கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் கொலைகள் – 7 நாள் விரிவான கள ஆய்வு – சொல்வது என்ன !
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் கொலைகள் – 7 நாள் விரிவான கள ஆய்வு – சொல்வது என்ன ! – கள்ளக்குறிச்சி, கள்ளச்சாராய மரணத்தில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் இறந்து போயிருப்பதாக அரசு தெரிவிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலர் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். அவர்களில் சிலர் இறக்கக்கூடும் என்கிற அதிர்ச்சி தகவல் கவலையளிக்கிறது.
கடந்த 2023ம் ஆண்டு விழுப்புரம், மரக்காணத்தில் கள்ளச்சாராயத்தினால் 22 பேர் இறந்து போயினர். அப்போது மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இனி தமிழ்நாட்டில் ஒரு சொட்டு கள்ளச்சாராயம் இருக்காது என்று சூளுரைத்தார். ஆனால் மரக்காணம் கள்ளச்சாராய மரணங்களை விட தற்போது மூன்று மடங்கிற்கு மேல் மக்கள் இறந்து போயுள்ளனர்.
கள்ளச்சாராயத்தை தடுப்பது அரசின் முக்கியமான கடமையாகும். ஆனால் இந்த கடமையை தமிழ்நாடு அரசு செய்யத் தவறிவிட்டது. கள்ளக்குறிச்சி காவல்நிலையம், நீதிமன்றம் போன்ற அரசு நிறுவனங்கள் இருக்கக்கூடிய அருகாமையில் தான் இந்த கள்ளச்சாராயம் விற்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் தமிழ்நாடு அரசு எவ்வளவு மெத்தனமாக இருந்திருக்கிறது என்பதற்கு இந்த மரணங்கள் சாட்சிகளாக இருக்கின்றன.
ஆகவே இதுகுறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக எதிர்காலத்தில் இத்தகைய மரணங்களை தடுப்பதற்கு என்ன மாதிரியான செயல்திட்டங்கள் தேவை. அவற்றினை எப்படி அரசு செயல்படுத்த வேண்டும் போன்ற பரிந்துரைகளை முன்வைப்பதற்காக எவிடன்ஸ் அமைப்பு இதுகுறித்து விரிவான களஆய்வினை மேற்கொள்ள வேண்டுமென்று திட்டமிட்டது.
அதனடிப்படையில் கள்ளச்சாராய மரணங்கள் குறித்து எவிடன்ஸ் அமைப்பு கடந்த 19.06.2024 முதல் 25.06.2024 வரை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று முழுமையான களஆய்வினை மேற்கொண்டது. இந்த களஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இவ்வறிக்கையினை இன்று 27.06.2024 மதுரை, எவிடன்ஸ் அலுவலகத்தில், பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட்டத்தில் வெளியிடுகிறோம்.
டாஸ்மாக் மூலம் கடந்த ஆண்டு மது விற்பனை தமிழ்நாட்டில் 45,865 கோடி. இந்த மதுவினால் பெறப்படுகிற வருமானம் என்பது பெரும்பாலும் ஏழை எளிய மக்களின் பணம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு எதிராக பலரும் இன்று குரல் கொடுத்து வருகின்றனர். டாஸ்மாக் மூடப்பட வேண்டும். பூரண மதுவிலக்கு அமுல்படுத்த வேண்டும் என்கிற பிரதான கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன. அதே நேரத்தில் கள்ளச்சாரயமும் போதை பொருட்களும் தமிழகத்தில் மிகுதியாக விற்கப்படுகிறது. இதை தடுப்பதற்கு அரசு எந்திரங்கள் முற்றிலும் தவறிவிட்டன.
இந்த போதை பொருட்களால் மெல்ல மெல்ல மனிதர்கள் மடிந்து வரும் நிலையில் கள்ளச்சாராயம் கொத்து கொத்தாக உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது.
கள்ளக்குறிச்சி நகரத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் தான் பெரும்பாலானோர் இறந்து போயுள்ளனர். கள்ளக்குறிச்சி கிராம பகுதியில் உள்ள மாதவச்சேரி, சேஷசமுத்திரம் போன்ற பகுதிகளிலும் கணிசமானோர் இறந்து போயுள்ளனர்.
இறந்து போனவர்களில் 54 குடும்பத்தைச் சேர்ந்தவர்களை எவிடன்ஸ் அமைப்பு நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டது. இவர்களில் 24 நபர்கள் பட்டியல் சாதி பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 9 நபர்கள் பட்டியல் பழங்குடி காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 12 நபர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மற்றவர்கள் பிற சமூகத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கள்ளச்சாராய மரணத்தினால் பெற்றோர்கள் அல்லது தந்தை அல்லது தாய் இழந்த குழந்தைகள் மொத்தம் 28. இவர்களில் 11 பேர் பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி, பாண்டிச்சேரி ஜிப்மர், சேலம் அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 211 பேர் சேர்க்கப்பட்டிருந்தனர். கடந்த 24.06.2024 நிலவரப்படி அரசு கொடுத்த அறிக்கையில் 54 பேர் இறந்து போயுள்ளனர், 25 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர், இதர 132 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்ருந்தது. இறந்து போனவர்களில் 5 பேர் பெண்கள், 49 பேர் ஆண்கள். இறந்து போனவர்களின் குறைந்தபட்ச வயது 28, அதிகபட்ச வயது 75.
ஆபத்தான நிலையில் இருக்கக்கூடிய 25 பேர்களில் 3 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை, இதர 21 பேர் ஆண்கள். இவர்களின் குறைந்தபட்ச வயது 27, அதிகபட்ச வயது 72. சிகிச்சை பெறக்கூடிய இதர 132 பேர்களில் 4 பேர் பெண்கள், 128 பேர் ஆண்கள். இவர்களின் குறைந்தபட்ச வயது 21, அதிகபட்ச வயது 75.
கள்ளச்சாராயம் குடித்து 19.06.2024 அன்று காலை 6.30 மணியளவில் சுரேஷ் என்பவர் இறந்து போனார். அவரைத் தொடர்ந்து பிரவீன் என்பவர் அன்று காலை 9.00 மணிக்கு இறந்து போனார் என்கிற தகவல் நம் எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் கடந்த 18.06.2024 அன்று ஜெயமுருகன், இளையராஜா ஆகியோர் இறந்து போயிருக்கின்றனர். தற்போது தான் இந்த விபரம் தெரிய வந்துள்ளது.
கருணாபுரத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவர், 18.06.2024 அன்று இரவு 11.45 மணியளவில் கடுமையாக கதறி அழுதிருக்கிறார். உடம்பு முழுவதும் எரிகிறது, நெஞ்சு வலிக்கிறது, வயிறு மற்றும் கண் எரிகிறது என்று கூறியிருக்கிறார். வீட்டில் உள்ளவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்துள்ளனர்.
ஆயினும் தொடர்ந்து வலி அதிகரிக்க அவரை அழைத்துக் கொண்டு 19.06.2024 விடியற்காலை 2.00 கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கிருக்கக்கூடிய மருத்துவர்கள், பிரவீன் குடித்திருக்கிறார். இப்போது சிகிச்சை அளிக்க முடியாது. காலை 10.00 மணிக்கு அழைத்து வாருங்கள் என்று கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட பிரவீனுக்கு சிறுநீரக எரிச்சல் கடுமையாக அதிகரிக்க தன்னுடைய உடம்பிலிருந்த ஆடைகளை கழட்டிவிட்டு நிர்வாணமாக தரையில் உருண்டு கதறி அழுதிருக்கிறார். அவரை மறுபடியும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். சிகிச்சை பலனளிக்காமல் 19.06.2024 அன்று காலை 9.00 மணிக்கு பிரவீன் இறந்து போயிருக்கிறார். இவர் இறப்பதற்கு 2 மணி நேரம் முன்பு இவரது மாமா சுரேஷ் இதே போன்ற உடல் வலியால் அவதிப்பட்டு பரிதாபமாக இறந்து போயிருக்கிறார்.
மணி என்கிற 58 வயது பெரியவர் 19.06.2024 அன்று காலை 5.00 மணிக்கு வயிறு வலிக்கிறது, மயக்கம் வருகிறது என்று கூறி கதறி அழ அவருக்கு வீட்டில் உள்ளவர்கள் நீராகாரம் கொடுத்துள்ளனர். அவருக்கு கண் எரிச்சல் அதிகமாகி பார்வை தெரியாமல் போக கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் இங்கே சிகிச்சை அளிக்க முடியாது என்று கூற, மணியின் குடும்பத்தினர் தனியார் ஆம்புலன்ஸ் பிடித்து பாண்டிச்சேரி – ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாலை 4.00 மணியளவில் மணி பரிதாபமாக இறந்து போயிருக்கிறார்.
மதன் (45) என்பவர் பெயிண்டிங் வேலை செய்பவர். கடந்த 19.06.2024 அன்று விடியற்காலை 4.00 மணிக்கு வயிற்று வலி அதிகரிக்க காலை 11.00 மணியளவில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியிருக்கிறார். மறுபடியும் 20.06.2024 அன்று விடியற்காலை 3.00 மணிக்கு கண்பார்வை மதனுக்கு மங்கலாக தெரிந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட மதன், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் காலை 8.00 மணியளவில் சேர்க்கப்பட்டுள்ளார். சிகிச்சை பலனளிக்காமல் 23.06.2024 அன்று காலை 3.30 மணிக்கு இறந்து போயுள்ளார்.
கல்யாணசுந்தரம் என்பவர் சுமைதூக்கும் தொழிலாளி. காலை, மாலை இரண்டு வேளையும் சாராயம் குடிக்கும் பழக்கம் அவருக்கு இருந்துள்ளது. கடந்த 19.06.2024 அன்று காலை இறந்து போன சுரேஷ் மற்றும் பிரவீன் ஆகியோரின் இறப்பு சடங்கில் கல்யாண சுந்தரம் பங்கெடுத்து இறப்பு சடங்கு வேலையிலும் ஈடுபட்டுள்ளார். அவரது அக்கா புஷ்பா, தன் தம்பி கல்யாணசுந்தரத்தை அழைத்து எல்லோரும் கள்ளச்சாராயத்தினால் இறந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.
நீ ஏதேனும் குடித்திருக்கிறாயா? என்று கேட்க, நான் எதுவும் குடிக்க வில்லை என்று கூறியிருக்கிறார். அவரது அக்கா மறுபடியும் உண்மையை சொல் என்று கேட்க, நான் ஒரு பாக்கெட் தான் குடித்தேன் என்று கூறியிருக்கிறார். இதற்கிடையில் கள்ளச்சாராய மரணங்கள் அதிகரிக்க கருணாபுரம் பகுதியில் 19.06.2024 அன்று மாலை மருத்துவ குழுவினர் முகாம் அமைத்து மருத்துவ பரிசோதனை செய்யத் தொடங்கினர்.
அங்கு அவரை பரிசோதனை செய்ய அவரது குடும்பத்தினர் அழைத்தும் அவர் பரிசோதனை செய்து கொள்ளவில்லை. வேறுவழியில்லாமல் அவரது குடும்பத்தினர் கல்யாணசுந்தரத்தை கட்டாயப்படுத்தி மருத்துவமனை அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்திருக்கிறார்.
மறுநாள் 20.06.2024 அன்று காலை 6.00 மணிக்கு கல்யாண சுந்தரத்திற்கு மயக்கம் ஏற்பட்டிருக்கிறது, கண் பார்வை மங்கியிருக்கிறது, வயிற்று பகுதியில் கடும் வலி ஏற்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அவர் உள்நோயாளியாக சேர்க்கப்பட 22.06.2024 அன்று காலை 5.00 மணிக்கு இறந்து போயுள்ளார்.
இந்த கள்ளச்சாராயம் குடித்து இறந்து போன அனைவருக்கும் கண் பார்வை மங்கலாக அல்லது முழுவதும் பார்வை இழந்து போன கொடுமை நடந்துள்ளது. அனைவரும் கடுமையான வயிற்று வலியாலும் நெஞ்சு எரிச்சலாலும் அவதிப்பட்டுள்ளனர். சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, மூளை பாதிக்கப்பட்டு இறந்து போன துயரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இறந்து போன அனைவரும் கூலி தொழிலாளர்கள். இவர்களில் பெரும்பாலானோர் சுமை தூக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பெயிண்ட் அடிக்கும் பணியிலும் கட்டிட வேலை பணியிலும் ஈடுபடுவோர்.
கள்ளச்சாராய பாக்கெட் விலை ரூ.60. டாஸ்மாக் மதுவை விட குறைந்த விலையில் இது கிடைப்பதால் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எளிதாக வாங்கி குடித்துள்ளனர். காலை 4.00 மணி முதல் கள்ளச்சாராய விற்பனை துவங்கும். சிலர் நள்ளிரவிலும் கள்ளச்சாராயம் விற்கக்கூடிய நபர்களின் வீட்டிற்கு சென்று சாராயம் வாங்குவதும் உண்டு.
கள்ளக்குறிச்சி பகுதியில் 200க்கும் மேற்பட்டோர் இதுபோன்ற கள்ளச்சாராய விற்பனை பணியில் ஈடுபட்டிருப்பதாக ஒருவர் கூறினார். கல்வராயன் மலையிலிருந்து லாரி டியூப் மூலமாக சாராயம் கொண்டு வரப்பட்டு அந்த சாராயத்தில் தண்ணீர் கலந்து 160 முதல் 180 பாக்கெட் போடப்பட்டு விற்கப்படுகிறது. ஒரு டியூப் சாராயம் ரூ.7000 முதல் ரூ.8000 வரை வாங்கப்படுகிறது.
இதுவரை மலையில் கொண்டு வரப்பட்ட சாராயத்தை மொத்த விற்பனையாளர் வாங்கி அவர் இதர பகுதி விற்பனையாளர்களுக்கு விற்கக்கூடிய நடைமுறை இருந்துள்ளது. கல்வராயன் மலையில் இருந்து கொண்டு வரப்படுகிற சாராயம் தயார் செய்வதற்கு கால தாமதமாகும். அதுவும் குறைந்த அளவே தயாரிக்க முடியும். இதனை உணர்ந்த மொத்த விற்பனையாளர்கள் அதிக லாபத்தை மனதில் கொண்டு பாண்டிச்சேரி, கடலூர் பகுதியில் இருந்து மெத்தனால் கலந்து விற்க தொடங்கியுள்ளனர்.
முக்கிய குற்றவாளியான கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ் 35 வருடங்களாக இந்த கள்ளச்சாராய பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். சின்னத்துரை என்பவரிடம் சமீப காலமாக சாராயம் வாங்கி விற்றும் வந்துள்ளார். இந்த சின்னத்துரையிடம் கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ், நீ கொண்டு வருகிற சரக்கு சரியில்லை. ஏதோ கலக்கிறாய் என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு சின்னத்துரை, இந்த ஒரு முறை மட்டும் நான் சொல்கிற அளவிற்கு தண்ணீர் கலந்து விற்பனை செய் எந்த பாதிப்பும் வராது என்று கூறியிருக்கிறார்.
சின்னத்துரை விற்பனை செய்த கள்ளச்சாராயம் உடனடியாக அதிக போதை ஏற்படுத்தக்கூடியது. இதனை பயன்படுத்தி எளிய மக்களிடம் இதர விற்பனையாளர்கள் விற்றுள்ளனர். மெத்தனால் கலந்த குற்றத்திற்காக சின்னத்துரை, ராமர், ஜோசப்ராஜா ஆகிய மூன்று பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து எவிடன்ஸ் அமைப்பு 10 முதல் தகவல் அறிக்கையினை சேகரித்துள்ளது.
கள்ளச்சாராயத்தினை 15 – 16 வயது குழந்தைகளும் குடிப்பதாக தெரிய வந்தது. கருணாபுரம் பகுதிகளில் காலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை வீதி எங்கும் கள்ளச்சாராய பாக்கெட்டுகள் வீசப்பட்டு கிடக்கும் என்றும் அவற்றை விற்றவர் ஒரு ஆளை வைத்து சேகரிக்கும் வழக்கமும் இருந்து வருகிறது.
இந்த கள்ளச்சாராயம் காவல்துறை ஒத்துழைப்பு இல்லாமல், ஆளுங்கட்சியின் ஒத்துழைப்பு இல்லாமல் விற்கப்படாது என்று அப்பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானோர் கூறுகிறார்கள்.
சாராயத்தை காய்ச்சுபவர் – அதை வாங்கி மொத்தமாக கொண்டு வருபவர் – அவர் பகுதி விற்பனையாளரிடம் கொடுக்க அதை விற்பவர் என்கிற மூன்று நிலையில் இதன் நெட்வொர்க் உள்ளது. மொத்தமாக வாங்கிக் கொடுப்பவரின் பண வெறி சாராயத்தில் மெத்தனாலை கலக்க வைத்து இத்தகைய படுகொலைக்கு காரணமாக அமைந்துள்ளது.
கடந்த 17 – 19 ஜுன் 2024 மூன்று நாட்களில் விற்கப்பட்ட இந்த கள்ளச்சாராயத்தில் அதிகளவு மெத்தனால் கலக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் பெரும்பாலும் குடியிருப்பு பகுதியில் இருந்து வெகு தொலைவில் விற்றுக் கொண்டிருப்பார்கள். ஆனால் தற்போது ஊரின் மையப்பகுதியில் வீட்டில் வைத்து விற்கக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
இல்லம் தேடி சாராயம் என்கிற அளவிற்கு இதன் விற்பனை கலாச்சாரம் வளர்ந்திருக்கிறது. கருணாபுரத்தில் மட்டுமல்ல, மாதவச்சேரி, சேஷசமுத்திரம் பகுதிகளிலும் வீடுகளில் தான் கள்ளச்சாராயம் விற்கப்பட்டு இருக்கிறது. டியூப் கொண்டு வந்து வைப்பதற்கு ஒரு அறை, சாராயத்தில் தண்ணீரை கலந்து தயாரித்து பாக்கெட் போடுவதற்கு ஒரு அறை, அதை விற்பனைக்கு வைத்திருப்பதற்கு ஒரு அறை என்கிற கட்டமைப்பில் இந்த சாராயம் விற்கப்பட்டு வந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் 412 கிராம ஊராட்சிகள் உள்ளன. சுமார் 562 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் மொத்த சாராய விற்பனையாளர்கள் எத்தனை பேர், சிறு வியாபாரிகள் எத்தனை பேர் என்கிற கணக்கு இதுவரை தெரியவில்லை. கருணாபுரத்தில் இறந்து போனதால் இந்த கள்ளச்சாராய விற்பனை வெளியே வந்துள்ளது.
கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் மக்கள் கடந்த 3 ஆண்டு காலமாகவே இந்த பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது. இதுகுறித்து போலீசுக்கு தெரியும் என்று கூறுகிறார்கள். அதாவது தெருக்களில் விற்கப்படுவதும் 3 ஆண்டுகள் என்று கூறுகிறார்கள். கடந்த வருடம் மரக்காணத்தில் கள்ளச்சாரய மரணம் ஏற்பட்ட போது அப்போது மட்டும் இரண்டு மாதம் இந்த கள்ளச்சாராய விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கள்ளச்சாராயம் மரணம் நடக்கிறபோது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், இது கள்ளச்சாராயத்தினால் ஏற்பட்ட மரணம் அல்ல. வயிற்று வலியால் ஏற்பட்ட மரணம் என்று கூறியிருந்தார். அதன் பிறகு பலரும் இறந்து போய் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. ஆகவே அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்கள் கள்ளச்சாராய மரணத்தை கூட வயிற்று வலி மரணமாக சித்தரிக்க முயற்சி செய்தனர். அது எடுபடவில்லை என்பது தெரிகிறது.
கள்ளச்சாராயம் மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணை மீது நம்பிக்கையில்லை. சி.பி.சி.ஐ.டி விசாரணை கண்டிப்பாக கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுமே தவிர காவல்துறை மற்றும் நிர்வாகத்துறைக்கு இருந்த தொடர்பு குறித்து விசாரிக்காது. தமிழ்நாடு அரசின் நிர்வாக அலட்சியத்தினால் ஊழலினால் இந்த கள்ளச்சாராய மரணங்கள் நடந்துள்ளன. தமிழ்நாடு அரசிற்கு உட்பட்ட சி.பி.சி.ஐ.டி எப்படி உண்மையை கூறுவார்கள். ஆகவே இந்த விசாரணை முழுமை பெறாது என்று கூற விரும்புகிறோம்.
கடந்த 24.06.2024 அன்று எமது எவிடன்ஸ் அமைப்பு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றபோது, அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி உங்களுக்கு அனுமதி இல்லை என்று கூறினார்கள். கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அவர்களிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றனர். மருத்துவமனை முதல்வர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றார்.
காவல்துறை கண்காணிப்பாளரிடம் கேட்ட போது, மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று கூறினார்கள். மாவட்ட ஆட்சியர் அனுமதி கொடுக்கக்கூடாது என்று கூறியிருப்பதாக தகவல் வந்தது. மேலிட ஆட்சியாளர்கள் எவிடன்ஸ் அமைப்பு ஆய்வு செய்ய அனுமதிக்கக்கூடாது என்று மாவட்ட நிர்வாகத்திடம் உத்தரவு போட்டிருப்பதாகவும் பெயர் வெளியிட விரும்பாத சில அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியது, கள்ளச்சாராய விற்பனையாளர்களிடம் மறைமுக உறவை வைத்துக் கொண்டது, கள்ளச்சாராய மரணங்களை வயிற்று வலி மரணம் என திசை திருப்பியது, இறப்புகளை காலதாமதமாக வெளியிடுவது போன்ற பல நிர்வாக சீர்கேடுகளை எவிடன்ஸ் அமைப்பு மக்களிடம் எடுத்து கூறியதால் தான் இத்தகைய தடை உத்தரவு போடப்பட்டிருப்பதாக அறிய வருகிறோம்.
பரிந்துரைகள்
§ கள்ளச்சாராய மரணங்களுக்கு தமிழ்நாடு அரசு பொறுப்பேற்க வேண்டும். கள்ளச்சாராய மரணங்களுக்கு பின்னணியில் உள்ள காவல் மற்றும் நிர்வாக அதிகாரிகள் யார்? ஆட்சியாளர்கள் யார்? என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றால் உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து சிறப்பு விசாரணை குழுவினை ஏற்படுத்தி இவற்றை விசாரிக்க வேண்டும்.
§ இந்த மரணங்கள் அரசின் அலட்சியத்தினால் நடந்திருப்பதனால் இறந்து போனவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணமும் அரசு வேலையும் வழங்க வேண்டும். அரசு வேலையில் ஈடுபட முடியாத குடும்பத்தினருக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் பென்சன் வழங்கப்பட வேண்டும்.
§ குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் மனநல ஆலோசனையும் சிகிச்சையும் வழங்கப்பட வேண்டும். இவற்றிற்கு என்று சிறப்பு குழுவினை ஏற்படுத்த வேண்டும்.
§ பெற்றோர்களை பறிகொடுத்த குழந்தைகளுக்கான பராமரிப்பு செலவு மாதம் ரூ.5,000 என்பதை தமிழக அரசு ரூ.10,000 ஆக உயர்த்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்ல பெற்றோர்களில் அம்மாவோ அல்லது அப்பாவோ இல்லாத குழந்தைகளுக்கும் இந்த தொகை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
§ தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பிரதிநிதிகளுக்கு கள்ளச்சாராயம் தடுப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட வேண்டும். அனைத்து ஊராட்சிகளும் பேரூராட்சிகளும் நகராட்சிகளும் தங்கள் பகுதிகளில் கள்ளச்சாராயம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவது மட்டுமல்லாமல் முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
§ கள்ளச்சாராய மரண சம்பவத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. கொலை வழக்கின் 3 குற்றவாளிகளும் தலித் அல்லாதோர். ஆகவே வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் தலித் அல்லாதோர், தலித்துகள் மீது கொலை சம்பவத்தில் ஈடுபட்டால் 302 இ.த.ச. மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் 3(2)(v) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். எனவே வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து இறந்து போன தலித்துகளுக்கு கூடுதலாக ரூ.12 இலட்சம் நிவாரணம், அரசு வேலை வாய்ப்பு உள்ளிட்ட மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும்.
– எவிடன்ஸ் கதிர்