செல்லப்பிராணி மோகம் … ஆடம்பர ஆசையால் அழியும் அரிய உயிரினங்கள்!
ஒரு பிரபல நடிகர் (சீயான் விக்ரம்) தன்னுடைய செல்ல பிராணியான “லார் கிப்பனுடன்” (Lar Gibbon) வெளியிட்ட வீடியோ பரவலான கவனம் பெற்றது. அந்த வகை கிப்பன் மலேசியா காடுகளில் மட்டுமே காணப்படக் கூடியது. வருகிற செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் மூன்று கிப்பன்கள் மணிப்பூரில் இருந்து ஈரோடு வந்து சேர்ந்துள்ளன. ஒரு கிப்பன் இறந்துவிட இரண்டு கிப்பன்களில் ஒன்று தான் அந்த நடிகரை வந்தடைந்தது.
அவருடன் விளையாடிக் கொண்டிருக்கும் இந்த கிப்பன் தரைவழியில் வடகிழக்கு எல்லையின் வழியாக கடத்தப்பட்டு வந்திருக்கவே வாய்ப்பு அதிகம். (நடிகர் கடத்தினார் எனச்சொல்லவில்லை. தோற்றுவாய் கடத்தலாக இருக்க வாய்ப்பு அதிகம்) அப்படி கடத்தப்படாமல் முறையான வழியில் இந்தியாவிற்கு வந்திருக்கும் என்றால் ‘CITES’ உரிமம் பெற்றிருக்க வேண்டும். அப்படி எதுவும் இந்த சம்பவத்தில் இருப்பதாக தெரியவில்லை.
இது ஒரு புறம். அயல்நாட்டு விலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் மோகம் இன்றைக்கு மிக அதிகமாக வெறி போல வளர்ந்திருக்கின்றது. இது ஆபத்தான போக்கு. இந்த கிப்பன்கள் பெரும்பாலும் பச்சிளம் பருவத்தில் இருக்கும் பொழுதே கடத்தப்படுகின்றன. பல வேளைகளில் தாய் கிப்பனை விட்டுப் பிரியாமல் பிணைந்திருக்கும் இவற்றை எப்படி கடத்தல்காரர்கள் பிடிக்கிறார்கள் என அறிந்தால் ரத்தக்கண்ணீர் வரும். பெரும் உயரத்தில் இருக்கும் தாய் கிப்பனை சுட்டுக்கொன்று விட்டு, அதைக் கட்டிப்பிடித்திருக்கும் குட்டி கிப்பனைப் பிடித்து கடத்தி வருகிறார்கள். மயக்க மருந்து கொடுத்து, சிறிய பைகள்/பெட்டிகளில் அடைத்து அவை வேறொரு பகுதிக்கு வருவதற்குள் அதிர்ச்சியில் இறந்து போவது ஏராளமான சமயங்களில் நடக்கிறது.
இயல்பான வாழ்விடத்தை விட்டு இங்கே இருக்கும் கனவான்களின் வேடிக்கைக்காக அவை நாடு கடத்தப்படுகின்றன. இவற்றின் மரபணுக்கள் கிட்டத்தட்ட மனிதர்களை ஒத்திருப்பவை. இவை என்ன மாதிரியான வியாதி/கிருமிகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் என யாருக்கும் தெரியாது. அவை இங்கே புழங்குகையில் அக்கிருமிகள் உருமாறி நம்மைப் பீடிப்பது பேராபத்து. இன்னும் இந்த செல்லப்பிராணி வேட்டையில் புலம்புவதற்கும், கவலைப்படுவதற்கும் ஏராளம் உண்டு.
எடுத்துக்காட்டிற்கு இரண்டு மட்டும் சொல்கிறேன். Red eared Slider Turtle எனும் உயிரினம் invasive species. அதை இந்தியாவிற்குள் கடத்திக் கொண்டு வந்து கேரளாவின் நீர்நிலைகளை ஆக்கிரமித்து விட்டன. கடந்தாண்டு பெங்களூரு விமான நிலையத்தில் இத்தகைய ஒரு கடத்தல் முறியடிக்கப்பட்டு அவை கடத்தி வரப்பட்ட சிங்கப்பூருக்கு (?!) திருப்பி அனுப்பப்பட்டன. அங்கே இவை அனைத்தும் அரசால் கொல்லப்பட்டன. காரணம்? அவை அனைத்தும் Salmonella நோய்த்தொற்றுக்கு ஆளாகி இருந்தன. இவற்றைப் பலர் கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் பலர் நச்சுப்பாம்புகளை பிராணியாக வளர்க்கிறார்கள். அவை வான்வழியாக வந்திறங்கி பேருந்தில் மூட்டை கட்டப்பட்டு செல்லப்பிராணி விற்பனையாளர்களை (இவர்களில் பலர் கடத்தல் வலைப்பின்னலை அறிந்தவர்கள் தான் ) வந்தடைகின்றன. இந்த பாம்புகள் யாரையேனும் தீண்டினால் விஷ முறிவிற்கு வழி எங்கே? வந்து சேரும் வழியிலோ, விமான நிலையத்தில் பையை எடுத்துப்போடும் பணியாளரையோ பதம் பார்த்தால் அது வெறும் மர்ம மரணம் மட்டுமே.
இப்போதைக்கு இது போதுமென நினைக்கிறேன். மனிதர்களின் விளையாட்டிற்கும், ஆடம்பரத்திற்கும் அரிய விலங்கினங்கள் அழிக்கப்படுகின்றன, கடத்தப்படுகின்றன. இவ்வகை அயல்நாட்டு உயிரினங்களை வளர்க்கும் நபர்களின் கரங்களில் ரத்தமும், எங்கோ நடந்த சட்டமீறலும் படிந்தே இருக்கின்றது. தயவு செய்து இத்தகைய வீடியோக்களில் ‘so cute’ என எழுதாதீர்கள்.
— பூ.கொ. சரவணன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.