புத்தகங்களை அன்புப்பரிசாக வழங்கி மகிழ்ந்த மணமக்கள் !
தங்களது இல்லத் திருமண நிகழ்வில் பங்கேற்று மணமக்களை மனதார வாழ்த்தி செல்லும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும், நன்றியை தெரிவிக்கும் விதமாக தாம்பூல பைகள் வழங்குவது தமிழகத்தின் மரபாகவே நீடித்து வருகிறது. அவரவர் வசதி, வாய்ப்பை பொறுத்து திருமணத் தாம்பூல பைகளில் பொருட்கள் இடம்பெற்றிருக்கும்.
சடங்குத்தனமாக, ஒரு முறைக்காக தாம்பூல பைகள் கொடுக்க விரும்பாமல், பிறருக்கு அது ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக அமைய வேண்டுமென்ற விருப்பத்தின் வெளிப்பாடாக, அங்குசம் சமூக நல அறக்கட்டளையின் உறுப்பினர் பாண்டியன் – சாந்தி தம்பதியரின் இல்லத்திருமண விழாவில் வழங்கிய அன்பு பரிசு அனைவரின் கவனத்தை பெற்றிருக்கிறது.
பாண்டியன் – சாந்தி தம்பதியரின் மகன் பா.கார்த்திக் கிருஷ்ணா (B.Plan., M.Plan.,) (உதவி இயக்குநர், நகர் ஊரமைப்புத்துறை), – மற்றும் தமிழ்நாடு அரசு மருந்தாளுநர் சங்கத்தின் முன்னாள் மாநில பொருளாளர் எம்.ரவீந்திரசெல்வம் – சசிகலா தம்பதியினர் மகள் ர.திவ்யா (B.sc. N&D) ஆகியோரின் திருமணம் கடந்த பிப்-15 அன்று திருச்சி ரயில்வே சொசைட்டி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இத்திருமண விழாவில், பங்கேற்று வாழ்த்தியவர்களுக்கு தாம்பூல பரிசாக மரக்கன்றுகளையும், பூச்செடிகளையும் கூடவே, மகாத்மா காந்தியின் பொன்மொழிகளை அழகுற வடிவமைத்த கையடக்க புத்தகமாகவும் வழங்கி மகிழ்ந்தார்கள்.
திரும்பிய பக்கமெல்லாம் காண்கிரீட் கட்டிடங்களாக முளைத்து வரும் காலகட்டத்தில், இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ மரம் நடுதலின் அவசியத்தை வலியுறுத்தும்விதமாக மணமகள் வீட்டார் சார்பில் மரக்கன்றுகளை வழங்கினர்.

மேலும், “ஒவ்வொருவரின் வாழ்விலும் திருமணம் ஓர் இனிமையான நிகழ்வு. உறவுகள் நட்புகளின் ஒன்றுகூடலும், மனமுவந்த வாழ்த்துகளும், பேரன்பின் பரிமாற்றங்களும், விருந்தும் உபசரிப்புகளும் மட்டுமே திருமண நிகழ்வை நிறைவாக்கிவிடுவதில்லை. திருமணத் தாம்பூலம் என்ற வழக்கமான சம்பிரதாயத்தை தாண்டி ஒன்றை செய்ய வேண்டுமென்ற விருப்பத்திலிருந்தே இந்த சிறு முயற்சி” என்கிறார், பாண்டியன் பூரிப்பாக.
”காந்தியின் பொன்மொழிகள், சத்தியம், அகிம்சை, எளிமை, மற்றும் மனசாட்சியின் வலிமை ஆகியவற்றை வலியுறுத்துவதால், இன்றைய இயந்திரதனமான வாழ்க்கையில் மனிதநேயத்தையும் ஒழுக்கத்தையும் மீட்டெடுக்க அவசியம் படிக்கப்பட வேண்டிய ஒன்றாகவும் இருக்கிறது. இந்த சிறு புத்தகத்தை தொகுத்து, அழகாக படங்களுடன் அச்சிட்டு அங்குசம் – ஜெ.டி.ஆர் வழங்கியிருக்கிறார்.
இதுபோல, மற்றவர்களுக்கும் பயனுள்ள வகையில், தங்களுக்குப் பிடித்தமான தலைப்பில் ஒரு சிறு நூலை தயாரித்து திருமண தாம்பூல பரிசாக வழங்க முன்வர வேண்டும்.” என்கிறார், பாண்டியன்.
— கலிங்கா இளவழகன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.