வரவு – செலவு கணக்கில் குளறுபடி ! கலாட்டா கைகலப்பு சர்ச்சையில் மதுரை கீழவாசல் சி.எஸ்.ஐ. சர்ச் !
மதுரை கீழவாசலில் உள்ளது சி.எஸ்.ஐ., சர்ச். இது நூறு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இங்கு நிர்வாக பிரச்சினை காரணமாக ஞாயிற்றுக்கிழமை நவ.3 இல் பிரார்த்தனையின் போது இருதரப்பினர் இடையே அடிதடி கைகலப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போதகர் ராஜா ஸ்டாலின் தரப்பைச் சேர்ந்த ஆபிரகாம் மற்றும் சர்ச் கமிட்டி மெம்பர் ஜோசப் வாசுதேவன் ஆகியோர் விளக்குத் துண் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் முன்னாள் பொருளாளர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதன் பின்னணி விவகாரத்தை அறிய நாம் ஜோசப் வாசுதேவனை நேரில் சந்தித்தோம். “கடந்த 30 ஆண்டு காலமாக நான் சி.எஸ்.ஐ. மதுரை ராமநாதபுரம் திருமண்டலத்தில் அடிப்படை உறுப்பினராக இருந்து வருகிறேன். இந்த CSI ஆலயம் 7 மாநிலத்தை சேர்ந்ததாகும். இதன் தலைமையகம் சென்னையில் உள்ளது. இங்கு மாதந்தோறும் சந்தா வரி ரூ 30 முதல் தற்போது ரூ50 வரை செலுத்தி வருகிறேன்.
தற்போது கீழவாசல் சர்ச்சில் போதகராக இருப்பவர் ராஜா ஸ்டாலின். இவர் மீது காரியாபட்டி, அருப்புக்கோட்டை ஆகிய ஊர்களில் ஏகப்பட்ட புகார்கள் வந்து அங்கிருந்து விரட்டப்பட்டுள்ளார். அதை முதலில் விசாரிக்க நான் கடந்த 2018 – இல் திருமண்டல நிர்வாக அதிகாரி முன்னாள் பொதுச் செயலாளர் பெர்னான்டஸை எதிர்த்து 2021 -இல் ஜான்சனை எதிர்த்தும் தேர்தலில் போட்டியிட்டேன். 3 முறை டைசன் கமிட்டியில்மெம்பராகவும் இருந்து வருகிறேன்.
நவ-3 அன்று ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஆலயத்தில் 600 பேர் சபையில் கூடியிருந்த கூட்டத்தில் பிராத்தனை செய்து கொண்டிருந்தபோது போதகர் ராஜா ஸ்டாலின் பொது மேடையில் கடவுளின் வீட்டில் குழப்பம் ஏற்படுத்துபவர்கள் கடவுள் அடிப்பார் என கூறவும் நான் ஆமீன் என்று குரல் கூறினேன்.
அப்பொழுது என்னிடம் இருந்தவர்கள் வரவு செலவு கணக்கை ஏன் காட்ட மறுக்கிறீர்கள்? என்று கேட்டதும் போதகர் ஸ்டாலினின் ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட்டு தள்ளுமுள்ளு அடிதடி நடைபெற்றது. நான் கேள்வி கேட்டதால், ஏற்கனவே எனது காலில் அடிபட்ட இடத்தில் மிதித்து உடைத்து விட்டார்கள்” என காலை காட்டினார்.
”பொதுமக்களின் பணத்தை வைத்துக் கொண்டு செலவு கணக்கை காட்ட மறுக்கிறார்கள். ஏன் என்று தெரியவில்லை. இதற்கு பின்னணியாக செயல்படுபவர்கள் மீதும் மற்றும் போதகர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் சர்ச்சில் உள்ள சி.சி.டி.வியை ஆராய்ந்து புனிதமான கடவுளின் ஆலயத்தில் தவறு செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.
விளக்குத் தூண் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணனிடம் நாம் கேட்டபோது, “போதகர் ராஜா ஸ்டாலின் கொடுத்த புகார் கடிதத்தில் ஆலயத்தில் எங்களுக்கு எதிர் தரப்பினர் பிரச்சனை செய்வார்கள். அதற்கு தகுந்த பாதுகாப்பு தாருங்கள் என அவரது லெட்டர் பேடில் கடிதம் ஒன்று எங்களுக்கு கொடுத்துள்ளார். அதன் பேரில் நாங்களும் சர்ச் வாசலில் பாதுகாப்பு பணியில் நின்றிருந்தோம்.
உள்ளே பிரச்சனை ஆரம்பித்தவுடன் நாங்கள் விலக்கச் சென்ற போது ஆராதனை நடந்து கொண்டிருக்கும்போது நீங்கள் இதில் தலையிடக்கூடாது என வெளியில் அனுப்பி விட்டார்கள். பிறகு விசாரித்ததில் வரவு-செலவு கணக்கில் குழப்பம் இருப்பதாகவும்; தேர்தல் இன்னும் அறிவிக்கவில்லை; நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதாக கூறி இரு தரப்பினரும் புகார் கொடுத்துள்ளனர். அதை நாங்கள் விசாரித்துக் கொண்டிருக்கிறோம்.” என்றார்.
கீழவாசலில் இருக்கும் சி.எஸ்.ஐ. மகிமை ஆலயத்தில் உள்ள போதகர் ஸ்டாலின் ராஜாவை சந்திப்பதற்காக நேரில் சென்ற போது, ”தற்பொழுது மீட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.” என்று அங்குள்ள பணியாளர் நம்மிடம் கூற, அவரை நாம் தொலைபேசியில் இதை பற்றி தொடர்பு கொண்ட போது,
“இப்போதைக்கு பேசுவதற்கு நேரமில்லை மீட்டிங்கில் உள்ளேன்” என நமது தொடர்பை துண்டித்தார். துயரங்களையும் துன்பத்தையும் குறைகளையும் நாம் செய்த பாவங்களை நீக்கி இனிமையான வாழ்க்கை கொடு என கடவுளின் ஆலயத்தில் நாம் கையேந்துகிறோம். அங்கேயும் இப்படி துயரங்கள் ஏற்பட்டால் சாமானிய மனிதன் கடவுளை எங்கே தேடுவான்?
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.