சொகுசு தலித் அரசியல் !
பீகாரில் 14 வருஷம்… தமிழ்நாட்டில் 7 வருஷம் தான்… அரசின் நிலைப்பாட்டில் சொகுசு தலித் அரசியல்!
முதல் சம்பவம்:
1997-ல் திமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மாவட்டம், மேலூர் அருகே மேலவளவில் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பட்டியல் சமூகத்தினர் போட்டியிடக் கூடாது என்று கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் மிரட்டலை மீறி, போட்டியிட்டு வெற்றிபெற்ற ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உள்ளிட்ட ஏழு பேர் கள்ளர் சமுகத்தவர்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலைச் செய்யப்பட்டனர்.
நீண்ட விசாரனைக்கு பிறகு நீதிமன்றம் 26 ஜூலை, 2001 அன்று 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி கிரிமினல் வழக்காக கருதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த படுகொலைக்கு காரணமானவர்களை 2008இல் அண்ணாதுரை பிறந்தநாளில் மூன்று பேர் நன்னடத்தைக் காரணமாக திமுக ஆட்சி காலத்தில் முன்விடுதலை செய்யப்பட்டனர். அதிமுக ஆட்சிக்காலத்தில் மீதமுள்ள 14 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், எம். ஜி. ராமச்சந்திரன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 நபர்களும் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் சொந்த கிராமத்திற்கு வரக்கூடாது என்று நிபந்தனையை முதலில் நீதிமன்றம் விதித்தது. ஆனால் அதன் பிறகு அந்த நிபந்தனையையும் நீதிமன்றம் விலக்கிக் கொண்டது.
இரண்டாம் சம்பவம்
தலித் வகுப்பை சேர்ந்த கிருஷ்ணய்யா (IAS 1985 BATCH) ஆந்திர மாநிலத்தைச் தாயகமாக கொண்டவர். இவரின் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் பீகார் மாநிலத்தில் கோபால் கஞ்ச் மாவட்டத்தில் ஆட்சியராக பணிபுரிந்தார். லல்லு பிரசாத் யாதவ் ஆட்சியில் 1994ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பொது இடத்தில் ஒரு கும்பலால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். முதலில் இது நக்சலைட் போன்றவர்களின் தாக்குதல் என்று அரசு கூறினாலும் அதற்கு அடுத்தடுத்த விசாரணைகளில் பீகார் மக்கள் கட்சியின் (பிபிபி) நிறுவனர் மற்றும் நிதிஷ் குமார் ஆதரவாளரான ஆனந்த் மோகன் என்ற ராஜபுத்திர சாதியை சார்ந்தவர் கும்பலாக வந்து தாக்கி படுகொலை செய்தார் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
2007இல் நீதிமன்றம் இந்த வழக்கில் ஆனந்த் மோகன் உட்பட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 2008யில் நடந்த மேல்முறையீட்டில் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. 14 ஆண்டுகள் சிறைவாசத்துக்கு பிறகு ஆனந்த் மோகன் உள்ளிட்ட குற்றவாளிகளை, சிறை விதிகளை திருத்தி நன்னடத்தை என்று காரணம்காட்டி நிதிஷ்குமார் அரசு கொலை யாளிகளை கடந்த ஏப்ரல் மாதம் விடுதலை செய்தது. இதற்கு கிருஷ்ணையா IAS குடும்பமும் பகுஜன் சமாஜ் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
குற்றவாளியின் மகன் சேட்டர் ஆனந்தன் JRD கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஆனந்த மோகன் மனைவி லவ்லி ஆனந்த் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் MP என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலவளவு மற்றும் பீகார் நடந்த இரண்டு படுகொலையில் சம்மந்தப்பட்ட முருகேசன் மற்றும் கிருஷ்ணையா இருவரும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து தன்னுடைய உழைப்பால் உயர்ந்து பிறருக்கு முன் உதாரணமாக திகழ்ந்தவர்கள். இவர்கள் இருவரின் மரணமும் அந்தந்த மாநிலங்களில் கொடூர கொலையாக மாநிலம் முழுதும் பேசப்பட்டது. மேலும் இரண்டு மாநிலங்களிலும் தலித் அமைப்புகள் வலுவாக இருந்தது தற்போதும் இருக்கிறது.
இந்த சாதி இந்துகளால் நடத்தப்படும் அரசுகள், தலித்களை எப்படி அணுகுகிறது என்பதை இந்த இரண்டு படுகொலைகளும் நமக்கு உணர்த்துகிறது. பீகார் மாநிலத்தில் 14 ஆண்டுகள் சிறைக்கு பின்னரே ஆனந்த மோகன் நிதிஷ்குமார் அரசால் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், தமிழகத்தில் 7 ஆண்டுகால ஆன நிலையில் விடுதலையை திமுக அரசு சாத்தியப்படுத்தி உள்ளது. இதை ஒப்பிட்டு பார்க்கும்போது தமிழ்நாட்டில் தலித் இயக்கங்களின் பணி என்னவாக இருக்கிறது என்பதை நம்மால் கேள்வி எழுப்பாமல் இருக்கமுடியவில்லை. எனக்கு தெரிந்து தமிழ்நாட்டில் தலித் அரசியல் என்பது ஒரு சொகுசான சாதி இந்து ஆதரவு அரசியல் நிலைபாட்டில் இருக்கிறது.
ராஜபுத்திரர்களின் வாக்குகளை பெறுவதற்காக, நிதிஷ்குமார் தற்போது ஆனந்த் மோகனை விடுதலை செய்துள்ளார். திமுக தேர்தலை சந்திக்கும் நிலையில் தேவர் சாதியின் வாக்குகளை பெற முத்துராமலிங்கத்துக்கு மணிமண்டபம் அமைக்கும் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இருவரும் அந்தந்த மாநிலத்தின் சமுக நீதி முகங்கள் என்பதுதான் வேடிக்கையானது.
– அருள் முத்துக்குமரன் (அயோத்திதாசர் அம்பேத்கர் வாசகர் வட்டம்)