சாதியற்றவனின் மரணம் – கவிஞா் சுகிா்தராணி.

0

நீங்கள் யாவற்றையும் எழுதுங்கள்

 

ஒரு ரயில் நிலையத்தில்

அமர்ந்துகொண்டு

அதன் நடைபாதையில்

கொட்டிக்கிடக்கும் மஞ்சள் பூக்களை

 

தூரத்தில்

தாய்ப்பால் புகட்டியபடி

வேர்க்கடலையைப் படி நிறைய

அளந்து விற்கும் பெண்ணொருத்தியின்

தாய்மை பூத்திருக்கும் முகத்தை

 

சிதிலமடைந்த கற்கோவிலின்

படியிலமர்ந்து

உங்கள் முகத்தை நீங்களே ஏந்தி

தொல்பொருளாய்க் காத்திருக்கும்

அந்த ஏகாந்தத்தை

 

நீங்கள் யாவற்றையும் எழுதுங்கள்

 

உங்கள் பண்ணை நிலம் ஊடாக

நடக்கும்போது

நடவு நடும் பெண்ணின்

ரவிக்கைக் கிழிசலை மறைக்க

நீங்கள் வீசி எறிந்த

துண்டின் பெருமையை

வீட்டு முற்றத்தில்

காலைநேர தேநீரை

நீங்கள் அருந்தும்போது

தேநீர்க் கோப்பையின் நிழலில்

இளைப்பாறும் சிட்டுக்குருவியை

 

நீங்கள் யாவற்றையும் எழுதுங்கள்

இராக்கால மொட்டைமாடிப் பொழுதுகளில்

எரிந்துவிழும் நட்சத்திரங்களுக்கிடையே

குளிர்ந்து வீசும் தென்றலை

 

உங்களுக்கான மர அலமாரியில்

ஒளித்துவைத்திருக்கும்

உங்கள் காதலியுடையதோ

காதலனுடையதோ

பழந்துணியின் வாசத்தை

 

நீங்கள் யாவற்றையும் எழுதுங்கள்

 

ஆனால் ஒருபொழுதும்

எழுதிவிடாதீர்கள்

 

அரிவாளால் வெட்டுண்டு

ஈ மொய்த்தபடி

வாய்பிளந்து கிடக்கும்

ஒரு சாதியற்றவனின் மரணத்தை

 

—   கவிஞர் சுகிர்தராணி.

Leave A Reply

Your email address will not be published.