கலாமின் கனவை சிதறடித்த கல்லூரி மாணவர்கள்
கடந்த சில நாட்களுக்கு முன்பாக கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 3ம் ஆண்டு பி.பி.ஏ மாணவர்கள் 3 கல்லூரி பேருந்துகளில் கல்லூரி விரிவுரையாளர்களான அஜ்மல், சதாம், ராஜமாணிக்கம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் இராமேஸ்வரம் கல்லூரி சுற்றுலா சென்றுள்ளனர்.அங்கு பேக்கரும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நினைவிடத்தை சுற்றி பார்த்துவிட்டு வெளியே வந்த மாணவர்கள் கல்லூரி பேருந்து ஓட்டுநரிடம் எங்களுடைய செல்போன் பேருந்திற்குள்ளே உள்ளது.பேருந்தின் கதவை திறக்குமாறு மாணவர்கள் பேருந்து ஓட்டுநரிடம் தெரிவித்துள்ளனர்.
அதற்கு ஓட்டுநரோ கல்லூரி விரிவுரையாளர் சொன்னால் பேருந்தின் கதவை திறக்க முடியும் என தெரிவித்துள்ளார். இதனால் ஓட்டுநருக்கும், மாணவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து பேருந்து ஓட்டுநர் கதவுவை திறக்க முடியாது என்று அருகில் இருந்த ஹோட்டலுக்கு சென்றுவிட்டார். அங்கும் சென்ற மாணவர்கள் மீண்டும் ஓட்டுநரிடம் கேட்க வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. மாணவர்களோ ஹோட்டலிருந்த சேர் மற்றும் டேபிளை எடுத்து அடித்து நெருக்கியுள்ளனர்.
இதை தட்டிகேட்ட ஹோட்டல் ஊழியர்களை அடித்துள்ளனர். இதையடுத்து அருகிலிருந்த கடைகாரர்கள் அனைவரும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து உடனடியாக அப்பகுதிக்கு வந்த ஏஎஸ்பி தீபக் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசிய சாலை மறியலை கைவிடசெய்தார். நஷ்டமடைந்த ஹோட்டல் உரிமையாளருக்கு உரிய இழப்பீடு பெற்றுதருவதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் வேண்டுகோள்விடுத்தனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி கல்லூரி முதல்வர் ரஜபுதீனிடம் கேட்ட போது கல்லூரி ஓட்டுநருக்கும் செல்போனை எடுத்து தரசொன்ன மாணவர்களுக்குமிடையே ஏற்பட்ட தகராறு. சொல்வதற்கு ஒன்றுமில்லை.இதை ஒன்றும் பெரிது படுத்தவேண்டாம் என்றார்.
அப்துல்கலாம் எங்கு சென்றாலும் மாணவர்கள் சந்திப்பதில் தான் அலாதிபிரியம் கொள்வார்,மாணவர்களால்தான் இந்திய வல்லரசு ஆகபோகிறது என்று அடிக்கடி கூறுவார்,இந்த கல்லூரி மாணவர்களோ அவரது நினைவிடத்திலேயே இந்த செயலில் ஈடுபட்டது,அவரது கனவை கலைத்துவிடும்போல் உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
-பாலாஜி