கணும், எல்லோரும் எனக்கு பயப்படனும், நாலு பேரு அடிச்சா தான் பெரிய ஆளு, பொருள் எடுத்து செஞ்சிருவேன், பத்து ரூபாய்க்கே பொட்டலம் கிடைக்குது, என்று அவர்கள் பேசும் பேச்சுக்கள் நாளைய தலைமுறையை பற்றிய கவலையை நம்மிடம் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் பயத்தையும் ஏற்படுத்துகிறது.