வெறும் 2000 இலஞ்சத்துக்கு ஆசைப்பட்டு … காலம் போன கடைசியில் கம்பி எண்ணப்போகும் ரிட்டயர்டு கிளார்க் !
பட்டதாரி ஆசிரியர் ஒருவருக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய நிலுவைத்தொகையை பெற்றுத்தருவதற்கு இரண்டாயிரம் ரூபாய் இலஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக இளநிலை உதவியாளருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது, சிறப்பு நீதிமன்றம்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாயகி அரசு உதவிபெறும் ஆரம்பப்பள்ளியியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் நா.மாரியப்பன். கடந்த 13.11.2008 இல் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்று பணிமாறுதலில் திருச்சி – திருவாணைக்கோவில் சன்னதி வீதியில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி வந்திருக்கிறார். அப்போது ஆறாவது ஊதியக்குழு பரிந்துரை அமலுக்கு வருவதற்கு முன்பாக, தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இடைக்கால நிவாரணமான மூன்று மாத ஊதியம், அவருக்கு வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த 71/2 மாதங்களுக்கான ஊதியத்தொகை மற்றும் அவர் படித்த எம்.ஏ. படிப்பிற்கான ஊக்கத்தொகை ஆகியவற்றை பெற்றுத் தருவதற்காக அதே பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்த ரெங்கராஜன் என்பவரை அணுகியிருக்கிறார்.
அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் உள்ளிட்டு அனைவருக்கும் சம்பளப் பட்டுவாடா செய்வது தொடங்கி பள்ளியின் நிர்வாக நடைமுறைகளை கவனிப்பதற்கென்றே ஏற்படுத்தப்பட்டதுதான் இளநிலை உதவியாளர் பணியிடம். ஆசிரியர்களிடமிருந்து போதுமான ஆவணங்களை பெற்று அதனடிப்படையில் கருத்துருக்களை தயார் செய்து சம்பந்தபட்ட கல்வித்துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து ஆசிரியர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவது என்பது, இளநிலை உதவியாளரின் கடப்பாடு. அதுதான், அவரது வேலையே.
ஆனால், அரசாங்கத்திடம் எதற்காக சம்பளம் வாங்குகிறாரோ, அந்த வேலையை செய்வதற்கு தனியே இரண்டாயிரம் இலஞ்சம் கொடுக்குமாறு கேட்டிருக்கிறார், கிளார்க் ரெங்கராஜன். சட்டப்படியான அவரது பணப்பலன்களை அரசிடமிருந்து பெறுவதற்கு, இவருக்கு ஏன் இலஞ்சம் கொடுக்க வேண்டுமென்று எண்ணிய பட்டதாரி ஆசிரியர் நா.மாரியப்பன், இலஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கிறார்.
புகாரை பரிசீலித்த, திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், 30.09.2009 அன்று குற்ற வழக்கு பதிவு செய்கிறார்கள். இதனை தொடர்ந்து கடந்த 1.10.2009 அன்று நடைபெற்ற பொறிவைப்பு நடவடிக்கையில், கிளார்க் ரெங்கராஜன் கையும் களவுமாக பிடிபடுகிறார். கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறார்.
கிளார்க் ரெங்கராஜனுக்கு எதிரான வழக்கின் விசாரணை, திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஜூலை-30 அன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு, இறுதி தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.
கிளார்க் ரெங்கராஜனுக்கு எதிரான குற்றம் சந்தேகத்திடமின்றி நிரூபிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர் மாரியப்பனிடம் லஞ்சப்பணம் கேட்ட குற்றத்திற்காக ஈராண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.5,000/- அபராதமும்; அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும்; அரசு பதவியை தவறாக பயன்படுத்தி கையூட்டு கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும்; ரூ.5,000/- அபராதமும்; அபராதத்தை கட்டத் தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்ததோடு, மேற்கண்ட தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் வேண்டுமென்று குறிப்பிட்டு தீர்ப்பளித்திருக்கிறார்.

திருச்சி மாவட்ட இலஞ்ச ஒழிப்பு போலீசு டி.எஸ்.பி. மணிகண்டன் மற்றும் இன்ஸ்பெக்டர் ஞா.சக்திவேல் ஆகியோர் குற்றச்சாட்டை நிரூபிக்க அவசியமான சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்கள். சாட்சிகளை நேர் நிறுத்தியிருக்கிறார்கள். இந்த வழக்கை, அரசு தரப்பில் வழக்கறிஞர் கோபிகண்ணன் திறம்பட நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுத் தந்திருக்கிறார்கள்.
கௌரவமான சம்பளத்தை அரசாங்கமே வழங்கிவிடும்போது, அற்ப பணம் இரண்டாயிரத்துக்கு ஆசைப்பட்டு காலம் போன கடைசியில் கம்பி எண்ணப்போகிறார், கிளார்க் ரெங்கராஜன். விடாது கருப்பு என்பதைப் போல, வகையாய் வழக்கில் சிக்கிவிட்டால், கடைசி காலத்தை பேரன் பேத்திகளோடு ஆசையாய் அனுபவிக்கும் வாய்ப்பை – நிம்மதியை இழந்து நிற்பார்கள் என்பதைத்தான் இந்த விவகாரம் அனுபவ பாடமாக எடுத்துரைக்கிறது.
— அங்குசம் செய்திப்பிரிவு.