மாவட்டத்திலேயே முதல் முறையாக … சைபர் கிரைம் குற்றவாளிகள் மீது பாய்ந்த குண்டாஸ் !
கேப்பிடல் பைனான்ஸ் என்ற பெயரில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட சைபர் கிரைம் குற்றவாளிகள் இருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து அதிரடி காட்டியிருக்கிறார்கள் திருச்சி மாவட்ட போலீசார்.
சைபர்கிரைம் குற்றவாளிகள் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறைபடுத்தப்படுவது, திருச்சி மாவட்டம் மற்றும் மாநகர் போலீசு வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
திருச்சி மாவட்டம், இலால்குடி புறத்தாக்குடியை சேர்ந்த முதியவர் ஆரோக்கியசாமி என்பவரை தொடர்புகொண்ட, ஆசாமிகள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் தருவதாக பேசியிருக்கிறார்கள். அதற்காக அடுத்தடுத்து பல்வேறு ஆவணங்களை கேட்டு வாங்கியவர்கள், கூடவே அந்த கட்டணம், இந்த கட்டணம் என்று பல்வேறு வகைகளில் சுமார் ஒரு இலட்சம் ரூபாய் வரையில் பணத்தை கறந்திருக்கிறார்கள். சொன்னபடி கடனும் கிடைக்காமல், கையில் இருந்து பணமும் பறிபோன நிலையில்தான், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருந்தார் ஆரோக்கியசாமி.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினத்தின் உத்தரவின்படி, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் களமிறங்கிய போலீசார் திருப்பூரில் பதுங்கியிருந்த ஸ்ரீனிவாசன், மற்றும் தம்பதிகளான கணபதி மற்றும் கவிதா ஆகிய மூவரை கைது செய்திருந்தார்கள்.

இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீனிவாசன் மற்றும் கணபதி ஆகிய இருவர் மீதும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க எஸ்.பி. செ.செல்வநாகரத்தினம் பரிந்துரைக்க, மாவட்ட ஆட்சித்தலைவரும் ஒப்புதல் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு, சிறைபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.
திருச்சி மாவட்டத்தின் எஸ்.பி.யாக செல்வநாகரத்தினம் பொறுப்பேற்றதிலிருந்து (ஜனவரி-2025 முதலாக) இதுவரை 88 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
— ஆதிரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.