கூலி படத்துக்கு இப்படி ஒரு விமர்சனமா ? டாக்டர் செய்த தரமான சம்பவம்!
சமீபத்திய சினிமா வரலாற்றில் இது போன்ற திரைப்படம் வந்ததும் இல்லை.
இனி வரப்போவதும் இல்லை எனும் அளவுக்கு மிகச் சிறப்பான கதையம்சம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த காவியமாக நம் முன் திரையில் விரிகிறது படம். காட்சிக்கு காட்சி மிரட்டல் தான்.
ஒரு துறைமுகம் அதை நிர்வகிக்கும் கொடுந்தொழில் மாந்தர்கள். அம் மாந்தர் தம் தலைவன். ஓரிடத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பணியாட்கள், அவர்களின் வாழ்வியல் – ஆகியவற்றை தத்ரூபமாக விளக்கியுள்ளது சிறப்பு.
பணியாட்களுள் சிலர் உள்ளடி வேலை பார்க்கும் போது அவர்களைக் கொல்லும் அற்புதப் பணியை செய்வதற்கென்றே ஒரு குரூரக் கதை மாந்தர் உலவுகிறார். கொன்றவர்களை யாது செய்வது? என்று கொல்லும் போது தெரியவில்லை பாவம்.
கொல்வது எளிது அதை மறைப்பது கடினம் எனும் கொலைமொழிக்கு இணங்க மாண்ட பிரேதங்களை எப்படி அகற்றுவது? வினா எழும்பும் தருணம்
அதற்கெனவே பிரேதங்களை அரை நிமிடத்தில் சாம்பலாக்கும் கசேரய் ஒன்றைக் கண்டுபிடித்து கொடுமாந்தர்களுக்கு உண்மையுடன் உதவி புரிகிறார் கதைத் தலைவனின் நண்பர்.
இதற்கு இடையே கதைத் தலைவனின் நண்பனின் மகள், அவர்தம் சகோதரிகள் கதைத் தலைவனின் முன்னாள் நண்பன், இந்நாள் வெளியில் வாழும் நண்பர்கள் , இந்நாள் மறைந்து வாழும் நண்பர்கள் என கதை முழுவதும் மாந்தர்கள் தான்.
கதைத் தலைவன் முன்னாள் செய்த வேலை..
இப்போது செய்து கொண்டிருக்கும் வேலை..
இனி செய்ய இருக்கும் வேலைகள் என்று முக்காலத்திலும் கதை மாறி மாறி பயணிக்கும் போது நாம் நம் கசேரயின் நுணிக்கே வந்து விடுவது உறுதி.
கதைத் தலைவன் இப்போது தொழில் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார். கட்டுக் கோப்பாக அந்தத் தொழிலை அவர் நடத்தும் பாங்கு மெச்சக் கூடியது.
உள்ளடி வேலை செய்பவர்களை பரலோகத்துக்கு அனுப்பும் பணி செய்பவரின் முன்னாள் மனைவி அவர் யாரென்றால் கதை தலைவன் இருக்கிறார் அல்லவா? அவரது முன்னாள் பணியிடத்தின் தலைவனின் மகனுடைய இந்நாள் காதலி. புரிந்ததா?
இறுதியாக கதைத் தலைவனின் கதை முடிக்க இந்நாள் கொலை மற்றும் கொள்ளை கூட்டத்தின் தலைவன் வருகிறான். அவன் யாரென்றால் கதை தலைவன் முன்னாள் வேலையிடத்தின் முன்னவரின் மூத்தவன். இதுவும் புரியவில்லை தானே? படம் பாருங்கள் புரியும்.
கதைத் தலைவன் மற்றும் அவரது நண்பர் இருவருக்குள்ளே இருக்கும் பிணைப்பு மிகச் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. அவரது நண்பரின் மகளும் பிண எரிப்புக் கசேரயை சிறப்பாகப் பயன்படுத்துகிறார்.
அதைப் பயன்படுத்திப் பணம் ஈட்டுவதற்கு அவர் கூறும் காரணம் உண்மையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் நெருஞ்சி முள் எடுத்து நெஞ்சில் தைத்தது போல வலி தரக்கூடியதாகவும் இருப்பது உண்மை.
அனைவரின் வாழ்க்கையில் நிச்சயம் மறுமலர்ச்சியை இந்தப் படம் ஏற்படுத்தாவிடினும் சிறு விழிப்பையாவது ஏற்படுத்தியே தீரும்.

கதைத் தலைவன் முக்காலத்துக்கும் கடந்து சென்று எங்கு தனது இனத்துக்குச் சிக்கல் என்றாலும் அந்த முதலாளியை கொலை செய்யும் அற்புதத் திறன் படைத்து விளங்குகிறார். திரைப்படம் முழுவதுமே பல்வேறு வகைகளில் சண்டைக் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதிது புதிதாக கொலைக் கலை பயில சிறப்பான தருணம். கதைத் தலைவன் நடந்து வருவதையும் மேம்படுத்திக் காட்டி அதற்கு வலு கூட்டும் பிண்ணனி இசை. ஒரு பாடலுக்கே வந்தாலும் தனது இருப்பை நிலைநாட்டிய மோனிகா அவர்கள்.
கதையில் அனைவரும் நடித்தார்கள் என்பதை விட கதை மாந்தராகவே உலவினார்கள், வாழ்ந்தார்கள் என்று கூறினால் அது மிகையாகாது. லாஜிக் மீறிய மேஜிக் என்பதால் இங்கு வந்து கணக்கு போட்டுக் கொண்டு இருக்கக் கூடாது. மீண்டும் கூறுகிறேன். சமீபத்திய சினிமா வரலாற்றில் இது போன்ற திரைப்படம் வந்ததும் இல்லை.
இனி வரப்போவதும் இல்லை எனும் அளவுக்கு மிகச் சிறப்பான கதையம்சம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த காவியமாக நம் முன் திரையில் விரிகிறது படம்.
— Dr.அ.பஃபரூக் அப்துல்லா
Comments are closed, but trackbacks and pingbacks are open.