தெய்வச் சேக்கிழார் விழா !
திருத்தவத்துறை(இலால்குடி) திருவள்ளுவர் கழகமும் நாடுகாண் குழுவும் இணைந்து நடத்திய தெய்வச் சேக்கிழார் விழா திருத்தவத்துறை திருவள்ளுவர் கழகம் மற்றும் நாடு காண் குழு இணைந்து ஜீன் 10 ஆம் தேதி இலால்குடி சப்தரிஷீஸ்வரர் ஆலயத்தில் தெய்வச் சேக்கிழார் விழாவை நடத்தினார்கள். இவ்விழாவில் தெய்வப் புலவர் அரங்கம், பண்ணாராய்ச்சி வித்தகர் அரங்கம், தமிழிசை அரங்கம், நூல் வெளியீடு மற்றும் விருது, பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
காலையில் நடைபெற்ற தெய்வப்புலவோர் அரங்கத்தில் திருவள்ளுவர் திருவுருவப் படத்தைச் சப்தரிஷீஸ்வரர் திருக்கோயிலின் செயல் அலுவலர் ம.நித்தியா அவர்களின் முன்னிலையில் இலால்குடி நகர் மன்றத் தலைவர் ப.துரைமாணிக்கம் அவர்கள் திறந்து வைத்தார்.அதன்பின் தெய்வப்புலவோர் குறித்த கருத்தரங்கத்தில் கோ.மணி தாமல்.கோ.சரவணன், த.திருமாறன், அனய்கிரீசன் ஆகியோர் உரையாற்றினர் இக்கருத்தரங்கத்தை அப்பரடிப்பொடி ச.திருநாவுக்கரசர் அவர்கள் அமர்வுத் தலைவராக இருந்து வழிநடத்தினார்.
நண்பகல் 12 மணிக்கு சேக்கிழார் பெருமானின் குரு பூஜையை முன்னிட்டு சேக்கிழார் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து அடியார் பெருமக்களுக்கு அன்னம்பாலிப்பு வழங்கப்பட்டது.
மதிய வேளையில் நடைபெற்ற பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் அரங்கத்திற்கு திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வர சுவாமி தேவஸ்தான கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் தலைமையேற்று ப.சுந்தரேசனார் மற்றும் தோகூர் பண்ணை சுப்பிரமணிய செட்டியார் திருவுருவப்படத்தைத் திறந்து வைத்தார்.இவ்வரங்கத்தில் முனைவர் சண்முக. செல்வகணபதி,முனைவர் கிருங்கை சேதுபதி, குளித்தலை இராமலிங்க சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
தமிழிசை அரங்கம் மாலை 5 மணிக்கு நடைபெற்றது.இவ்வரங்கத்திற்கு தமிழ்ச்செம்மல் வி. கோவிந்தசாமி தலைமையேற்று தலைமை உரையாற்றினார்.இதில் முனைவர் களக்காடு இராம.சீதாலட்சுமி குழுவினரின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
இதன்பின் சிவாலயம் வெளியீடாக ஆறுமுக நாவலர் எழுதிய தெய்வச் சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம் மற்றும் சூசனம் என்ற நூலை திருக்கயிலாய பரம்பரை திருவண்ணாமலை ஆதீனம், 46வது குருமகா சந்நிதானம், மக்கள் முனிவர், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வெளியிட நூலின் முதல் பிரதியை திண்டுக்கல் சிவபுரம் ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பெற்றுக்கொண்டார்.
மேலும் சிவாச்சாரியார், ஓதுவார், தமிழ்ச் சமய தொண்டர் ஆகியோரின் வாழ்நாள் பணியைப் பாராட்டி விருது மற்றும் பொற்கிழியை குரு மகா சந்நிதானங்கள் வழங்கிச் சிறப்பித்தனர்.
ஓதுவாருக்கான திருமுறைச் செல்வர் என்ற விருதுகளை ந.சு.மணி அவர்களும், சிவாச்சாரியாருக்கான திருவருட்செல்வர் என்ற விருதினை கே.தேஜோவிடங்க சிவாச்சாரியார் அவர்களும், தமிழ் சமயத் தொண்டர்களுக்கான தெய்வத் தமிழ்ச்செல்வர் என்னும் விருதினை மா.கோடிலிங்கம் அவர்களுக்கும் வழங்கப்பட்டன.
விழாவின் நிறைவாக சேக்கிழார் பெருமானை வெள்ளை யானை வாகனத்தில் எழுந்தருளச் செய்து திருவீதியுலா நடைபெற்றது.