2027 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.2027-ஐத் தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளிலும் 2027 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 2027 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் பின்வரும் கால அட்டவணை விபரப்படி நடைபெற உள்ளது.

நடவடிக்கைகள் விபரம்

1. வாக்கு சாவடிகள் மறு சீரமைத்தல் – 02.11.2026

2. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – 12.11.2026

3. புதிய வாக்காளர்களை சேர்த்தல் / பெயர், முகவரி திருத்துதல் மற்றும் இறந்து போன வாக்காளர்களை நீக்குதல் பணிகள்

12.11.2026 முதல்  11.12.2026

4. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – 04.01.2027

இந்திய தேர்தல் ஆணைய உத்திரவுப்படி, திருச்சிராப்ள்ளி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதிகளிலும் வரைவு வாக்கு சாவடிகள் பட்டியல் 19.10.2026 (திங்கள்) அன்று வாக்காளர் பதிவு அலுவலர்களால் வாக்காளர் பதிவு அலுவலகங்களில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்படும். பின்னர் இப்பட்டியல் வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். மேலும் வரைவு வாக்கு சாவடிகள் பட்டியல் மீது கோரிக்கைகள் ஏதும் இருப்பின் அவை எழுத்து பூர்வமாக பெறப்பட்டு தகுதியின் அடிப்படையில் மறு சீரமைப்பு செய்து இறுதி வாக்குசாவடி பட்டியல் முடிவு செய்யப்படும்.

மேலும், 2027 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் தொடர்பாக ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் 12.11.2026 (வியாழன்) அன்று மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலும் மற்றும் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் வாக்காளர் பதிவு அலுவலகங்களிலும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்படும். பின்னர் இப்பட்டியல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், உள்ளாட்சி அலுவலகங்கள் மற்றும் சம்மந்தப்பட்ட வாக்குசாவடிகளில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். இதன் மூலம் பொது மக்கள் தங்கள் பெயர் மற்றும் பிற விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.

பின்னர் 12.11.2026 முதல் 11.12.2026 வரை வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் அதாவது 01.01.2027 அன்று 18 வயதினை பூர்த்தி செய்பவர்கள் மற்றும் அடுத்த மூன்று காலண்டுகள் அதாவது

01.04.2027, 01.07.2027 மற்றும் 01.10.2027 அன்றைய நாளில் 18 வயதினை பூர்த்தி செய்பவர்கள் தங்களின் பெயர்களை சேர்தல் / திருத்துதல் / முகவரி மாற்றம் / இறந்த வாக்காளர்களின் பெயரை நீக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேற்படி காலக்கட்டத்தில் சம்மந்தப்பட்ட வாக்குசாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும், தேதி பின்னர் அறிவிக்கப்படும். 01.01.2027 அன்று 18 வயது நிரம்பியவர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் படிவம் 6-ஐ பெற்று அவற்றை பூர்த்தி செய்து வயது மற்றும் இருப்பிடத்திற்குரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து, புதியதாக வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம். அயல்நாடு வாழ் வாக்காளர்கள் படிவம் 6A-இல் நேரடியாக வாக்காளர் பதிவு அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இறந்து போன வாக்காளரது பெயரினை நீக்கம் செய்திட படிவம்-7-யும், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் / முகவரி மாற்றம் செய்ய வேண்டியிருப்பின் படிவம் 8-ஐயும், பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான விண்ணப்பங்கள் 12.11.2026 முதல் 11.12.2026 வரை அனைத்து வேலை நாட்களிலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், (சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள் உட்பட) வாக்காளர் பதிவு அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / வட்டாட்சியர் அலுவலகங்களில் பெற்று அவற்றினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை அளிக்கலாம். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிக்குட்பட்டவர்கள், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் அலுவலகத்திலும், கோட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை பெற்று அவற்றினை பூர்த்தி செய்து கொடுக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள www.nvsp.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

எனவே 2027-ஆம் ஆண்டிற்குரிய சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணிகளின் போது தகுதியான வாக்காளர்கள் 100 சதவீதம் விடுதலின்றி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் சேர்த்திடவும், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் / முகவரி மாற்றம் செய்ய விருப்பமுடையவர்களும் இவ்வாய்பினை பயன்படுத்தி கொள்ளவும் இப்பணியினை 100 சதவீதம் நேர்மையாகவும், தூய்மையாகவும் நடைபெற அனைத்து அரசியல் கட்சியினர்கள் மற்றும் வாக்காளர்களாகிய பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிடுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.