டால்மியா சிமெண்ட் ஆலையில் ரகளை – நடந்தது என்ன ?
டால்மியா சிமெண்ட் ஆலையில் ரகளை – நடந்தது என்ன ?
திமுக-வுக்கு இது போதாத காலம் போல. ஆளுனரையும் அமலாக்கத்துறையையும் வைத்துக்கொண்டு ஆளும் பாஜக கொடுக்கும் குடைச்சல்கள் போதாதென்று, ஆன்லைன் தொடங்கி ஆஃப்லைன் வரையில் கழக உடன்பிறப்புகள் சிலர் வாய்க்கொழுப்பெடுத்து பேசியும், அடாவடியில் ஈடுபட்டும் பிரச்சினையில் சிக்கி வருகிறார்கள்.
இந்தப் பட்டியலில் சமீபமாக சேர்ந்திருக்கிறார் கல்லக்குடி நகர திமுக செயலரும், கல்லக்குடி பேரூராட்சி தலைவருமான பால்துரை. கல்லக்குடியில் இயங்கிவரும் டால்மியா சிமெண்ட் ஆலை அலுவலகத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் புகுந்து அங்கிருந்த கணிணி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியிருக்கிறார். சிசிடிவி காட்சிப்பதிவுகளோடு கல்லக்குடி போலீசு நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறது, டால்மியா சிமெண்ட் ஆலை தரப்பு.
மாசா மாசம் முறையா கொடுக்கும் மாமுல் போதாதென்று, ”ஆலைக்குள் நடக்கும் பல்வேறு திட்டப்பணிகளுக்கான டெண்டரை எனக்கும் கொடு. நான் சொல்ற ஆளுக்கு வேலையை கொடு”னு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும், அவரது கோரிக்கைகள் எதையும் டால்மியா ஆலை நிர்வாகம் கண்டுக்கொள்ளாமல் புறக்கணித்ததாகவும் சொல்லப்படுகிறது. டால்மியா ஆலையில் வேலை வாங்கித்தருகிறேன் என்று பலரிடம் பணம் வசூலித்திருப்பதாகவும்; பணம் கொடுத்தவர்கள் ”வேலை எப்போது வாங்கித்தருவீர்கள்” என்று பால்துரை தரப்பை நெருக்க, அவரும் போதையில் டால்மியா ஆலை அலுவலகத்தை நொறுக்கிவிட்டார் என்கிறார்கள்.
இது குறித்து சம்பந்தபட்ட கல்லக்குடி பேரூராட்சி தலைவர் பால்துரையிடம் பேசினோம், ”டால்மியா நிர்வாகம் அவங்க ஓனர் வர்றாருனு சொல்லி காம்பவுண்ட் கட்டினாங்க. அவர் வந்து போனதுக்கு அப்புறம் இடிச்சிருவேனு சொன்னாங்க. ஆனா, அவங்க இடிக்காமலே வச்சிருந்தாங்க. இதனால பப்ளிக்கு இடையூறா இருக்குனு சொன்னேன். அன்னைக்கு வண்டியில போனப்ப எனக்கே ஆக்சிடென்ட் ஆச்சு. கை கால்ல அடி. அதோடதான் போனேன். பத்துமணிக்கு ஆபிஸ்ல அதிகாரிங்க இருக்க மாட்டாங்கனு தெரியும். ஆக்சிடன்ட் ஆகுது, பொதுமக்களுக்கு பாதிப்பா இருக்குனு அதிகாரிங்கள வரவச்சு சொல்லத்தான் போனேன். குடிச்சிட்டு எல்லாம் போகல. 20 நிமிசம் இருக்கும் உட்கார்ந்து பார்த்துட்டு வந்துட்டேன்.
டால்மியா கம்பெனிக்கு எதிராக நாங்க 12 அம்ச கோரிக்கையை வச்சி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்துறதா அறிவிச்சிருந்தோம். அத திசைதிருப்பத்தான் இப்படி பன்னிட்டாங்க. டால்மியா கம்பெனி தரப்பில் இருந்து யாரும் புகார் கொடுக்கல. அப்புறம் எப்படி சிசிடிவி புட்டேஜ் மீடியாவுக்கு போச்சு? கட்சிக்குள்ளயே காழ்ப்புணர்ச்சி இருக்கு. இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியனுக்கும் எனக்கும் கட்சி விசயத்துல சின்ன மனக்கசப்பு இருக்கு. அவருக்கு வேண்டப்பட்ட ஒருத்தர் மூலமா மீடியாவுல போடுங்கனு சொன்னதா சொல்றாங்க. மத்தபடி, டால்மியா நிர்வாகத்து கிட்ட நான் எதையும் கேட்கல. 14 மாசமா கேட்காம இப்போவா கேட்கப்போறேன்? என் மனைவி அரசு ஊழியர். மாசம் ஒரு இலட்சம் சம்பளம் வாங்குறாங்க. ரெண்டு பசங்களும் டாக்டருக்கு படிச்சிருக்காங்க. நான் ஏன் வேலை வாங்கித் தாரேனு மத்தவங்க கிட்ட காசு வாங்கனும்? இது முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி” என்கிறார் அவர்.
பேரூராட்சி தலைவரின் குற்றச்சாட்டு குறித்து, இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ.சௌந்தரபாண்டியனிடம் பேசினோம். “அவருக்கும் எனக்கும் ஒத்துப்போகாது என்பது உண்மைதான், மறுப்பதற்கில்லை. ஆனால், இந்த விசயத்தில் என்னை தொடர்புபடுத்துவது தவறானது. எந்தெந்த மீடியாக்களில் அந்த புட்டேஜ் வெளியாகியிருக்கிறதோ, அவர்களிடமே கேட்டுப்பாருங்களேன்…” என தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கிறார் அவர்.
இன்ஸ்பெக்டரை தொடர்புகொள்ள முயற்சித்தோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. இலால்குடி டி.எஸ்.பி. அஜய் தங்கம் அவர்களை தொடர்பு கொண்டோம். “முதல்வரின் பயண வழி பாதுகாப்பு தொடர்பான பணியில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்.” என்றார்.
டால்மியா ஆலை நிர்வாத்திடம் பேச முயற்சி செய்த அவர்கள் பதில் சொல்லவே நேரத்தை கடத்திக்கொண்டே வந்தனர்… என்ன பிரச்சனை என்று டால்மியா நிர்வாகத்திற்கு நெருக்கமானவர்களிடம் பேசிய போது பெரிய இடத்து விவகாரம் என்பதாலும், சிசிடிவி காட்சிப்பதிவுகள் வெளியாகியிருப்பதாலும், கருத்து சொல்லவே தயங்கினார்கள்.
ஆலை தரப்பில் நாம் விசாரித்த வகையில், ”கம்பெனி தரப்பில் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார்கள். சி.எஸ்.ஆர். காப்பி மட்டும் வாங்கியிருக்கிறார்கள். இன்னும் எஃப்.ஐ.ஆர். போடல. மினிஸ்டருக்காக (அமைச்சர் கே.என்.நேரு) வெயிட் பன்றாங்க…” என்கிறார்கள்.
”மினிஸ்டர, நேத்து நைட் திருச்சியில ஒரு பங்சன்ல பார்த்தேன். இன்னைக்கு காலைல சென்னைல இருந்து பேட்டி கொடுக்கிறாரு. திருச்சிக்கும் சென்னைக்கும் லோக்கல் டவுன்பஸ்ல போயிட்டு வர்ற மாதிரி மனுசன் நிக்க நேரமில்லாம சுத்திகிட்டிருக்காரு. இதுல, இவிங்க பஞ்சாயத்து வேறயா? அதுவும், கலைஞருக்கு நூற்றாண்டு விழா எடுத்திட்டுருக்க நேரம் பார்த்து, ”கல்லக்குடி கொண்ட கருணாநிதினு..” வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊரோட பேர கெடுக்குற மாதிரி இவங்க பன்ற கூத்து சகிக்கலை.” னு ரொம்பவே, சலித்துக்கொண்டார், உடனிருந்த உடன்பிறப்பு ஒருவர்.
– ஆதிரன்.