கல்லூரி மாணவி ஆணவக் கொலை! அண்ணனே தங்கையை அடித்துக் கொன்ற கொடூரம்!!
கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை தமிழ் இலக்கியம் படித்து வந்த கோயம்புத்தூர் மாவட்டம் பருவாய் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி – தங்கமணி ஆகியோரின் மகள் வித்யா (வயது 21) என்பவரும் அதே கல்லூரியில் எம்.பில் படித்த திருப்பூரை சேர்ந்த வெண்மணி என்பவரும் கடந்த 2022 முதல் காதலித்து வந்தனர்.
வித்யா தொடர்ந்து கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.ஏ படித்து வந்தார். வெண்மணி முனைவர் பட்ட ஆய்வுக்காக தேசிய தகுதி தேர்வு எழுதி JRF திட்டத்தின் கீழ் தேர்ச்சி பெற்றுள்ளார்.
வெண்மணி மிகப் பிற்படுத்தப்பட்ட குலாலர் சமூகத்தைச் சார்ந்தவர். வித்யா மிகப் பிற்படுத்தப்பட்ட நாவிதர் சமுதாயத்தைச் சார்ந்தவர் ஆவார்.
இருவரும் காதலித்து வந்ததை கடந்த பிப்ரவரி 2025- இல் வித்யாவின் பெற்றோர் தெரிந்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலும், வெண்மணி குடும்பம் வித்யாவின் குடும்பத்தை விட பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பம் என்கிற காரணத்தினாலும் வித்யாவின் பெற்றோரும், சகோதரர் சரவணகுமாரும் இருவரின் காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அது முதல் வித்யாவை அவர்கள் வெண்மணியுடன் பழகக் கூடாது என்று தடுத்தும், சில நாட்கள் கல்லூரிக்கு செல்ல விடாமல் தடுத்தும் வந்தனர்.

வித்யாவுக்கு சரிவர உணவு கொடுக்காமல், அவருடைய கல்லூரி செலவுகளுக்கு பணம் கொடுக்காமல் கொடுமை செய்துள்ளனர். வெண்மணியும், அவரது தந்தையும் வித்யாவின் அண்ணன் சரவணகுமார் மூலமாக பேசி திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்ட போதும் அவர்கள் சாதியையும், பொருளாதார நிலையையும் காரணமாக காட்டி திருமணத்திற்கு மறுத்து விட்டனர்.
வித்யா இந்த சூழ்நிலைகளை பொறுத்துக் கொண்டு தொடர்ந்து கல்லூரிக்கு சென்றுக் கொண்டிருந்தார். மேலும், வித்யா தன்னுடைய கல்விச் செலவுகளுக்காக காரணம்பேட்டையில் உள்ள ஒரு கடையில் பகுதி நேரமாக வேலை செய்து கொண்டிருந்தார். வித்யா கல்லூரி செல்லும் நேரம் மட்டும் வெண்மணி அவருடன் அலைபேசியில் பேசி வந்துள்ளார். பிற நேரங்களில் அவரது வீட்டின் கண்டிப்பான சூழல் காரணமாக அவரிடம் பேச இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 27.03.2025 வியாழன் அன்று கடைசியாக வித்யாவை வெண்மணி நேரில் பார்த்து பேசியுள்ளார். அவர் திருப்பூர் வந்து தேசிய தகுதி தேர்வு(நெட்) எழுதுவதற்கான புத்தகங்களை வெண்மணியிடம் பெற்றுச் சென்றுள்ளார். அதுசமயம் அவரது பெற்றோரும், சகோதரரும் தொடர்ந்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், தன்னை வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்வதாகவும், ‘நான் மறுத்தால் எனது உயிருக்கு கூட அச்சுறுத்தல் ஏற்படலாம்’ என்றும் வெண்மணியிடம் வித்யா தெரிவித்துள்ளார்.
வெண்மணி ‘அவ்வாறு எந்த சூழல் வந்தாலும் தனக்கு அழைக்கும் படியும், தான் பாதுகாத்துக் கொள்கிறேன் என்றும், திருமணம் செய்து கொள்ளலாம்’ என்று உறுதி அளித்தும் ஆறுதல் கூறி அனுப்பி உள்ளார்.
இந்நிலையில் கடந்த 30/03/25 மாலை சுமார் 5.00 மணி அளவில் வித்யா இறந்து விட்டதாக வெண்மணிக்கு தகவல் கிடைத்துள்ளது. தனது நண்பர்கள் மூலமாக என்ன நடந்தது என்று விசாரித்த போது வீட்டில் இருந்த பீரோ விழுந்து வித்யா இறந்து விட்டதாக வித்யாவின் பெற்றோர், சகோதரர் அக்கம் பக்கத்தினரிடம் தகவல் சொல்லியுள்ளதும் வித்யாவை உடனடியாக அவசர அவசரமாக அடக்கம் செய்து விட்டதாதும் தெரிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தார்.
மேற்படி தகவல் நம்பும்படியாக இல்லை என்பதால், தானும் வித்யாவும் காதலிப்பதை பொறுக்காத வித்யாவின் பெற்றோர் மற்றும் சகோதரர் தொடர்ந்து வித்யாவுக்கு துன்புறுத்தல்கள் கொடுத்து வந்த நிலையில் வித்யாவின் மரணம் தனக்கு மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், வித்யாவின் மரணம் குறித்து காவல்துறைக்கோ அரசு துறைக்கோ அவரது பெற்றோர் எந்த தகவலும் கொடுக்காமல் அவசரம் அவசரமாக உடனடியாக வித்யாவை அடக்கம் செய்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்து பல்லடம் வழக்குரைஞர் செந்தில்குமார் உதவியுடன் கடந்த 31/03/2025 அன்று திருப்பூர் மாவட்டம், காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் வெண்மணி புகார் அளித்தார்.
வெண்மணியின் புகாரின் அடிப்படையில் வித்யா சந்தேகப்படும்படியாக மரணம் அடைந்த காரணத்தினால் காவல் ஆய்வாளர் உடனடியாக விசாரணை நடத்தி வித்யாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கின்ற காரணத்தினால் 31/03/25 அன்று வித்யாவை புதைத்த இடத்தில் வைத்தே சட்டம் சார்ந்த மருத்துவர்கள் மூலமாக சடல கூறாய்வு செய்ய நடவடிக்கை எடுத்தார். வித்யாவின் வீட்டிலும் தடய அறிவியல் ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வித்யாவின் உடல் சடலக் கூராய்வு செய்த நிலையில் அவர் கம்பியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்பதை அறிந்த காவல்துறையினர் விசாரணையை தீவிர படுத்தினர்.
காவல்துறை விசாரணையில் வித்யாவின் அண்ணன் சரவணகுமார் மாற்று சமூகத்தைச் சார்ந்தவரை காதலித்த காரணத்துக்காக சொந்த தங்கையையே கம்பியால் அடித்து படுகொலை செய்தது உறுதியாகி உள்ளது. வித்யாவின் பெற்றோர் இந்த படுகொலையை மறைப்பதற்காக அவருக்கு உடந்தையாக இருந்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.
சாதி, ஆணாதிக்க வெறியுடன் உடன் பிறந்த தங்கையை சரவணன் படுகொலை செய்திருப்பது நாட்டையே உலுக்கி இருக்கின்றது சரவணனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும் காவல்துறைக்கும் கோரிக்கை வைக்கிறோம்.
தமிழக அரசே சாதி ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றிடு.!
கொலை குற்றவாளி சரவணனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திடுக.!
முற்போக்கு மாணவர் கழகம் வலியுறுத்தல்..!
முற்போக்கு மாணவர் கழகம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி