இராணுவத்தை போல் காவலர் தேர்வுக்கும் உடற்தகுதித் தேர்வை முதலில் நடத்து ! வலுக்கும் கோரிக்கை !
உடற்தகுதித் தேர்வை முதலில் நடத்து ! காவலர் பயிற்சி மாணவர்கள் கோரிக்கை !
“ தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் காவலர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தற்போது முதலாவதாக எழுத்துத்தேர்வும், இரண்டாவது உடல் தகுதி தேர்வு அடுத்து மருத்துவ சோதனை என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை மாற்றியமைத்து, முதலில் உடற் தகுதித் தேர்வையும் அடுத்ததாக மருத்துவ சோதனையும் இவ்விரண்டிலும் தேர்வானவர்களை மட்டும் கொண்டு எழுத்துத் தேர்வு நடத்தி தேர்வு செய்ய வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது.
இக்கருத்தை முன்வைத்திருப்பவரும், கடந்த நான்காண்டுகளாக, முழுமூச்சாக காவலர் தேர்வுக்காக தன்னை தயார்படுத்தி வருபவருமான நண்பரிடம் பேசினோம். எஸ்.ஐ. தேர்வுக்கு தயாராகிவருவதன் காரணமாக, எதிர்காலத்தில் நேர்காணலின்போது, தனிப்பட்ட முறையில் தனக்கு பிரச்சினை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தனது பெயர் புகைப்படம் தவிர்த்து அவரது ஆதங்கத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டார். ”காவலர் பணிக்கு உடற்தகுதிதான் முக்கியமானது. அறிவுத்திறன் தேவையில்லை என்று கூறவில்லை. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தற்போதைய நடைமுறையால், போலீசாக வேண்டும் என்ற கனவோடு அன்றாடம் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தயார்படுத்திவரும் எங்களைப் போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகிறோம்.
குரூப்-1, குரூப்-2 தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்கள் பலர், தங்களது முன் அனுபவத்துக்காக காவலர் தேர்வையும் எதிர்கொள்கின்றனர். அவர்களது தொடர் பயிற்சியின் காரணமாக, எழுத்துத்தேர்வில் அதிகபட்ச மதிப்பெண்களையும் பெற்று உடற்தகுதி தேர்வுக்கு தேர்வாகிவிடுகின்றனர். உதாரணமாக, 1-க்கு 5 என்ற விகிதத்தில் ஆயிரம் காலிபணியிடங்களுக்கான தேர்வு எனில், 5000 பேரை அழைப்பார்கள். குரூப்-1, குரூப்-2 தேர்வுக்கு தயாராகும் மாணவர்களில் பலர் இந்த முதல் 5000 பேரில் வந்துவிடுவார்கள். எங்களைப் போன்றவர்கள், உடற்தகுதித் தேர்வில் கூட பங்கேற்க முடியாமல் போகிறது.
அவ்வாறு, எழுத்துத் தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்களுள் பலர் உடற்தகுதி தேர்வுக்கு செல்வதே கிடையாது. மீறி பங்கேற்பவர்களுள் பலர் போதுமான உயரம், மார்பளவு இல்லாமல் முதல் நிலையிலேயே திரும்பிவிடுகின்றனர். இதனையடுத்து, 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம், 100/400 மீட்டர் ஓட்டப்பந்தயம், கயிறு ஏறுதல், நீளம்/உயரம் தாண்டுதல் என பல்வேறு உடற்தகுதி தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிலைக்கும் இரண்டு நட்சத்திரம் என்ற அளவில் உடற்தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. அதாவது, 100 மீட்டர் தூரத்தை 60 விநாடிகளுக்குள் கடந்தால் இரண்டு நட்சத்திரம். 70 – 80 விநாடிகளில் கடந்தால் ஒரு நட்சத்திரம். இறுதியாக, ஒரு நட்சத்திரத்திற்கு இரண்டு மதிப்பெண்கள் என்ற அளவில் மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படுகிறது.
இங்கேதான் பிரச்சினை எழுகிறது. எழுத்துத் தேர்வில் அதிக கட்ஆஃப் வைத்திருக்கும் மாணவன், உடற்தகுதி தேர்வில் ஒவ்வொரு நிலையிலும் வெறுமனே ஒரு நட்சத்திரம் என்ற அளவில் தேர்ச்சி பெற்றாலே போதும், ஓவர்ஆல் மதிப்பெண்கள் அடிப்படையில் அவர் காவலராக, உதவி ஆய்வாளராக தேர்வாகிவிடுகிறார். எங்களைப் போன்றவர்கள், கட்ஆஃப் மதிப்பெண்களில் அவர்களைக் காட்டிலும் ஒன்றிரண்டு மதிப்பெண்கள் பின்தங்கியிருப்போம். ஆனால், உடற்தகுதித் தேர்வில் அனைத்து நிலைகளிலும் அதிகபட்சமான இரண்டு நட்சத்திரங்களைப் பெற்றிருந்தாலும் ஓவர்ஆல் மதிப்பெண்கள் அடிப்படையில் நாங்கள் நிராகரிக்கப்படுவோம்.
உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வுக்கு 70 மதிப்பெண்கள்; உடல் தகுதித்தேர்வுக்கு 15 மதிப்பெண்கள்; நேர்காணலுக்கு 10 மதிப்பெண்கள், NCC, NSS, Sports மொத்தம் 5 மதிப்பெண்கள், என்ற கணக்கீட்டில் தேர்வு நடைபெறுகிறது.
காவலர் பணியிடங்களுக்கு நேர்காணல் கிடையாது என்பதால், அவர்களுக்கு 80 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெற்று வந்த நிலையில், உதவி ஆய்வாளர்களுக்கான நடைமுறை போல, எழுத்துத் தேர்வுக்கு 70 மதிப்பெண்களை மட்டும் வைத்துவிட்டு, உடல் தகுதி தேர்விற்கு 24 மதிப்பெண், NCC, NSS, Sports 6 மதிப்பெண், எஞ்சிய 10 மதிப்பெண்களை உடற்தகுதி தேர்வில் ஒரு நட்சத்திரத்திற்கு இரண்டு மதிப்பெண்கள் என்பதற்கு பதிலாக நான்கு மதிப்பெண்கள் என்பதாக மாற்றியமைத்துவிட்டார்கள். மிக முக்கியமாக, உதவி ஆய்வாளர் தேர்வில் தகுதித்தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் கட்டாயம் தேர்ச்சி பெற்றால் தான் அடுத்த நிலைக்கு செல்ல முடியும்.
அதாவது, ஓட்டப்பந்தயத்தில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை அடைந்து குறைந்தபட்சம் ஒரு நட்சத்திரமாவது வாங்கியிருந்தால் மட்டுமே, அடுத்த நிலையான நீளம்/உயரம் தாண்டுதல் தகுதி நிலைக்கு செல்ல முடியும். ஆனால், காவலர் தேர்வில் இந்த நடைமுறையை தளர்த்திவிட்டார்கள். ஒன்றில் தகுதிபெறாவிட்டாலும் அடுத்த நிலைக்கு போகலாம் என்று மாற்றியமைத்துவிட்டார்கள். இறுதியாக, எழுத்துத்தேர்வில் பெற்ற அதிக மதிப்பெண்கள் உதவியோடு, ஓவர்ஆல் மதிப்பெண் அதிகம் பெற்று தேர்வாகிவிடுகிறார்கள். இதன் காரணமாகவும் நாங்கள் பாதிக்கப்படுகிறோம்.
உடற்தகுதி தேர்வுதான் முதல் தகுதி என்று இராணுவத்தில் பின்பற்றப்படும் அதே நடைமுறையை காவலர் தேர்வுக்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.” என்கிறார்.
-தி.அ.குகன்