T.M.கிருஷ்ணா மீது வன்மம் கக்கும் பக்திமான்கள் !

இந்த கச்சேரியில் பக்திக்கு பதிலாக  மனதில் வெறுப்பும் வன்மமும் இருப்பதால் பாட்டுக்கு பதிலாக வாந்தி தான் வண்டி வண்டியாக கொட்டுகிறது ...

0

T.M.கிருஷ்ணா மீது வன்மம் கக்கும் பக்திமான்கள் !
– பத்திரிகையாளர் பி.ஆர். அரவிந்தாக்ஷன்.

2014 ம் ஆண்டு டெல்லி தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் அப்போது மத்திய அமைச்சராக இருந்த சாத்வி நிரஞ்சன் ஜோதி சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்தார்.

டெல்லியில் ராமரை பின்பற்றுபவர்கள் ஆட்சி வேண்டுமா ? முறைகேடானவர்களின் ஆட்சி வேண்டுமா ? டெல்லி மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று கூறினார்.

வெளிப்படையாக கூறினால் ராமரை வழிபடாதவர்கள் அனைவரும் தவறான வழியில் பிறந்தவர்கள் என்ற அர்த்தத்திலேயே ஆவேசமாக பேசினார். நாடு முழுவதும் சாத்வி நிரஞ்சன் ஜோதியின் பேச்சு பெரும் விவாதப்பொருளானது. மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியது.

- Advertisement -

- Advertisement -

02-12-2024 அன்று நாடாளுமன்றத்தில் வெறுப்பு பேச்சுக்காக அவர் வருத்தமும் மன்னிப்பும் கோரினார். இதை எதற்கு சொல்கிறேன் என்றால்.. இப்படியான போக்குகடந்த 10 ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது.

ஆனால், நான் கற்பனையில் கூட நினைக்கவில்லை.

தமிழ்நாட்டில் கர்நாடக இசைக்கலைஞர்கள் வெறுப்பும் குரோதமும் நிறைந்த மனிதர்களாக மாறி சக கலைஞன் மீது பாய்ந்து பிராண்டுவார்கள் என்று.

The Music Academy-ன் ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு T.M.கிருஷ்ணா தேர்வாகியிருப்பதற்கு  ரஞ்சனி காயத்ரி சகோதரிகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்த விவகாரம் பூதாகரமாக மாறியிருக்கிறது.

The Music Academy வழங்கும் விருது இவ்வளவு பெரிய பிரச்சனையாக மாறுவது இதுவே முதல் முறை. முன்னெப்போதும் இப்படி நடந்ததில்லை.

தந்தை பெரியாரை T.M.கிருஷ்ணா புகழ்ந்து பாடுகிறார்.. பிரிவினை வாத சித்தாந்தத்தை புகுத்துகிறார். பக்தியற்றவர், நாத்திகவாதி, கர்நாடக இசை உலகின் புனிதத்தை கெடுக்கிறார் என்றெல்லாம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை வீசுகின்றனர்.

இதில் ஏதாவது உண்மை இருக்கிறதா ?

ஒரு வாதத்திற்கு உண்மை இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். ஒரு மனிதன் பக்தி உள்ளவன் / இல்லாதவன் என்று சான்றிதழ் கொடுக்கும் அதிகாரம் யாருக்காவது வழங்கப்பட்டுள்ளதா ?

ஆன்மீகத்தை இழிவுபடுத்துகிறார், பிரிவினைவாதத்தை புகுத்துகிறார் என்ற குற்றச்சாட்டுக்கள் எங்காவது பதிவாகியுள்ளதா ? எந்த நீதிமன்றமாவது அதை உறுதிப்படுத்தியுள்ளதா ?

கர்நாடக சங்கீத இசை உலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இருக்கும் கிருஷ்ணாவை சங்கீதத்தை  அவமதிக்கிறார்,இழிவு படுத்துகிறார் என்று குற்றம் சுமத்துகிறார்கள்.

என்ன இழிவு படுத்திவிட்டார், எப்போது இழிவு படுத்தினார்,, எந்த நீதிமன்றத்தில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது என்ன ஜனநாயக நாடா இல்லை சர்வாதிகார நாடா ?

ஒரு சில மனிதர்களுக்கு தனிப்பட்ட வகையில் தோன்றும் எண்ணங்கள் தான் ஒட்டுமொத்த மக்களின் மனசாட்சியா என்ன ? இலக்கியம் மற்றும் கலை உலகம் போல பொறாமை/வன்மம்  பீடித்த ஒன்று இந்த பிரபஞ்சத்தில் வேறு ஏதேனும் இருக்கிறதா என்ன ?

ரஞ்சனி – காயத்ரி சகோதரிகள்

எனக்கு ஆச்சர்யம் என்னவென்றால், டி.எம். கிருஷ்ணாவுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கும் கர்னாடக சங்கீதக் கலைஞர்கள் ரஞ்சனி, காயத்ரி, திருச்சூர் சகோதரர்கள் அனைவருக்கும் என் பாராட்டுகளும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார் எழுத்தாளர் சாருநிவேதிதா ரஞ்சனி, காயத்ரி இருவரும் பெரியார் பற்றிக் கூறிய விஷயங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. அதை முதலில் தெளிவுபடுத்தி விடுகிறேன் என்று எளிதாக கடந்து சென்றுவிட்டார்.

உண்மையில் பிரச்சனையே அது தானே.. எந்த இடத்தில் எப்போது பிராமணப்பெண்களை இனப்படுகொலை செய்ய பெரியார் வலியுறுத்தினார் ? உண்மைக்கு மாறான விஷயங்களை மனதில் வைத்து சக கலைஞன் மீது விஷத்தை கக்கி இருக்கும் ரஞ்சனி, காயத்ரி ஆகியோருக்கு பாராட்டுக்களும்,வணக்கங்களும். பேஷ் பேஷ் ரொம்ப பிரமாதம் ரஞ்சனி, காயத்ரி,துஷ்யந்த் ஸ்ரீதர் இருவரும் பிஜேபி ஆதரவாளர்கள்..

அதிலும், தமிழ்நாட்டை மையப்படுத்தி நடக்கும் உப்பு சப்பில்லாத  அரசியல் ரீதியான விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்துபவர் துஷ்யந்த் ஸ்ரீதர்.

பாடல் கற்க வந்த மாணவர்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றார் என்ற குற்றசாட்டு சித்ரவீணை ரவி கிரண் மீது உள்ளது. அவரும் பிஜேபி ஆதரவாளர்.

ரஞ்சனி, காயத்ரிக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ள துக்ளக் குருமூர்த்தி இந்தியாவில் 30% பெண்கள் தான் பெண்மை தன்மை கொண்டவர்கள் என்று அவதூறு பரப்பி கேவலப்படுத்தியவர்.குருமூர்த்தி பிஜேபி ஆதரவாளர் மட்டுமல்ல.

இந்த நாட்டிற்கே ராஜகுரு என்ற மயக்க நிலையில் வாழ்ந்து வருபவர். இவர்கள் எல்லோரும் தான் கூட்டு சேர்ந்துகொண்டு T.M.கிருஷ்ணா மீது கொரில்லா தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணாவை எதிர்ப்பவர்கள் பிராமணர்கள் என்பதால் எதிர்ப்பு வெறும் மென்மையான சொற்களால் மட்டுமே நடக்கிறது என்கிறார் சாருநிவேதிதா. அதாவது கொடூர கொலைகாரர்களைப்போல கன்னாபின்னா என்று வெட்டவில்லை.

கருணை தன்மை  கொண்ட ஆபோகி ராகத்தில் ஆலாபனை செய்துகொண்டே மென்மையாக கழுத்தை அறுத்து கொலை  செய்கிறார்கள். அதனால் மிகவும் நல்லவர்கள் என்று கூறுவது போல இருக்கிறது.

கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது உடனடியாக புகார் கொடுக்க சட்டத்தில் இடமிருக்கிறது. ஆனால், பெரியாரை ஆதரிக்கிறார் என்ற ஒரே காரணத்தால் உண்மைக்கு மாறான அவதூறுகளை பரப்பி,நிம்மதியை சிதைக்கும் “ஸோம்பிகள்” மீது எங்கே சென்றய்யா புகார் கொடுப்பது ?

சாரு நிவேதிதா.

சங்கீதத்தைத் தவிர கிருஷ்ணா செய்யும் காரியங்கள் யாவையும் gimmicks வகையைச் சேர்ந்தவை.  அவர் எழுதும் ஆங்கிலக் கட்டுரைகள் அரைவேக்காட்டுத்தனமும் விடலைத்தனமும் ஆனவை என்கிறார் சாரு.. அது தானே இப்போது பிரச்னைக்கே முக்கிய காரணம்.

பெரியாரை ஆதரிப்பது, பிஜேபி அரசின் சில நிர்வாக ரீதியான செயல்பாடுகளை விமர்சித்து கட்டுரை எழுதியது தானே பிரச்னையின் மையச்சக்கரம்.

அதன் காரணமாகத்தான், சங்கீத கலாநிதி விருது விவகாரத்தை மோடியின் பக்தைகளான, ரஞ்சனி காயத்ரி சகோதரிகள் அரசியல் பிரச்சனையாக, மாற்றியுள்ளனர்.

பிஜேபி ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும், மோடிஆதரவாளர்கள் என்று வெளிப்படுத்திக்கொண்ட அத்தனைப்பேரும் ஒரு குழுவாக இணைந்து கிருஷ்ணா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

4 bismi svs

மற்றொரு புறம், கிருஷ்ணா மீதான தாக்குதலை இடதுசாரிகளும்,திராவிட கட்சிகளும் கண்டித்து வருகின்றன. மந்தையில் இருந்து ஒரு ஆடு மட்டும் எப்படி வெளியில் போகலாம் என்பது தானே எதிர்ப்புக்கு / புறக்கணிப்புக்கு காரணம்.

இந்த அரசியலை பேசாமல் எப்படி கடந்து போகமுடியும்?

மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில் உத்திரபிரதேச மாநிலம் தாத்ரியில் அடித்தே கொலை செய்யப்பட்ட முகமத் அஹ்லாக்கிற்கு நடந்த அநியாயத்துக்கும்  T.M.கிருஷ்ணாவிற்கு நடப்பதற்கும் ஏதாவது வித்யாசம் இருக்கிறதா ?

இன்னொன்று, சேரிக்குப் போய் அங்கே உள்ள சிறார்களுக்குக் கர்னாடக சங்கீதம் கற்றுத்தரும் காரியத்தை விடலைதனத்தையும் மீறிய உயர்சாதித் திமிர் என்றே சொல்லுவேன் என்கிறார் சாருநிவேதிதா.

என்ன தப்பு அது ? என்னுடைய 15 வது வயதில் கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்வதற்காக வீதி வீதியாக அலைந்திருக்கிறேன். சேலத்தில் நாங்கள் குடியிருந்த அம்பேத்கார் நகரில் இருந்து பெரும்பாலான நாட்களில் 15 கிலோ மீட்டர் தூரம் நடந்தே இசை வகுப்பிற்கு சென்றிருக்கிறேன்.

நான் எங்கிருந்து வருகிறேன் என்று அறிந்த பிறகு இசையை பயிற்றுவித்த ஆசிரியர்கள் கிருபாபரணன்,சங்கர்ராமன் போன்றோர் எந்தவித தட்சணையும் வாங்காமல் கற்றுக்கொடுத்தனர். T.M.கிருஷ்ணா போல  நேரமும், விருப்பமும் இருப்பவர்கள் மக்களைத்தேடிச்செல்கிறார்கள்.

கால்கள் இருக்கும் எல்லோராலும் ஓட முடியும்.. ஆனால் எப்படி ஓடினால் ஜெயிக்க முடியும் என்று கற்றுக்கொடுப்பதற்கு தானே குரு தேவைப்படுகிறார். அதற்கு பெயர் தானே “வித்தை”.

டி.எம்.கிருஷ்ணா.

தனக்கு தெரிந்த வித்தையை ஒரு மனிதன்,சமூகத்தில் பின்தங்கிய நிலையிலிருக்கும் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க நேரடியாக சென்றால் என்ன தவறு ? அடுத்த தலைமுறைக்கு ஞானத்தை கடத்துவதை விட மனித வாழ்வின் உயரிய நோக்கம் வேறு ஏதாவது இருக்கிறதா என்ன ?

சாருவின் இன்னொரு குற்றசாட்டு //இன்னொரு முக்கியமான விஷயம். கிருஷ்ணா சேரிகளுக்குப் போய் கர்னாடக இசை கற்றுக் கொடுப்பதில் ஒரு சாதியத் திமிர் இருக்கிறது. பொருளாதார ரீதியாகத்தான் சேரிவாழ் மக்கள் கீழ் நிலையில் இருக்கிறார்களே தவிர கலாச்சார ரீதியாக அல்ல. உயர்குடியிடம் என்னென்ன கலாச்சார விழுமியங்கள் இருக்கின்றனவோ அவை அனைத்தும் சேரியிலும் இருக்கின்றன. ஆனால் கிருஷ்ணா அவர்களைத் தன்னை விடத் தாழ்ந்தவர்களாக நினைக்கிறார். அதனால்தான் தன்னை கலாச்சார ரீதியாக உயர்ந்த இடத்தில் வைத்துக்கொண்டு சேரி மக்களிடம் கர்னாடக சங்கீதத்தை எடுத்துக்கொண்டு போகிறார். இது ஒரு கலாச்சார வன்முறை// இந்த கலாச்சார வன்முறை இன்னும் அதிகமாக நடத்தப்படவேண்டும் என்று விரும்புகிறேன்.

எங்கள் ஊரில் அமலராஜ் என்றொரு மேடைப்பாடகர் இருந்தார். ஆர்கெஸ்டரா துறையில் மிகவும் பிரபலமானவர்.பிரமாதமாக பாடுவார். T.M.கிருஷ்ணா போன்ற யாராவது ஒருவர்,எங்கள் பகுதிக்கு வந்து அவருக்கு கர்நாடக இசையை கற்றுகொடுத்திருந்தால் அகில இந்திய அளவில் புகழ்பெற்ற பாடகராக அவர் மாறியிருப்பார். சேரியில் வாழக்கூடியவர்கள் கடைசி வரை கானா பாடல் பாடக்கூடியவர்களாகவே இருக்க வேண்டுமா என்ன ?

அவர்கள் கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ளவே கூடாதா ? யாராவது ஒரு மனிதன் தேடிச்சென்று சொல்லிக்கொடுத்தால், அவனை இப்படி தான் குண்டாந்தடி எடுத்து அடிப்பீர்களா ?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள ஆதனூர் கிராமம் நந்தனார் பிறந்த கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 04-10-2023 அன்று நந்தனாரின் குருபூஜை விழா நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டின் ஆளுநர் R.N.ரவி கலந்துகொண்டார்.

ஆளுநர் ரவி முன்னிலையில் பட்டியலினத்தைச் சேர்ந்த 100 பேருக்கு பூணூல் அணிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி,  மேளதாளங்கள், மந்திரங்கள் முழங்க 100 பட்டியலினத்தோருக்கு பூணூலும் அணிவிக்கப்பட்டது. அப்படியென்றால், பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்களா ? பூணூல் அணிவிக்கப்பட்ட பிறகு ஆதிதிராவிடர்கள் பிராமணர்களாகி விடுவார்களா ? இதுவல்லவா சேரி மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை..

அரசியலமைப்பு சட்டப்படி மாநிலத்தின் உயரிய பொறுப்பில் இருக்கும் ஆளுநர் ஜாதி ரீதியாக/கலாச்சார ரீதியாக  தன்னை உயர்ந்தவர் என்று கருதியதால் தான் சேரி மக்களுக்கு பூணூல் அணிவித்தார் என்று எழுத்தாளர் சாருநிவேதிதா கூறுவாரா ? மாட்டார் ஆனால்,T.M.கிருஷ்ணா போன்ற ஒரு ஏமாளி கிடைத்தால் சாணியடி அடிப்பார்.

/முதலில் உங்களுடைய சாதிய ஐவரி டவரிலிருந்து கீழே இறங்கி வாருங்கள், கிருஷ்ணா. தலித்துகளுக்குப் பூணூல் மாட்டி விடுவதல்ல, உங்களுடைய சாதித் திமிரை முதலில் கழற்றி வைப்பதுதான் நீங்கள் நம்பும் முற்போக்கு வாழ்க்கையின் முதல் படி// என்று உபதேசமும் வழங்குவார்.

கர்னாடக இசை கற்றுக் கொடுப்பதில் ஒரு சாதியத் திமிர் இருக்கிறது என்கிறார் சாரு..

சேரிக்கு சென்று இசையைக் கற்றுக் கொடுப்பது சாதித்திமிர் என்றால்,, சேரிக்கு சென்று சொல்லித்தரக்கூடாது என்று சொல்வதற்கு என்ன பெயர் ? பக்தி மையத்துடன் மட்டுமே தான் கர்நாடக இசை வடிவத்தை பயன்படுத்த வேண்டும் என்று விதிகள் வகுக்கப்பட்டுள்ளதா என்ன ?

யார் எழுதினார்கள் என்றே தெரியாத ஆகம விதிகளை காரணம் காட்டி பிராமணர்களைத் தவிர வேறு யாரும் கருவறைக்குள் நுழைக்கூடாது என்று சொல்லும் அராஜகத்திற்கும் இணையானது அல்லவா இது.

சேரியில் வாழக்கூடிய மக்களை சந்தித்த காரணத்தால்,அவர்களின் வாழ்நிலையை  தெரிந்துகொண்ட காரணத்தால் அவரது மனோநிலை மாறி முற்போக்கு அரசியல் நிலைப்பாட்டுடன் எளியோரைப்பற்றி பேசி வரலாம்,செயல்பட்டு வரலாம். இது நல்ல விஷயம் தானே?

இப்படி இன்னும் பல நூறு கிருஷ்ணாக்கள் வீதிக்கு வந்து. சாதித்திமிரை உடைக்க வேண்டும் அல்லவா?

ஏனென்றால்,  அதெப்படி எங்களுடைய சாதியத் திமிரை நோக்கி கேள்வி எழுப்பிய பெரியாரை ஆதரிக்கலாம். உனக்கு சங்கீத கலாநிதி விருதா!

நீ எப்படி விருது வாங்குகிறாய் என்று பார்க்கிறோம்  என்ற எண்ணத்தில் தானே கிருஷ்ணா தேர்வானதை வெறிபிடித்தது போல எதிர்க்கிறார்கள். அந்த வன்முறை கும்பலுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ன !

ஒருவேளை சங்கீத கலாநிதி விருது மத்திய அரசின் விருதாக இருந்திருந்தால் இந்நேரம் அரசு திரும்பப்பெறுவதாகவே அறிவித்திருக்கும். மென்மையான குரலில் எதிர்ப்பை பதிவு செய்து வரும் பிராமணர்களின் லாபி அவ்வளவு பெரியது.

ராமரை வழிபடாதவர்கள் தவறான வழியில் பிறந்தவர்கள் என்று  முன்னாள் மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி கூறியதற்கும், பெரியாரை புகழ்கிறார்,அதன் மூலம் கர்நாடக இசையின் புனிதத்தை கெடுக்கிறார் என்று கூறுவதற்கும் ஏதேனும் வித்யாசம் இருக்கிறதா ?

ஆனால் பாருங்கள், இப்படி வெளிப்படையாக வெறுப்பை கக்குபர்கள் தான்  தேசபக்தர்களாகவும்,ஆன்மீக காவலர்களாகவும் உள்ளனர். அதைவிட முக்கியம் அனைவரும் பிஜேபி ஆதரவாளர்கள்.

இந்த வலது சாரி கும்பல் கிருஷ்ணா மீது நிகழ்த்தி வரும் வன்முறை “அரசியல்” உள்நோக்கம் கொண்டது என்பதை அறியாமல் கூட்டு மனோபாவத்தில் சாருநிவேதிதா போன்ற எழுத்தாளர்களும் போற போக்கில் நங்கு நங்குன்னு ரெண்டு குத்து குத்துவது நியாயமா !

அப்புறம், பக்திக்கும், புனிதத்துக்கும் அளவீடு இருக்கிறதா என்ன ? யார் அந்த அளவீட்டு கருவியை தயாரித்தது. சரி கிருஷ்ணா பக்தியற்றவர் என்றே வைத்துக்கொள்வோம்.

இத்தனை களேபரத்துக்கு மத்தியில் மிகவும் அமைதியாக இருக்கிறார். ஆனால்  பக்தியே வடிவானார்கள் என்ன செய்கிறார்கள்! நாடி நரம்பு,சதை ரத்தம் என அனைத்திலும் பக்தியை மட்டுமே கொண்டிருக்கும் இசைக்கலைஞர்கள்,ஹரி கதா,ராம கதா சொல்வோர் வலதுசாரி கும்பலுடன் கூட்டு சேர்ந்துகொண்டு T.M.கிருஷ்ணா பக்தியற்றவர்,புனிதத்தை கெடுக்கிறார் என்று ஒரே குரலில் ஒப்பாரிக்கீர்த்தனையை பஜாரி ராகத்தில் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படியொரு கச்சேரி நடப்பது கர்நாடக இசை உலகிற்கு மிகவும் புதியது. ஆனால், பாருங்கள் இந்த கச்சேரியில் பக்திக்கு பதிலாக  மனதில் வெறுப்பும் வன்மமும் இருப்பதால் பாட்டுக்கு பதிலாக வாந்தி தான் வண்டி வண்டியாக கொட்டுகிறது.. நாற்றம் போக தான் சில தினங்கள் ஆகும். ஆனால், வாந்தி நிச்சயம் வியாதியல்ல.

முகநூலில் : பத்திரிகையாளர் பி.ஆர். அரவிந்தாக்ஷன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.