கை.களத்தூர் தலித் இளைஞன் கழுத்தறுத்து கொலை ! நடந்தது என்ன? நேரடி விசிட் !
கை.களத்தூர் சம்பவம்! அங்குசத்தின் முழுமையான ரிப்போர்ட்!
வீடியோவை காண
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் கை.களத்தூர் கிராமத்தில் மணிகண்டன் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
” குற்றத்திற்கு உடந்தையாக இருந்த காவல் துறையினர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.” என்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கை கைகளத்தூர் சம்பவம் தமிழகம் தழுவிய விவகாரமாக மாற்றியது. இதனை தொடர்ந்து, பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

இது திட்டமிட்ட சாதிய வன்கொடுமை என்றும்; போலீசாரும் இதற்கு உடந்தை என்றும்; இந்த விவகாரத்தை இருவருக்கிடையிலான தனிப்பட்ட பகை என்பதாக திசை திருப்பி ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
மிக முக்கியமாக, மணிகண்டன் போலீசில் புகார் தெரிவித்தும் அதனை போலீசார் முறையாக விசாரிக்காதது ஏன்? சம்பந்தபட்ட இருவரையும் போலீசு நிலையத்தில் வைத்து பேசாமல், அருண் என்பவரின் வயலுக்கு ஏன் செல்ல வேண்டும்? அதுவும் ஏன் ஒரு போலீசாரே மணிகண்டனை கூட்டி செல்ல வேண்டும்? சமாதானம் பேச சென்ற இடத்தில் அறுவாள் எப்படி வந்தது? உடன் சென்ற போலீசு ஏன் கொலையை தடுக்க முயற்சி செய்யவில்லை? என்பது உள்ளிட்ட கேள்விகளை முன்வைக்கிறார்கள்.
இவ்விவகாரம் தொடர்பான கள நிலைமையை அறிய கைகளத்தூர் கிராமத்திற்கு நேரடியாக சென்றோம். சரியான உள்காடு என்று சொல்லும் வகையிலான ஊர்களில் ஒன்று கைகளத்தூர். பாதாங்கி, காந்திநகர், சிறுநிலா, பெருநிலா ஆகிய குக்கிராமங்களையும் உள்ளடக்கியதுதான் கைகளத்தூர் ஊராட்சி. தாலுகா அளவிலான சந்தை நகரத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும்கூட, குறைந்தபட்சம் 10 கி.மீ. தூரம் பயணித்தாக வேண்டும். அந்த கிராம குடியிருப்புகளுள் ஒன்றாகவே, காட்சியளித்தது, கை.களத்தூர் காவல் நிலையம்.
கள்ளக்குறிச்சி மெயின்ரோடு, தெற்குவீதி, நடுவீதி, வடக்கு வீதி, முஸ்லிம் தெரு ஆகிய வீதிகளைக் கொண்ட கைக்களத்தூர் கிராமத்தில், உடையார், குரும்பக்கவுண்டர், வெள்ளாளர், படையாச்சி, வன்னியர், அகமுடையார் மற்றும் பறையர் ஆகிய சாதிகளைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள்.
படுகொலையான மணிகண்டன் வசிக்கும் பகுதிக்கு சென்றோம். தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. ஆண்களின் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. அங்கே நின்றிருந்த பெண்கள் சிலரிடம் பேசினோம். போலீசு கைது நடவடிக்கைக்கு அஞ்சி ஆண்கள் பலரும் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக சொன்னார்கள்.
என்ன சொல்கிறார்கள் மணிகண்டன் குடும்பத்தினர் ?
மணிகண்டன் குடும்பத்தினரை சந்தித்தோம். மணிகண்டனின் தந்தை மோகன்ராஜ், தாயார் செல்வி, மனைவி மீனா, சகோதரிகள் இருவர் உள்ளிட்ட அவரது உறவினர்களும் உடன் இருந்தார்கள். எடுத்த எடுப்பிலேயே, “கொலைக்கு காரணமான குற்றவாளிகள் சுதந்திரமாக இருக்கிறார்கள். ஒரு உயிரையும் இழந்து நிம்மதியையும் இழந்து போலீசுக்கு பயந்து வாழும் நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறோம். எங்களால ஊர்ல இருக்கிற எல்லோரும் பாதிக்கப்பட்டிருக்காங்க. தேடித்தேடி கைது செய்கிறார்கள். 5 பேரை கொடு 10 பேரை கொடுனு கேட்கிறார்கள்.” என்பதாக ஆதங்கத்தை கொட்டினார்கள் மணிகண்டனின் சகோதரி காயத்ரியும் தந்தை மோகன்ராஜும்.

என்ன நடந்தது? என்ற கேள்வியோடு தொடங்கினோம். மணிகண்டனின் சகோதரி காயத்ரி சம்பவங்களை விவரிக்கத் தொடங்கினார்.
“இரண்டு டிரைவருக்குள்ள சண்டைனு எஸ்.பி. பேட்டி கொடுக்கிறாரு. தனிப்பட்ட விரோதம்னு சொல்றாரு. அப்படி என்ன தனிப்பட்ட விரோதம்னு போலீசுதான் சொல்லனும். இது திட்டமிட்ட சாதிய படுகொலை. தேவேந்திரனுக்கும் மணிகண்டனுக்கும் காலையில டீக்கடையில சண்டை நடந்திருக்கு.
டீக்கடையில பூமாலைங்கிறவர என் தம்பி பேர சொல்லி கூப்பிட்டதுக்கு பறப்பயல்லாம் உன்ன பேரவிட்டு கூப்பிடுறான்னு தேவேந்திரன் சொல்லியிருக்கான். அதுக்கு பூமாலை, விடுடா புதுசாவா கூப்பிடுறான். எப்போவும் கூப்பிடுறதுதானே சொல்லியிருக்காரு. பதிலுக்கு, என் தம்பியும் என் வீட்டுல ஒன்னா சாப்பிடும்போதெல்லாம் என் சாதி என்னன்னு தெரியலியானு பேசியிருக்கான். அப்படியே, சண்டை வளர்ந்திருக்கு. அப்போ, தேவேந்திரனோட மாமா முருகேசன்கிட்ட சொல்றேனு சொல்லியிருக்கான். அவரு ஊராட்சி தலைவரா இருக்கிறாரு. என் தம்பியும் எவனா இருந்தாலும் வர சொல்லுனு பேசியிருக்கான்.

நடந்த விசயத்தை என் தம்பி வாய்வழியா ஸ்ரீதர் கிட்ட சொல்லியிருக்காரு. ஸ்ரீதர் அருணுக்கு போன் போட்டு சொல்றாரு. அவரும் கூட்டிட்டு வா னு சொல்லியிருக்காரு. எஸ்.ஐ.கிட்ட சொல்லாம, ஏன் அருண்கிட்ட சொல்லனும்? இது திட்டமிட்ட செயல். சமாதானம் பேசப்போன இடத்துல எப்படி கத்தி வரும்? ஸ்ரீதர் தான் மணிகண்டன அழைச்சிட்டு போனாருனு ஊர்ல எல்லாம் பார்த்திருக்காங்க. கூட்டிட்டு போன பத்து நிமிசத்துல மணிகண்டன் இறந்து போயிட்டானு நியூஸ் வந்திருச்சு. ஸ்ரீதரும் தேவேந்திரனும் ஜாலியா தோள் மேல கை போட்டு வர்றத மாரியம்மன் கோயில்ல உட்கார்ந்திருந்த எல்லோரும் பார்த்திருக்காங்க. எங்களுக்கு எந்த நியூஸும் தெரியாது. மக்கள்தான் ஒன்னு ஒன்னா எங்களுக்கு சொல்லிகிட்டு இருக்காங்க.
ஒரு பறயனா இருக்கிற பையன் நம்மள தலைவரா இருக்கும்போதே மரியாதை இல்லாம பேசுறானே.. நாளைக்கு உன்னையும் இதுமாதிரிதானே பேசுவான்னு அருண்கிட்ட முருகேசன் பேசியிருக்காங்க. அருண் போலீசுக்கு இலஞ்சம் கொடுத்து மணல் அள்ளுறதெல்லாம் மணிகண்டனுக்கு தெரியும். முருகேசனும் அருணோட அண்ணன் சிவாவும் டாஸ்மாக் பார் நடத்துறாங்க. அங்க கஞ்சா விக்கிறாங்கனுலாம் சொல்றாங்க. போலீசுக்கு இலஞ்சம் எல்லாம் என் தம்பிதான் வாங்கிக் கொடுப்பான் போல. இப்பவே இவன் நம்மள எதிர்க்க ஆரம்பிச்சிட்டான். இவன் வேலைக்கு வரலைனு வேற சொல்றான். இவன இப்படியே வெளியே விட்டா எல்லா உண்மையும் தெரிஞ்சுரும்னு இப்படி செஞ்சிட்டாங்க. இது திட்டமிட்ட சாதிய படுகொலை.” என்பதாக சொல்லி முடித்தார் காயத்ரி.
”அருண்கிட்ட வேலை செய்ய பிடிக்கல வேற பக்கம் வேலைக்கு போறேன்னு சொன்னான். நம்மகிட்ட இருக்கிற டிராக்டர சரிபண்ணி கொடு மண்ணடிக்கிறேன்னு சொன்னான். அத செலவு பன்ன காசு இல்லை, அப்புறம் பாத்துக்கலாம்னு சொன்னேன். அதுக்குள்ள இப்படி ஒரு சம்பவம் நடந்திருச்சு.” என்றார் மணிகண்டனின் தந்தை மோகன்ராஜ்.
“அவங்க மண் அடிக்கிறது எல்லாம் வெளிய தெரியவே மாட்டேன்கிறது. எங்க ஆளுங்க வண்டிய வச்சி மண் அள்ளுனா உடனே போலீசு கேஸ் போடுறாங்க.” என்கிறார் காயத்ரி.
“அருண் பர்மிஷன் இல்லாமல் கிராவல் மண் எடுக்கிறதுக்கு போலீசுக்கு காசு கொடுப்பாங்க. அத என் மகன் மூலமாகத்தான் கொடுத்து விடுவாங்க. என் மகனே இதை சொல்லியிருக்கிறான்.” என்கிறார் மணிகண்டனின் தாயார் செல்வி.

“நியூ இயர் அன்னைக்கு எஸ்.ஐ. சண்முகம், ஸ்ரீதர் போலீசு எங்க வீட்டுக்கு வந்தாங்க. நான் தான் அவங்களுக்கு தோசை சுட்டுக் கொடுத்தேன். சாப்பிட்டுதான் போனாங்க. ஒன்னாவே இருந்திட்டு அவர இப்படி பன்னிட்டாங்க.” என்றார், மணிகண்டனின் மனைவி மீனா.
மணிகண்டன் குடும்பத்தினரிடம் நாம் பேசிக்கொண்டிருந்தபோது, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் சென்னை பிரிவு மண்டல இயக்குநர் ரவிவர்மா விசாரணைக்காக வந்திருந்தார். வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நிவாரணம் குறித்தும் அதிகாரிகளிடமும் விசாரித்தார். முதற்கட்டமாக, குடும்பத்தினருக்கு 6 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாகவும்; வீட்டுமனை வழங்குவதாகவும்; அவரது மனைவிக்கு வேலை வழங்குவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
தேடி தேடி கைது செய்கிறதா, போலீசு?
விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே அப்பகுதி மக்கள் திரளாக குவிந்துவிட்டனர். ரவிவர்மாவை சூழ்ந்து கொண்டு போலீசின் கைது நடவடிக்கை குறித்து பொதுமக்கள் தங்களது குமுறல்களை கொட்டித் தீர்த்தனர். அப்போது சிலர் அவர் காலில் விழுந்தும் மண்டாடினர். எஸ்.பி.யிடமும் கலெக்டரிடமும் சொல்கிறேன் என்பதாக வாக்குறுதியளித்து கிளம்பினார் ரவிவர்மா.
அங்கே குழுமியிருந்தவர்களிடம் பேசினோம். ““மணிகண்டன் எல்லோருடனும் நல்லா பழகுவான். துணிச்சலாவும் பேசுவான். அநியாயமா இப்படி கொன்னுட்டாங்களேன்னுதான் அன்னைக்கு நாங்க எல்லாம் ஒன்னா சேர்ந்து போனோம். போன இடத்துல சிலர் ஆத்திரத்துல ஸ்டேஷன்ல சில பொருள உடைச்சிட்டாங்க. இப்ப எங்க தெருவுல ஒரு ஆம்பள ஆளுங்க கூட இருக்க முடியாத அளவுக்கு ஆளாகியிருக்கிறோம்.” என்பதாக சொன்னார்கள்.

போலீசுக்கு பயந்து வெளியூரில் தங்கியிருக்கும் இளைஞர் ஒருவரிடம் பேசினோம். “பத்து மாச கைக்குழந்தையோட பொண்டாட்டிய விட்டுட்டு தலைமறைவாக ஓட வச்சிட்டாங்க. முதல்ல தண்ணீர் தொட்டி பக்கத்துலதான் மணிகண்டன் பாடிய வச்சி மக்கள் போராட்டம் நடத்திட்டு இருந்தாங்க. நியூ இயர்க்கு கூட என் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு போயிட்டு, ஒன்னாவே பழகிட்டு, இப்படி பன்னிட்டானேனு ஸ்ரீதர் போலீச பத்தி அவங்க குடும்பத்தார் சொல்லி அழுறத கேட்டதுக்கு அப்புறம்தான் அதனால ஆத்திரமான எங்க தெரு பசங்க பத்து பதினைஞ்சு பேர் போலீஸ் ஸ்டேஷன் போயி பொருள உடைச்சிருக்காங்க. அதுக்கப்புறம்தான் மொத்தக்கூட்டமும் போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்தாங்க.” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயலரும் வழக்கறிஞருமான ரத்தினவேலுவிடம் பேசினோம். ” பி.சி.ஆர். செக்சன்ல கேசு போட்டிருந்தாலும், இன்ன வரைக்கும் ஏ3 போலீஸ் ஸ்ரீதரை கைது செய்யல. மணிகண்டன் சாவுக்கு நீதி கேட்டு பொதுமக்கள் போலீசு நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். வெளியில் இருந்த சில டியூப்லைட்டுகளைத்தான் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். ஆனால், ஸ்டேஷன் உள்ளே புகுந்து 5,11,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்திவிட்டார்கள் என்று 109 பேர் மீது கேசு போட்டிருக்கிறார்கள். தற்போது வரையில் 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஊரில் உள்ள ஆண்கள் எல்லாம் தலைமறைவாக வாழும் நிலையை உருவாக்கிவிட்டார்கள்.” என்கிறார்.
கைது நடவடிக்கை குறித்து விளக்கம் அறிய கைகளத்தூர் இன்ஸ்பெக்டர் பாலாஜியிடம் பேசினோம். ”வழக்கின் விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. சார்தான். அவங்க இல்லாம நான் எதுவும் கருத்து சொல்ல முடியாது” என்பதாக, சொல்லிவிட்டார். மங்களமேடு டி.எஸ்.பி. தனசேகரை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. வாட்சப் வழி அனுப்பிய குறுந்தகவலுக்கும் பதிலில்லை.
நடந்தது என்ன?
அடுத்து, ஜன-17 அன்று என்னதான் நடந்தது? என்ற கேள்விக்கான விடையைத் தேடி பயணித்தோம். ”மணிகண்டனுக்கும் தேவேந்திரனுக்கும் முதல்நாளும் தகராறு நடந்திருக்கிறது. சம்பவத்தன்னைக்கு காலையிலும் தகராறு நடந்திருக்கிறது. இருவரும் செருப்பால் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். மணிகண்டன் போலீசில் சொல்லியிருக்கிறார். இருவரையும் போலீசு நிலையத்தின் முன்பாக வைத்து பேசியிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் இருவரும் கட்டுப்படவில்லை என்பதால், அவரது ஓனர் அருணிடம் சொல்லி சமாதானம் செய்து வைப்பதற்காக மணிகண்டனை கூட்டிச் சென்றபோதுதான் சம்பவம் நடந்திருக்கிறது.” என்பதாக சொல்கிறார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினவேல்.
மணிகண்டன் குடும்பத்தினரும் அவருக்கு ஆதரவாக இருந்துவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியை சேர்ந்தவர்கள் அனைவரும் இதே கருத்தைத்தான் சொன்னார்கள்.
மணிகண்டன் குறித்தும் தேவேந்திரன் குறித்தும் கேள்விகளோடு சிலரை அணுகினோம். ”கொலையான மணிகண்டன் பறையர் சாதியைச் சேர்ந்தவர். கொலை செய்த தேவேந்திரன் உடையார் சாதியைச் சேர்ந்தவர். இருவருமே, அதே ஊரைச் சேர்ந்த உடையார் சாதியைச் சேர்ந்த அருண் என்பவரிடம் நெல் அறுவடை இயந்திரம் ஓட்டுநராக வேலை செய்து வந்தவர்கள். மணிகண்டனும் தேவேந்திரனும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்றபோதும், இருவரும் நண்பர்களாகவே பழகி வந்திருக்கிறார்கள். வயல்ல வண்டி ஓட்றப்போ ஒருவரை ஒருவர் கெட்ட வார்த்தையில் திட்டிக்கொண்டே சகஜமாகத்தான் பேசிக்கொள்வார்கள். ஒன்றாக, சரக்கு அடிக்கக்கூடியவர்கள். எப்போதும் ஒன்றாகத்தான் இருப்பார்கள்.” என்பதையே, நாம் சந்தித்து பேசிய பலரும் தெரிவித்தார்கள்.
அதிலும், மணிகண்டன் கைகளத்தூர் போலீசாரோடு நல்ல நட்பில் இருந்து வந்தவர் என்கிறார்கள். கைகளத்தூர் பகுதியில் கள்ளத்தனமாக டாஸ்மாக் சரக்கு விற்பணை, கஞ்சா விற்பணை, கிராவல் மண் எடுப்பது போன்ற தொழில்களில் ஈடுபடுபவர்களிடமிருந்து ஸ்டேஷனுக்கு மாமூல் வசூலித்து தரும் வேலையை மணிகண்டன் செய்து வந்ததாகவும் சொல்கிறார்கள்.
“வேலை இல்லாத நேரங்களில் பெரும்பாலும் போலீஸ் ஸ்டேசனில்தான் இருப்பார். போலீசாருக்கு உதவியாக டீ, டிபன் வாங்கி வருவது போன்ற வேலைகளையும் மணிகண்டன் செய்வார்” என்பதை அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களும் உறுதிபடுத்துகிறார்கள்.
இதிலிருந்து மணிகண்டனும் தேவேந்திரனும் நண்பர்களாகவே இருந்து வந்தவர்கள் என்பதையும்; அதில் மணிகண்டன் போலீசாருடன் இணக்கமாக இருந்து வந்தவர் என்பதையும் அறியமுடிகிறது. இந்த விவகாரத்தில் இந்த பின்புலம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்திருக்கிறது.
தேவேந்திரன் குடும்ப ஆதரவு இன்றி தனியாகவே வசித்து வந்திருக்கிறார். தாய், தந்தை இருவருமே இறந்துவிட்டார்கள். தேவேந்திரனின் மனைவியும் குழந்தை இல்லாத நிலையில் பிரிந்துவிட்டார் என்கிறார்கள். சொந்த ஊரில் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறார். தேவேந்திரனுக்கு குடிப்பழக்கத்தோடு, கஞ்சா பழக்கமும் இருந்திருக்கிறது. சம்பவம் நடைபெற்ற நாளில்கூட, முழு கஞ்சா போதையில்தான் அவர் இருந்திருக்கிறார். ”போலீஸ் ஸ்டேஷனுக்கு தேவேந்திரனை அழைத்து வந்தபோதுகூட, அவரது பாக்கெட்டில் கஞ்சா இருந்திருக்கிறது. போலீசார் அதை அங்கேயே எரித்துவிட்டார்கள்” என்றும் சொல்கிறார்கள்.

நண்பர்களிடையே முரண்பாடு :
நல்ல நண்பர்களாக பழகிவந்த இருவருக்கும் இடையில் சில மாதங்களாகவே முரண்பாடு ஏற்பட்டிருக்கிறது. அவ்வப்போது சண்டையிட்டும் வந்திருக்கிறார்கள். சம்பவத்திற்கு முதல்நாளும் இருவருக்கும் தகராறு நடந்ததாக சொல்கிறார்கள். இதனை மணிகண்டனின் தந்தையும் சொல்லியிருக்கிறார். இறுதியாக, சம்பவம் நடைபெற்ற ஜன-17 ஆம் தேதியன்று காலை 7 மணியளவில் தேவேந்திரனுக்கும் மணிகண்டனுக்கும் கடும் வாக்குவாதமும் கைகலப்பும் நடந்திருக்கிறது. தேவேந்திரனும் பூமாலை என்பவரும் ஒன்றாக பால் ஊற்றிவிட்டு வந்தபோது, போலீசு நிலையம் எதிரில் அமைந்திருக்கும் கருப்பட்டிகாபி டீகடை முன்பாக இந்த சண்டை நடந்திருக்கிறது.

அந்த சம்பவத்தை நேரில் பார்த்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரிடம் பேசினோம். “இருவருமே தே.மகனே என்று ஒருவரை ஒருவர் மாறி மாறி கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டார்கள். அப்படியே கைகலப்பாகி இருவரும் அடித்துக் கொண்டார்கள். முதலில் மணிகண்டன் செருப்பால் தேவேந்திரனை பத்துமுறைக்கு மேல் அடித்திருப்பார். பதிலுக்கு தேவேந்திரனும் மணிகண்டனை செருப்பால் அடித்தார். இருவரும் இன்னிக்குள்ள உன் சங்க அறுக்கிறேன்டா என்று மாறிமாறி பேசிக் கொண்டார்கள். பிறகு, ஒருவருக்கு ஒருவர் கல்லை எடுத்தும் வீசிக் கொண்டார்கள். அங்கிருந்தவர்கள் அவர்களை சண்டைபோட்டு பிரித்து விட்டார்கள்.” என்றார்.
சம்பவ இடத்தில் இருந்ததாக சொல்லப்படும் பூமாலையிடம் அங்கிருந்தபடியே தொலைபேசியில் பேசினோம். ஒருவித பதட்டத்துடனே பேசியவர், “அந்த இடத்தில ரெண்டு பேருக்கும் சண்டை நடந்தது உண்மை. நான் விலக்கி விட்டதும் உண்மை. மத்தபடி, அங்க என்ன நடந்துச்சின்னு அந்த கடையில இருக்கிற சிசிடிவி காமிராவுல பதிவாயிருக்கும். அதுக்கு மேல நான் சொல்ல ஒன்னும் இல்ல.” என்பதாக முடித்துக் கொண்டார்.
போலீசு ஸ்ரீதர் மணிகண்டனை ஏன் கூட்டி சென்றார் ?
போலீசு வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். “ போலீஸ் ஸ்டேஷனுக்கு டீ வாங்க சென்றபோதுதான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. சம்பவம் நடந்த கையோடு போலீஸ் ஸ்டேஷனிலும் சொல்லியிருக்கிறார் மணிகண்டன். இருவரை பற்றியும் நன்கு அறிந்தவர்கள் என்ற அடிப்படையில் “உங்களுக்குள்ள என்னடா? விடு பேசிக்கலாம்.” என்று அலட்சியமாக சம்பந்தபட்ட எஸ்.ஐ. சொல்லியிருக்கிறார். மீண்டும் ஸ்டேஷனுக்கு டிபன் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதன்பிறகு, பாதங்கி என்ற ஊரில் இடத்தகராறு தொடர்பாக பெரியசாமி என்பவர் கொடுத்திருந்த புகார் தொடர்பாக விசாரணை செய்வதற்காக ஸ்ரீதர் மணிகண்டனை உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். பாதங்கிக்கு போயிட்டு ஸ்டேஷனுக்குத் திரும்ப வந்து கொண்டிருந்தபோதுதான், அப்படியே வீட்டில் இறக்கிவிடுமாறு மணிகண்டன் கேட்டிருக்கிறார். பழக்கத்தின் அடிப்படையில் எப்போதும்போல, ஸ்ரீதரும் அவரை தனது பைக்கில் கூட்டிச் சென்றிருக்கிறார். போகிற வழியில்தான் இப்படி ஒரு சம்பவம் நடந்திருச்சு.” என்பதாக தெரிவிக்கிறார்கள்.
இந்த தகவலை உறுதிபடுத்தும் விதமாக, பாதங்கியை சேர்ந்த செல்வராஜிடம் பேசினோம். சிபிஎம் கட்சியின் பாதங்கி கிளை செயலராக இருக்கும் செல்வராஜுக்கும் அவரது உறவினர் பெரியசாமிக்கும்தான் பிரச்சினை. “பெரியசாமி கொடுத்த புகார் தொடர்பாக, விசாரிக்க போலீசு ஒருவரோடு மணிகண்டனும் வந்திருந்தார். மணிகண்டன் என் உறவுக்காரப் பையன்தான். விசாரணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்கள் காலை 9 மணி வாக்கில் வந்திருந்தார்கள். அவர்கள் சொல்லிவிட்டு சென்றபிறகு, ஒரு முக்கால் மணி நேரம் கழித்து கைகளத்தூர் கிளம்பி சென்றேன். அப்போதுதான் அந்த கொலை சம்பவமும் நடந்திருந்தது. மக்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டிருந்தார்கள்.” என்பதாக சொன்னார்.
நேரடி சாட்சி சொல்வது என்ன ?
பஞ்சாயத்து நடைபெற்றதாக சொல்லப்படும் கொலை சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்றோம். அருணுக்கு உறவினரான ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்துடன் இணைந்த வீடு அது. கள்ளக்குறிச்சி – பெரம்பலூர் மெயின்ரோட்டை ஒட்டியே அமைந்திருக்கிறது. நாம் அங்கே சென்ற சமயத்தில், போலீசார் சிலர் ராமலிங்கத்திடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஜன-17 அன்று நடைபெற்ற சம்பவத்தை விவரிக்கத் தொடங்கினார், ராமலிங்கம்.

”அருணுக்கு சொந்தமான வண்டிகள் என் வீட்டு முன்னாடிதான் எப்போதும் நிற்கும். இதே மணிகண்டனும், தேவேந்திரனும் இங்க வந்துதான் வண்டிய எடுத்துட்டு போவாங்க. வந்து விடுவாங்க. சம்பவத்தன்னைக்கு அருண் என் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். போலீஸ் ஸ்ரீதரும் மணிகண்டனும் ஒரே பைக்கில் போனாங்க. அருண பார்த்ததும் மணிகண்டன்தான் வண்டிய நிறுத்த சொன்னான். எங்கள பார்த்த மாதிரி ஸ்ரீதர் வண்டிய நிப்பாட்டினாரு. மணிகண்டன் ஒரு காலை கீழே வைத்துவிட்டு மற்றொரு காலை எடுத்து கீழே இறங்க முயன்றார். அப்போது பின்னாடியே எக்ஸெல் வண்டியில தேவேந்திரனும் வந்தான். வந்தவன், மணிகண்டன் இறங்கிறதுக்குள்ள அறுவாள எடுத்து கழுத்துல வீசுனான்.

மணிகண்டன் திரும்பறதுக்கும் தேவேந்திரன் அறுவாள வீசுறதுக்கும் சரியா இருந்துச்சு. மணிகண்டன் இன்னொரு காலையும் கீழே எடுத்து வச்சிருந்தா, கையை குறுக்க நீட்டி தடுத்திருப்பான். அதுக்கு அவகாசமே இல்ல. தேவேந்திரனும் அறுவாள வீசுன வேகத்துக்கு அறுவாளோட நடுப்பகுதி பட்டிருந்தா, தலை தனியா விழுந்திருக்கும். கொஞ்சம் தள்ளி நின்னுகிட்டு வீசுனதால, அறுவாளோட வளைவா இருக்கிற முனைப்பகுதி கழுத்த அறுத்திருச்சி. அப்படியே நான் தான் கைத்தாங்கலா கீழே உட்கார வச்சி துணியை கழுத்துல சுத்துனேன். கழுத்துல துணியை வச்சி அழுத்திப்பிடிக்கவும், மூக்கு வழியா ரத்தம் வந்துருச்சு. தேவேந்திரன ஸ்டேஷனுக்கு ஸ்ரீதர் இழுத்துட்டு போனாரு. அருணும் நானும்தான் அந்த வழியா போன ஒரு வண்டிய மறிச்சு மணிகண்டன ஆஸ்பத்திருக்கு கூட்டிட்டு போனோம்.” என்பதாக சொல்கிறார்.

அந்த கிராமத்தில் நிலவும் சாதி பாகுபாடுகள், சாதிய மோதல்கள் குறித்த விசாரணையில் இறங்கினோம். ஆதிக்க சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சுற்று வட்டாரத்தில் எந்த ஊரில் பிரச்சினை என்றாலும் முதல் ஆளாய் நிற்பவர் என்பதாக சொல்லப்படும் சிபிஎம் கட்சியின் ஒன்றிய செயலாளர் கே.எம்.சக்திவேலை சந்தித்து பேசினோம். ” மணிகண்டன் போலீசோட நெருக்கமா இருந்திருக்கான். ஊருக்குள்ளேயே ஸ்டேஷன் இருக்கிறதால, போலீசாரும் மக்களோட சகஜமாகத்தான் பழகுவாங்க.
அடுத்து, இவங்க ரெண்டு பேர பத்தியும் போலீசுக்கு தெரியுங்கிறதாலதான், விடுடா பேசிக்கலாம்னு சொல்லியிருக்காங்க. மத்தபடி, மணிகண்டன் குடும்பத்தினர் சொல்ற மாதிரி போலீசுக்கு மாமூல் கொடுத்திட்டு கிராவல் மணல் அள்ளுறது, பிளாக்ல சரக்கு ஓட்டுறது, கஞ்சா விக்கிறதுன்னு நடந்துகிட்டுதான் இருக்கிறது. நண்பர்களாக இருந்த மணிகண்டனுக்கும் தேவேந்திரனுக்கும் என்ன முரண்பாடு வந்துச்சு. அது இவ்வளவு வெறியா மாறிச்சின்னு போலீசார்தான் விசாரிக்கனும். மத்தபடி, கஞ்சா போதைதான் முக்கிய காரணம். இதை சாதிய ரீதிய மோதல்னு சொல்லி சொல்றதால, இப்போது இருக்கிற ஒற்றுமை கூட குறைய வாய்ப்பிருக்கிறது.

சாதிய ரீதியிலான மோதல் என்று சொல்வதற்கு இங்கு அடிப்படையே இல்லை. அதுபோன்ற இரு தரப்பாக நின்று சண்டையிட்டுக் கொண்டதாக பின்னணி எதுவும் இல்லை. சாதிய ரீதியிலான சண்டை என்றால், இந்தப் பக்கம் பத்து பேர் ஆதரவாக நிற்பார்கள். அந்தப் பக்கம் பத்துபேர் இருப்பார்கள். இங்கே அதுபோல் இல்லை. தேவேந்திரனுக்கு குடும்பமே கிடையாது. தனி ஆள்தான். டீக்கடையில காலையில நடந்த சம்பவம்தான் தேவேந்திரனை பாதிச்சிருக்கு. அம்மாவ பத்தி திட்டிட்டானு ஒன்னு. அடுத்து, அத்தனை பேர் பார்க்க செருப்பால அடிச்சிட்டானு. அந்த வெறியிலதான முழுக்க கஞ்சா போதை தலைக்கேறிய நிலையில்தான் இந்த சம்பவத்தை செய்திருக்கிறான். மேலும், இந்த விவகாரத்தில் உள்ளூர் போலீசார் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கும் நிலையில், அவர்களே தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை நடத்துவது சிக்கலுக்குரியது.
எங்க கட்சிக்காரங்களும் இது புரியாம சாதிய மோதல்னு போராட்டம் எல்லாம் அறிவிச்சிருக்காங்க. கேட்டால், மேலிடத்துல சொல்லிட்டாங்க செஞ்சாகனும்னு சொல்றாங்க. சாதிய கண்ணோட்டத்தில்தான் இதை சொல்றேனு எடுத்துக்கிட்டாங்களான்னும் தெரியல. கட்சி தலைமைக்கும் இத எடுத்து சொல்லியிருக்கேன். உள்ளூர் அளவில இருக்கிற ஆளுங்களுக்குத்தான் கள நிலைமை என்னனு தெரியும். கட்சி அதை கணக்கில் எடுத்துக்கனும்.” என்பதாக தெரிவிக்கிறார்.

32 வயதுடைய மணிகண்டனின் உறவுக்கார இளைஞர் ஒருவரிடம் பேசினோம். ”எனக்கு தெரிந்து எங்கள் ஊரில் பெரிய சாதிய மோதல்கள் எதுவும் சமீபத்தில் நிகழ்ந்ததில்லை. எனக்கு பத்து வயதாக இருக்கும்போது ஒருமுறை இருதரப்புக்கும் இடையில் சண்டை நடந்திருக்கிறது.” என்பதாக சொல்கிறார்.
ஒரே குற்றம் : இரு வேறு தண்டனைகள் – இதுதான் சாதிய வன்கொடுமை !
இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலர் கே.சாமுவேல்ராஜனிடம் பேசினோம். “கொலை செய்யும் அளவுக்கு என்ன பெர்சனல் மோட்டிவ் என்பதை போலீசார்தான் சொல்ல வேண்டும். புகாரை புகாராக எடுக்காமல் விட்டதன் விளைவுதான் இது. மற்றபடி, போஸ்ட்மார்டம் அறிக்கை வந்தபிறகுதான் பேச முடியும். தஞ்சாவூரில் ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில், பட்டியலின சாதியைச் சேர்ந்த 62 வயது முதியவரை பீர் பாட்டிலால் குத்திக் கொன்றிருக்கிறார்கள். ஆடு மேய்ப்பதில் ஏற்படும் தகராறுக்கெல்லாமா, கொலை செய்வார்கள். இதே அவரது பங்காளியாகவோ, உறவினராகவோ இருந்திருந்தால் அது கை கலப்பாகவே முடிந்திருக்கும்.

மதுரை தங்கம்பட்டியில் ஊர்த்தெருவில் நடைபெற்ற திருவிழாவில் காலனியை சேர்ந்தவர்கள் டான்ஸ் ஆடினார்கள் என்பதற்காக, சிறுநீர் கழித்து அவமானப்படுத்தி ஆறு வயது சிறுவனை காலில் விழ வைத்திருக்கிறார்கள். இரண்டுமே ஒரே ஊர்தான் . ஊர் பொது இடத்தில் கோயில் இருக்கிறது . ஆனாலும், ” உன் தெருவில் போய் ஆடு. எங்க ஊருல வந்து ஆடுவியா?” என்பதுதான் ஆதிக்க சாதியினரின் மனநிலை.
கைகளத்தூரையே எடுத்துக் கொண்டாலும், இருவரும் ஒரே சாதியினராக இருந்திருந்தால் கொலையாக மாறியிருக்காது. இதுபோன்ற சம்பவங்களில் குற்றம் ஒன்றுதான். சாதிக்கேற்ப தண்டனை மாறுபடுகிறது. இதைத்தான் சாதிய வன்கொடுமை என்கிறோம். ” என்கிறார் அவர்.

விடை காண வேண்டிய கேள்விகள் !
அங்குசம் கள விசாரணையில் இருந்து, டீக்கடையில் காலை 7.00 மணியளவில் சண்டை நிகழ்ந்திருக்கிறது. பாதங்கிக்கு செல்லும் வரையிலான இடைப்பட்ட நேரத்தில் மணிகண்டன் போலீசு நிலையத்தில்தான் இருந்திருக்கிறார். காலை 9 – 9.30 அளவில் பாதங்கிக்கு சென்றிருக்கிறார். திரும்பி வந்த நிலையில் 9.50 – 10.00 மணிக்குள்ளாக சம்பவம் நடைபெற்றிருப்பதாக அறிய முடிகிறது. இதனை சம்பந்தபட்ட டீக்கடையில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளே உறுதிபடுத்திவிடும் என்கிறார்கள்.
இதில், ஸ்ரீதர் முன்கூட்டியே அருணுக்கு தகவல் சொன்னாரா? வீட்டிற்கு செல்லும் வழியில் ஓனர் என்ற முறையில் அருணை பார்த்ததும் வண்டியை நிறுத்த சொல்லி மணிகண்டன் சொல்லித்தான் ஸ்ரீதர் வண்டியை நிறுத்தினாரா? நேற்றுவரை நண்பர்களாக பழகி வந்தவர்கள் திடீரென்று பகைத்துக் கொள்வதற்கான பின்னணி என்ன? போலீசுக்கும் மணிகண்டனுக்கும் இடையிலான நெருக்கம்; கஞ்சா புழக்கம்; அருண் அவரது சகோதரர் சிவா ஆகியோரின் தொழில் குறித்த குற்றச்சாட்டுக்கள்; பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்தெல்லாம் போலீசார் விடையளிக்க வேண்டிய விவகாரங்களாக அமைந்திருக்கின்றன.
அங்குசம் புலனாய்வுக்குழு.