திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரிப் பேராசிரியரின் ஆதன் உரையாடல் நூல் வெளியீடு !
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரிப் பேராசிரியரின் ஆதன் உரையாடல் நூல் வெளியீடு. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறை பேராசிரியர் முனைவர் ஜா.சலேத். தன்னம்பிக்கை நூல்கள் கவிதை நூல்கள் இலக்கிய ஆய்வுகள் என பல நூல்களைப் படைத்த இவரின் 37 ஆவது நூலான ஆதன் உரையாடல் நூலை வெளியீட்டு விழா திருச்சி பிரீஸ் ரெசிடென்சியில் நடைபெற்றது.
செயின்ட் ஜோசப் கல்லூரிச் செயலர் அருள்முனைவர் அமல் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் நூலை வெளியிட்டு பாராட்டுரை வழங்கினார். புதுக்கோட்டை தமிழ்ச்சங்கத்தலைவர் தமிழ்ச்செம்மல் தங்கம்மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று நூலை பெற்றுக் கொண்டு விழாப் பேருரை ஆற்றினார். மேஜர் டோனர் ரொட்டேரியன் சீனிவாசன், எழுத்தாளர் கேத்தரின் ஆரோக்கியசாமி, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆரோக்கியசாமி, பிலோமின், ஜோசப் சகாயராஜ், சேசுராஜ், நந்தவனம் சந்திரசேகரன், இரா.தமிழ்தாசன், கவிஞர். தமிழ்ப்பித்தன், ஜோயல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமுஎகச. மாநிலக்குழு உறுப்பினரும், விலங்கியல் ஆசிரியையுமான கவி வெற்றிச்செல்வி சண்முகம் நூல் குறித்து மதிப்புரை ஆற்றினார். அவர் மதிப்புரையில், நவீன இலக்கியத் தளத்தில் போர்வாள் இல்லாமல் எழுதுகோலின் கூர்வாள் கொண்டு எழுத்துப் புரட்சியை நிகழ்த்தி இருக்கிறார் கவிஞர் ஜா .சலேத். சமூக அக்கறையின் வெளிப்பாடாய், அநியாயத்திற்கு எதிரான போர்க்குரலாய்
ஆதன் அவதரித்து இருக்கிறான்.
ஆதன் அரசியல், வரலாறு, வாழ்வியல் அறம் என பல குரல்களில் பேசுவதை நம்மால் பார்க்க முடிகிறது. ஞானம் குறித்த தத்துவங்கள் உரையாடல்களில் வெளிப்படுகிறது. மொத்தத்தில் சொற்சித்திரமாக, கருத்துப் பெட்டகமாக ஆதன் அடையாளப்படுகிறான் எனப் பதிவு செய்தார்.
யுகன் மின்வெளிக்காட்சி சார்பாக நடைபெற்ற போட்டியில் வென்ற மாணவர்களுக்கு குரல் எழிலன் விருது வழங்கப்பட்டது. நிறைவில் எழுத்தாளர் முனைவர் ஜா.சலேத் ஏற்புரையாற்றினார். அருள்தந்தையர்கள், பேராசிரியர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள்,மருத்துவர்கள், ஓவியர்கள் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர். பிஷப் கல்லூரி முதுகலை மாணவர் தி.பிரபு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.