சார் ஒரு நிமிசம் … சிகரெட் பிடிப்பவரா நீங்கள் ?
நினைத்தாலும் நிறுத்தவே முடியாது என்ற பட்டியலில் “குடி”க்கு அடுத்து இடம் பெற்றிருப்பது சிகரெட் புகைக்கும் பழக்கம்.
புகைப்பதை எந்த வயதில் நிறுத்தினாலும் அதன் பலன் ஆயுளுக்கும் தொடரும் ஆயுளையும் கூட்டும் என்கிறார், திருச்சி காவேரி மருத்துவமனை நுரையீரல் நிபுணர் டாக்டர். கே. ராமசுப்ரமணியன்.
ஆயுளை குறைக்கும்; மாரடைப்பு வரும்; வாய்புற்று நோய் வரும் என்ற வழக்கமான எச்சரிக்கையாக மட்டும் இன்றி, இன்சுலின் சுரப்பையும் பாதித்து சர்க்கரை நோயையும் உண்டாக்கிவிடும் என எச்சரிக்கிறார்.

“புகைபிடிப்பதை முழுமையாக நிறுத்துவது அல்லது புகைபிடிக்கும் எண்ணிக்கையை குறைப்பது, நுரையீரல் மற்றும் இரத்த நாளம் தொடர்பான நோய்கள் மற்றும் பல்வேறு புற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கிறது,” என்கிறார்.
“புகைபிடிப்பதை நிறுத்துவதால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளும் குறைகின்றன. மிக முக்கியமாக, சிகரெட்டில் உள்ள நிகோடின் நம் உடலில் போதுமான அளவு இன்சுலினின் செயல் திறனை (insulin resistance) குறைத்து விடுகிறது.
எனவே, புகைபிடிப்பதை நிறுத்தினால் தான் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். மேலும், புகைப்பழக்கத்தால் இனப்பெருக்க மற்றும் பாலியல் உறுப்புகளின் ஆரோக்கியம் கெடுகிறது, இரைப்பையில் புண்கள் ஏற்படுகிறது. மேலும் கண்புரை மற்றும் நுரையீரல் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது” என்பதாக சிகரெட் பழக்கத்தின் பல்முனை தாக்குதலை பட்டியலிடுகிறார் டாக்டர். கே. ராமசுப்ரமணியன்.

“உலகளவில் இறப்பிற்கு புகைபிடித்தல் முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 77 லட்சம் பேர் புகைப் பிடிப்பதால் இறக்கின்றனர். இந்த எண்ணிக்கை 2030 க்குள் 80 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புகைபிடித்தல் தொடர்பான இறப்புகளுக்கு காரணமான முக்கிய நோய்களில் நுரையீரல், இருதய நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஆகியவை அடங்கும். புகைபிடித்தல் ஆயுட்காலத்தை 6 முதல் 10 ஆண்டுகள் குறைக்கிறது. மேலும் 90% வாய் புற்றுநோய் புகையிலை பழக்கத்தால் ஏற்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
“சிகரெட்டில் நிகோடின், தார் மற்றும் கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளன. அவை உடலின் திசுக்களை, குறிப்பாக நுரையீரல் மற்றும் இரத்த நாளங்களை எரிச்சலூட்டி சேதப்படுத்துகின்றன. இது நாள்பட்ட அழற்சிக்கு வழிவகுக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. பல உறுப்புகளை செயலிழக்கச் செய்கிறது. கால்கள், கல்லீரல், கண்கள் அல்லது மூளையில் இரத்த உறைவுகளுக்கு வழிவகுக்கிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் அளவை கூட்டி, தமனி, இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது,” என எச்சரிக்கிறார்.
இந்தியாவில் நிலவும் புகைபிடிக்கும் பழக்கம் குறித்து பேசிய டாக்டர் ராமசுப்ரமணியன், சிகரெட், பைப், ஹூக்கா, பீடி போன்ற புகைக்கும் முறைகளிலும் இ-சிகரெட்டுகள், பான் மெல்லுதல், மூக்குப்பொடி போன்ற புகை அற்ற வடிவங்களிலும் புகையிலை பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சிகரெட் புகைத்தல் மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. உலகளவில், 100 கோடி மக்கள் புகையிலையை பயன்படுத்துகின்றனர். அவர்களில் 80% பேர் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் வாழ்கின்றனர் என்றார்.
“இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 7 கோடி ஆகும். நடுத்தர வயது ஆண்களிடையே (50-64 வயது) புகைபிடிக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது. பெரும்பாலானவர்கள் 14 முதல் 25 வயதுக்குள் புகைப்பிடிக்கத் தொடங்குகின்றனர்,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
புகைபிடிப்பதை நிறுத்திய ஒரு வருடத்திற்குள் நுரையீரல் புத்துயிர் பெறத் தொடங்குகிறது. 10 முதல் 15 ஆண்டுகள் புகைப் பிடிக்காத போது பல உடல்நலப் பிரச்சனைகளின் அபாயம் 50% க்கும் அதிகமாக குறைகிறது. புகைபிடிப்பதை நிறுத்துவது எலும்பு இழப்பையும், எலும்பு முறிவுகளின் அபாயத்தையும் குறைக்கிறது.
எந்த வயதிலும் புகைபிடிப்பதை நிறுத்துவது தனிநபரின் நல்வாழ்வை மட்டுமல்லாமல், அவரது குடும்பத்தையும் சமூகத்தையும் மேம்படுத்துகிறது. வளர்ந்த நாடுகளில் காணப்படும் அளவிற்கு நம் நாட்டிலும் புகையிலை பயன்பாட்டை குறைக்க இன்னும் அதிக விழிப்புணர்வு தேவை,” என்பதை சுட்டிக் காட்டுகிறார் டாக்டர். ராமசுப்ரமணியன்.
— இரா.சந்திரமோகன்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.