அங்குசம் பார்வையில் – ரசிகர்கள் கொடுக்கும் காசுக்கு க்யாரண்டி இந்த ’டிமாண்டி காலனி — 2’. திரை விமர்சனம்
அங்குசம் பார்வையில் ‘டிமாண்டி காலனி—2’ திரைப்படம் திரைவிமர்சனம் – தயாரிப்பு : பி.டி.ஜி.யுனிவர்ஸ், ஞானமுத்து பட்டரை, ஒயிட் நைட் எண்டெர்டெய்ன்மெண்ட்ஸ். பாபி பாலசந்திரன், விஜய் சுப்பிரமணியம், ஆர்.சி.ராஜ்குமார். வெளியீடு : ரெட்ஜெயண்ட் மூவிஸ். டைரக்ஷன் : அஜய் ஞானமுத்து. நடிகர்—நடிகைகள் : அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், சர்ஜனோகாலிட், முத்துக்குமார்,மீனாட்சி கோவிந்தராஜன், டெசெரிங் டோர்ஜி, அர்ச்சனா ரவிச்சந்திரன். தொழில்நுட்பக் கலைஞர்கள்—ஒளிப்பதிவு : ஹரிஷ் கண்ணன், எடிட்டிங் : குமரேஷ், இசை : சாம் சி.எஸ். பி.ஆர்.ஓ. : யுவராஜ்.
டிமாண்டி காலனி முதல் பாகத்தின் க்ளைமாக்சில் நடக்கும் சில சீன்களை, இந்த இரண்டாம் பாகத்தின் ஆரம்பித்தில் சில நிமிட லீட் சீன்களாக வைத்து படத்தை ஆரம்பிக்கிறார் டைரக்டர் அஜய் ஞானமுத்து. முதல் பாகத்தில் பேய் அடித்து இறந்துவிட்டதாக சொல்லப்படும் அருள் நிதியை, இரண்டாம் பாகத்தில் காப்பாற்றிவிடுகிறார் டெபி [ பிரியா பவானி சங்கர் ] காப்பாற்றப்படும் அருள்நிதி ரொம்ப காலமாக கோமாவிலேயே கிடக்கிறார்.
பிரியா பவானி சங்கர், அருள்நிதியை ஏன் காப்பாற்றினார்? என்பதற்கான விடையை ‘டிமாண்டி காலனி—3’-க்கு லீட் கொடுத்து முடித்திருக்கிறார் அஜய் ஞானமுத்து.
இரண்டாயிரம் கோடி ரூபாய் சொத்தில் தனது மூத்த தாரத்தின் மூத்த மகன் சீனிவாசனுக்கு 70 % ஐயும் இளைய மகன் ரகுவுக்கு 25% ஐயும் இளைய தாரத்தின் மகளுக்கு 5% ஐயும் உயில் எழுதி வைத்துவிடுகிறார் மூன்று பிள்ளைகளின் அப்பாவான பிரபல தொழிலதிபர். அவர் இறந்த பின்பு தான் இந்த உயில் விசயம், தனது வக்கீல் சித்தப்பா முத்துக்குமார் மூலம் தெரிய வருகிறது ரகுவுக்கு. இதனால் ஆத்திரமான ரகு, கோமாவிலேயே கிடக்கும் தனது அண்ணன் சீனிவாசனைப் போட்டுத் தள்ளிவிட்டு, முழு சொத்தையும் லபக் பண்ண களம் இறங்குகிறார்.
ஆஸ்பத்திரியில் கிடக்கும் சீனியைப் போட்டுத்தள்ள, வக்கீல் சித்தப்பாவுடன் ரகு வரும் போது, குறுக்கே புகுந்து தடுக்கும் டெபி, “சீனி செத்தான்னா நீயும் செத்துருவே” என்றதும் பகீராகிறார் ரகு. இந்த ‘டெத் கனெக்ஷன்’ எப்படி? ஏன்? யாரால்? என்பது தான் இந்த டிமாண்டி காலனி-2’.
அண்ணன் –தம்பியாக இரட்டை வேடத்தில் அருள்நிதி. இதில் தம்பியான அருள்நிதிக்குத் தான் நல்ல ஸ்கோப். மொட்டை மாடியில் சரக்கடித்துவிட்டு, “யோவ் சித்தப்பா எப்படியாவது அவனை போட்டுத்தள்ளிட்டு, சொத்து நம்ம கைக்கு வரணும்யா” என அலம்பல் பண்ணுவதிலும் பிரியா சொன்ன ஃப்ளாஷ்பேக்கைக் கேட்டு பயந்து நடுங்குவதிலும் நன்றாகவே ஸ்கோர் பண்ணிருக்கார் அருள்நிதி.
ஆனால் அருள்நிதியைவிட பிரியா பவானி சங்கருக்குத் தான் அதிக ஸ்பேஸ் இருக்கிறது. தனது காதலன் ரிச்சர்ட் சாம் [ சர்ஜனோ காலிட் ] தூக்குப் போட்டுச் செத்த பிறகு பிரியாவுக்குள் ஏற்படும் பயபீதி, சாமின் அப்பா அருண்பாண்டியனுடன், சாமியார் தாவோஷி [ டெசரிங் டோர்ஜி. அதாங்க புத்த மத சாமியார் ] பார்க்கப் போகும் இடம், அருள்நிதியைக் காப்பாற்றத் துடிக்கும் சீன்களில் எல்லாம் ஜாமய்த்திருக்கிறார் பிரியா பவானி சங்கர்.
முதல் பாகத்தைவிட இந்த இரண்டாம் பாகத்தில் தொழில்நுட்ப ரீதியாக ரொம்பவே மிரட்டியிருக்கிறார் அஜய் ஞானமுத்து. சைனீஸ் ரெஸ்டாரெண்ட் திறப்பு விழாவன்று, மேற்கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும் கரண்டிகள், க்ளைமாசில் லட்சக்கணக்கான வெளவால்கள் என விஎஃப் எக்ஸ், சி.ஜி. தொழில்நுட்பத்தை கச்சிதமாக கையாண்டு பார்வையாளனை மிரள வைத்திருக்கிறார் ஞானமுத்து. என்ன ஒண்ணு இந்த பாகத்தில் காமெடி சுத்தமாக மிஸ்ஸிங் ஆகியிருப்பது பெருங்குறை.
படத்துல பெரிய கடுப்பும் கோபமும்ன்னா அது சாம் சி.எஸ்.சின் பின்னணி இசை தான். காது ஜவ்வு கிழிந்து ரத்தம் வரும் அளவுக்கு, ஹார்ட் அட்டாக் வரும் அளவுக்கு இன்ஸ்ட்ரூமெண்ட் மேல ஏறி உட்கார்ந்து பின்னணி இசையமைச்சிருப்பாரு போல. ஏம்பா தம்பி… திகில் படம், பேய்ப்படங்களுக்கு இசைஞானி போட்ட பின்னணி இசையெல்லாம் கேட்டதில்லையாப்பா நீ..? இதுவரை கேட்கலைன்னா.. இனிமேலாவது கேளுப்பா. கேட்டுத் திருந்துப்பா. எங்க காதுகளையும் இதயத்தையும் காப்பாத்துப்பா.
ரசிகர்கள் கொடுக்கும் காசுக்கு க்யாரண்டி இந்த ’டிமாண்டி காலனி—2’.
–மதுரை மாறன்