சாதி, சபை வேறுபாடு கடந்த கிறிஸ்துவ அரசியல் கூட்டமைப்பு” –  தடம் பதித்த தமிழக மக்கள் நல கட்சி !

காலையில் விதை ஊன்றி மாலையில் கனி பறித்திடும் பேராசையில் இந்த அரசியல் கட்சியை ஆரம்பிக்கவில்லை; இன்று நாம்.....

0

சாதி, சபை வேறுபாடு கடந்த கிறிஸ்துவ அரசியல் கூட்டமைப்பு” –  தடம் பதித்த தமிழக மக்கள் நல கட்சி

மனிதனின் பங்களிப்பு இல்லாமல் கடவுள்கூட எந்த ஒரு அதிசயத்தையும் செய்ததில்லை”

தமிழக மக்கள் நல கட்சி
தமிழக மக்கள் நல கட்சி

எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வரும் நிலையில், சபை வேறுபாடு, சாதி வேறுபாடு கடந்து கிறிஸ்துவர்களாக ஒருங்கிணைய வேண்டும் நமக்கான வாக்கு வங்கியை தனித்துக்காட்ட வேண்டும் என அறைகூவல் விடுத்திருக்கிறார்கள் தமிழக மக்கள் நல கட்சியினர்.

கிறிஸ்தவர்களாக மதம் மாறிய பட்டியலினத்தவருக்கு இட ஒதுக்கீட்டை மறுக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு (பட்டியலிடப்பட்ட சாதிகள்) ஆணையின் 3-வது பிரிவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு, உச்சநீதிமன்றத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வழக்கை நடத்தி வரும் பேராயர் ஆர்.தனராஜ், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிராங்க்ளின் சீசர் தாமஸ் ஆகியோரின் முன்னெடுப்பில் தோற்றுவிக்கப்பட்டது தான், தமிழக மக்கள் நல கட்சி என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழக மக்கள் நல கட்சியின் இரண்டாண்டு நிறைவு, மூன்றாவது அரசியல் மாநாடு மற்றும் கிறிஸ்துவ அரசியல் கூட்டமைப்பின் அறிமுகம் ஆகிய முப்பெரும் விழா, அக்-21 அன்று திருச்சி ( TMMS )  டி.எம்.எஸ்.எஸ். தாமஸ் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிராங்க்ளின் சீசர் தாமஸ்
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிராங்க்ளின் சீசர் தாமஸ்

தமிழக மக்கள் நல கட்சியின் தலைவர் (பொறுப்பு) ஆர்.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பேராயர் ஆர்.தனராஜ், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிராங்க்ளின் சீசர் தாமஸ், வழக்கறிஞர் ஜே.தாஸபிரகாஷ், வழக்கறிஞர் சி.முத்துக்கண்ணு, ஏசுதாஸ், சிங் டயர்ஸ் ராஜ்நிர்மல்சிங் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டதோடு; இந்திய தலித் கிறிஸ்தவர் நல இயக்கத்தை சேர்ந்த டாக்டர் ஆர்.ராம்நாத், அருட்பணி எஃப்.ஞானப்பிரகாசம், தலித் கிறிஸ்தவர் தேசியப் பேரவை ஜான்சன்துரை, கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் போதகர் ஆர்.இருதயராஜ், போதகர் சேவியர், திராவிட ஜனநாயக மக்கள் கட்சியின் டாக்டர் ஆர்.பாஸ்கர், நல்ல சமாரியன் இயக்கத்தின் டி.ஆர்.சோபனா உள்ளிட்டு பல்வேறு கிறிஸ்துவ இயக்கங்களை சேர்ந்த முன்னணி தலைவர்களும் பங்கேற்றனர்.

சமத்துவ, சமய சார்பற்ற, ஜனநாயக இந்தியாவை வென்றெடுக்க வேண்டும்; டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வழங்கிய ஒப்பற்ற நமது நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும்; கிராமப்புற மக்களை அடிமைப்படுத்த விளையும் தற்போதைய இன, மத சார்புடைய ஒன்றிய அரசின் மக்கள் விரோத சட்ட வரைவுகளை எதிர்க்க வேண்டும்; கிராமப்புறங்கள் வளம் பெற உரிய நீர் மேலாண்மையைச் செம்மையாகச் செய்ய வலியுறுத்த வேண்டும்; கிறித்துவ மக்கள் தங்கள் வாக்கு வங்கி அரசியலைத் துவங்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை பங்கேற்பாளர்களின் பலத்த கரவொலிகளுக்கிடையே நிறைவேற்றினர்.

தமிழக மக்கள் நல கட்சி (2)
தமிழக மக்கள் நல கட்சி

கிறிஸ்துவ அரசியல் கூட்டமைப்பு ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை விளக்கும் விதமாகவும், அதன் நோக்கத்தை அறிமுகப்படுத்தும் வகையிலும் பேசிய தமிழக மக்கள் நல கட்சியின் பொதுச்செயலரும் சங்கரன்கோவிலை சேர்ந்த பேராயருமான ஆர்.தனராஜ் தனது உரையில், ”இசுலாமிய மார்க்கத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் அங்கம் வகிப்பவர்களாக இருந்தாலும், அவரவர்கள் சார்ந்திருக்கும் பகுதி அளவிலான ஜமாத்களில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என முடிவு செய்கிறார்களோ, அதன்படியே அவர்கள் செயல்படுகிறார்கள்.

இதன் காரணமாகத்தான் இசுலாமியர்களை ஒரு வாக்கு வங்கியாக அனைத்து அரசியல் கட்சிகளுமே முக்கியத்துவம் வழங்குகின்றன. அதுபோலவே, கிறிஸ்துவர்களும் நமக்கான வாக்கு வங்கியை யாரிடமும் அடகு வைக்க அனுமதிக்காமல் தனித்துவமாக நமக்கான வாக்கு வங்கியை நிலைநிறுத்தியாக வேண்டும். இந்த நோக்கத்திலிருந்துதான் பல்வேறு கிறித்துவ அமைப்புகள் ஒன்று சேர்ந்து, “கிறிஸ்துவ அரசியல் கூட்டமைப்பாக” கரம் பற்றியிருக்கிறோம்” என்றார்.

கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்
கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்

சி.எஸ்.ஐ., சி.என்.ஐ., பெந்தகோஸ்தே என பொதுவில் கிறிஸ்துவம் மூன்று முப்பெரும் பிரிவுகளாக பிரிந்து கிடப்பது ஒருபுறமிருக்க; ஒரே சபைக்குள்ளேயே நாடார் கிறிஸ்துவர், ரெட்டியார் கிறிஸ்துவர், கிறிஸ்துவ பறையர், கிறிஸ்துவ பள்ளர், கிறிஸ்துவ அருந்ததியர் என சாதி ரீதியில் பாகுபாடு பாராட்டப்படுவதை சுட்டிக்காட்டி, அனைவரும் இயேசுவின் பிள்ளைகளாக கிறிஸ்துவர்களாக ஒன்றிணைய வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்பதாக இம்மாநாடு எடுத்துரைத்தது.

தமிழகம் முழுவதிலுமுள்ள 44 இலட்சம் கிறிஸ்துவர்களுள், 30 இலட்சம் பேர் பட்டியலினத்தை சேர்ந்த கிறிஸ்துவர்கள். ஆனாலும், இவர்களிலிருந்து எந்த ஒரு பிரதிநிதியும் தற்போதைய முன்னணி அரசியல் கட்சிகளின் உயர்மட்ட தலைவர்களாக உருவெடுக்கவில்லையே, ஏன்? என்ற கேள்வியை எழுப்பியது, இம்மாநாடு.

தமிழக மக்கள் நல கட்சியினரின் தலையீட்டில், கிறிஸ்துவ சபைக்குள்ளேயே நிலவிவந்த சாதிய தீண்டாமைக்கு எதிராக நடத்திய போராட்டங்களை பட்டியலிட்டு, அத்தகைய சாதிபாகுபாடுடன் நடக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் குறிப்பாக, தாழ்த்தப்பட்டோர் என்றும் தலித் என்றும் அழைக்கப்படுவதை அறவே தவிர்க்க வேண்டும், சட்ட வரையறையின்படி பட்டியலினத்தவர் என்றே அழைக்க வேண்டும் என அறிவுறுத்தியது, இம்மாநாடு.

தமிழக மக்கள் நல கட்சி அழைப்பிதல்
தமிழக மக்கள் நல கட்சி அழைப்பிதல்

கேரள மாநிலத்தில் பாதிரியார் உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த கிறிஸ்துவர்களே பாஜக அண்ணாமலை உள்ளிட்ட சங்பரிவார அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் போக்கை சுட்டிக்காட்டி, முதலில் நமக்கு யார் எதிரிகள் என்பதை தீர்மானிக்க வேண்டும், அதை உணர வேண்டும் என சுட்டிக்காட்டியிருக்கிறது, இம்மாநாடு.

நிறைவாக பேசிய, பேராயர் தன்ராஜ், “ஆயிரம் பேர் பயணிக்கும் பாதையை தவிர்த்து, வெகுசிலரோடு தனிப்பாதையில் செல்கிறேன் என்றால், உண்மையின் பக்கம் பயணிக்கிறேன் என்பது தான் அதன் பொருள். ஆயிரம் பேர் என்பதால், அநியாயத்தின் பின் நாம் சென்று விட முடியாது. காலையில் விதை ஊன்றி மாலையில் கனி பறித்திடும் பேராசையில் இந்த அரசியல் கட்சியை ஆரம்பிக்கவில்லை; இன்று நாம் விதை ஊன்றியிருக்கிறோம். எதிர்காலத்தில் என்றாவது ஒருநாள் நல்ல பலனை கொடுக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையிலிருந்துதான் இந்த பயணத்தை தொடங்கியிருக்கிறோம்.

தமிழக மக்கள் நல கட்சி பொது செயலாளர் பேராயர் தன்ராஜ்
தமிழக மக்கள் நல கட்சி பொது செயலாளர் பேராயர் தன்ராஜ்

இங்கிலாந்திலும், காலனிய ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவிலும் கிறிஸ்துவ இயக்கங்கள் – கிறிஸ்துவ ஆளுமைகள் செயல்பட்டதன் காரணமாகத்தான் இங்கே கிறிஸ்துவ சபைகள் தோன்றின. நாடெங்கிலும் பரவலாக கல்வி நிறுவனங்களை தோற்றுவித்தன. இன்றைய சங்பரிவார அமைப்பினரின் ஆட்சியின் கீழ் இவையெல்லாம் நினைத்து பார்க்க முடியாத ஒன்று.

ஆகவே, பூட்டிய அறைக்குள் அமரந்து கொண்டு ஜெபம் செய்தால் மட்டுமே போதாது. ஜெபமும் செயல்பாடும் ஒன்றிணைய வேண்டும். மனிதனின் பங்களிப்பு இல்லாமல் இயேசு கிறிஸ்துவே கூட எந்த ஒரு அதிசயத்தையும் செய்ததில்லை.” என நயமாக, தமக்கேயுரிய போதகர் பாணியில் அரசியலை எடுத்துரைத்தார் அவர்.

மதபோதகர் என்ற கௌவரத்தோடு திருச்சபைக்குள்ளாக மதபோதனை செய்த படியே  நாட்களை கடத்துவதற்கான வாய்ப்பும் வசதியும் பெற்ற போதிலும், சாதி, மத வேறுபாடு கடந்து கிறிஸ்தவர்களாக அரசியல் சக்தியாக ஒன்றிணைய வேண்டுமென்ற நோக்கத்தோடு சபைக்கு வெளியே காலெடுத்து வைத்திருப்பதோடு, கிறிஸ்துவ அரசியல் கூட்டமைப்பாகவும் உருவெடுத்திருக்கிறார்கள் என்பதுதான் இம்மாநாட்டின் ஹைலைட்டான விசயம். தமிழகத்தின் தனிச்சிறப்பான அம்சம் இதுவென்று சொல்வதும் பொருத்தமான ஒன்றுதான்.

– வே.தினகரன்.

Leave A Reply

Your email address will not be published.