’கைமேரா’ விழாவில் பேசத் தயங்கிய ஹீரோ!
மனிதனின் உடலில் விலங்குகளின் ’செல்’கள் புகுத்தப்பட்டு அவனுக்குள் மிருக குணம் உருவானால் என்ன நடக்கும் என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘கைமேரா’. இதில் ஹீரோவாக கன்னடத்தைச் சேர்ந்த எல்.என்.டி. எத்திஷ், ஹீரோயின்களாக செளமியா, கிருஷ்ண நந்து, ஞானேஸ்வரி ஆகியோர் நடிக்கிறார்கள். மற்ற கேரக்டர்களில் தாரை கிருஷ்ணன், ரஞ்சித்குமார் ஆகியோரும் முக்கியமான கேரக்டரில் படத்தின் டைரக்டர் மாணிக் ஜெய்யும் நடிக்கின்றனர். இந்த மாணிக் ஜெய், இதற்கு முன்பு ‘பரமு’, ’செல்ஃபிஷ்’ படங்களை டைரக்ட் பண்ணியுள்ளார். படத்திற்கு இசை : விக்னேஷ் ராஜா, பி.ஆர்.ஓ.: ஏ.ஜான்.
விரைவில் ’கைமேரா’ ரிலீசாவதால் படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக டைரக்டர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, மீரா கதிரவன், நடிகை கோமல் சர்மா ஆகியோர் வந்திருந்தனர்.
”படத்தில் உங்க கேரக்டர் டோட்டலா நெகடிவ்வா இருக்கும்னு எத்திஷிடம் சொன்னேன். பரவாயில்ல நான் நடிக்கிறேன் என்றார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டது. சில நடிகர்கள் மட்டும் பெங்களூர்க்காரர்கள்” என்றார் டைரக்டர் மாணிக் ஜெய்.
‘திறமை இல்லாட்டியும் செல்வாக்கு இருந்தா சினிமாவில் ஜெயிக்கும் நிலை உள்ளது” என கொந்தளித்தார் ஹீரோயின் செளமியா.
மியூசிக் டைரக்டர் விக்னேஷ் ராஜா, கவிஞர் கார்கோ, நடிகர் தாரை கிருஷ்ணன், வி.எஃப்.எக்ஸ்ரோஹித் ஆகியோர் படத்தின் கண்டெண்ட் ஸ்ட்ராங்காக இருப்பதாகவும் படம் வெற்றி பெறும் நம்பிக்கை இருப்பதாகவும் பேசினார்கள்.
சிறப்பு விருந்தினர்களில் மீரா கதிரவனும் கோமல் சர்மாவும் சுருக்கமாக பேசி அமர்ந்தனர். ஆனால் ஆர்.வி.உதயகுமாரும் பேரரசுவும் வழக்கம் போல வழவழா, கொழகொழான்னு பேசி அரங்கில் இருந்தவர்களை அயற்சியாக்கினார்கள்.
ஹீரோ எத்திஷுக்கு கன்னடம் தாய் மொழி என்பதால், தமிழில் பேச எவ்வளவோ முயற்சித்தும் அவரால் பேச முடியவில்லை. சில நிமிடங்கள் மைக் முன்பு அமைதியாக நின்று கொண்டிருந்தவரைப் பார்த்து, “பரவாயில்ல கன்னடத்துலேயே பேசுங்க. தமிழர்கள் நாங்கள் ஏற்றுக் கொள்வோம்” என தைரியம் சொன்னார் டைரக்டர் பேரரசு.
— மதுரை மாறன்