கூலி ட்ரைலரில் வரும் ‘அலேலா பொலேமா’வுக்கு அர்த்தம் இதுதான்’ – அனிருத் விளக்கம்!
ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படத்திற்குப் பிறகு `கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் முன்னணி நடிகர்களான நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
இதனிடையே சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பின்னணி இசை வெளியாகி இருந்தது. அதில் இடம் பெற்றிருந்த ‘அலேலா பொலேமா’ என்கிற லைன் பலரையும் கவர்ந்திருந்தது. அதன் அர்த்தம் என்ன என்பதை இணையத்தில் பலரும் தேடி வருகின்றனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் ‘அலேலா பொலேமா’ என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்று அனிருத்திடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அனிருத், நான் டீசரின் பின்னணி இசைக்காக வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, நான் ஸ்டுடியோவில் கொஞ்சம் கிரேசியாக ஏதேதோ உளறிக்கொண்டு, பாடிக்கொண்டிருந்தேன். அப்போது தான் ‘அலேலா பொலேமா, அலேலா பொலேமா லே’ என்று பாடி இயக்குநர் லோகேஷிற்கு அனுப்பினேன். அவர் அதைக் கேட்டுவிட்டு, ‘என்ன இது? இதற்கு என்ன அர்த்தம்?’ என்று கேட்பார் என நினைத்தேன். ஆனால் அங்கு நடந்த கதையே வேறு, அவரோ எனக்கு கால் செய்து ‘டீசரில் எனக்குப் பிடித்ததே இதுதான்’ என்று கூறினார்.
அலேலா பொலேமா என்பதும் ஒரு வகையான ஜிப்ரிஸ்தான். இந்த வார்த்தைக்கான அர்த்தம் என்னவென்று தேடினேன். கிரேக்க மொழியில் ‘நாங்கள் சண்டைக்குத் தயார்’ என்று அர்த்தம் இருந்தது. அப்படிப்பட்ட வைப்பிலதான் நாங்கள் இருப்போம். இதைப் பாடும் போது இந்த அர்த்தம் எனக்குத் தெரியாது. சும்மா பாடியதுதான்” என்று அனிருத் கூறினார்.
— மு. குபேரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.