கே.பி.அன்பழகன் ‘பலே’ பார்முலா – தள்ளாடும் திமுக.. தருமபுரி அரசியல் : …..வீடியோ !
தருமபுரி அரசியல் : கே.பி.அன்பழகன் ‘பலே’ பார்முலா…
“தருமபுரி – பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால்தான் திமுக வெற்றி பெற முடியும். இல்லை என்றால், அன்பழகனை அசைத்துக் கூட பார்க்க முடியாது. 6-வது முறையாகவும் அவர்தான் எம்.எல்.ஏ.” என்ற குறிப்புகளோடு, இன்னும் சில நுணுக்கமான அரசியல் காரணங்களை சுமந்து கொண்டு, விடை காணுவதற்காக திமுக தலைவர் மேசையில் காத்துக்கிடக்கிறது, அந்தக் கோப்பு!
வீடியோ லிங்
https://youtu.be/UYWgyKKFuS0
அப்படி என்னதான், இருக்கிறது அந்த கோப்பில்? தருமபுரிக்கும் திமுகவுக்கும் ஏழாம் பொருத்தம்தான் போல. கடந்த தேர்தலில், தருமபுரி மாவட்டத்தில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளையும் இழந்து வாஷ்-அவுட் ஆனது திமுக. பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில், தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக அதிமுகவிடம் தோற்றுப்போனது. அதிமுகவின் கோட்டையாக இருக்கும், தருமபுரி உள்ளிட்ட கொங்குமண்டலத்தை அசைத்துப் பார்க்க வேண்டுமென்றுதான், செந்தில்பாலாஜி, பழனியப்பன் போன்றோர்களை வைத்து ஸ்ட்ராங் அரசியல் செய்ய நினைத்தது திமுக தலைமை.
இழந்த கட்சியின் செல்வாக்கை தூக்கி நிறுத்த, தருமபுரி மாவட்டத்தை கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரித்து பார்த்தது. அதிமுகவிலிருந்து அமமுகவுக்கு சென்று, இறுதியாக கழகத்தில் ஐக்கியமான முன்னாள் அமைச்சர் பழனியப்பனை மேற்கு மாவட்டத்தில் களத்தில் இறக்கியது. இறுதி யாக, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக்கியது. திமுக கட்சி அலுவலகத்தை காரிமங்கலத்தில் திறந்து வைத்து அரசியல் பண்ணியாச்சு. ஆனாலும், ’செல்ப்’ எடுக்காமல் தட்டுத் தடுமாறிக் கொண்டு தானிருக்கிறது.
வீடியோ லிங்
கடந்த ஒரு வருடமாக. தொடர்ந்து ஐந்தாவது முறையாகவும் வெற்றிபெற்று அசுர பலத்தோடு இருப்பவர் கே.பி.அன்பழகன். அதிமுகவின் மாவட்ட செயலாளரும் அவரே. முந்தைய அதிமுக அரசில் உயர்கல்வித்துறை அமைச்சராக உச்சத்தில் இருந்தவர். மாவட்டத்தின் அனைத்து சந்து பொந்துகளையும், கடைமட்ட வார்டு உறுப்பினரின் ஜாதகத்தையும் தெரிந்து வைத்திருக்கும் தேர்ந்த அரசியல்வாதி கே.பி.அன்பழகன். இவரை எதிர்த்து அரசியல் பண்ணத் தெரிந்த தொழில்முறை அரசியல்வாதியை கழகம் முன்னிறுத்தாததுதான் பிரச்சினை என்கிறார்கள்.
பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் மொத்தமுள்ள 264 பூத்களில், விரல் விட்டு எண்ணும் 10 பூத்களை தவிர, எஞ்சிய 254 பூத்களிலும் அதிமுகதான் லீடிங் பார்ட்டி. கழகத்திற்கு ஆறுதல் தருவது பாலக்கோடு டவுன் மட்டுமே. தொகுதியிலுள்ள 54 பஞ்சாயத்துக்களில் 30 பஞ்சாயத்துகளில் பெரும்பான்மையாக வன்னியர்களும்; 24 பஞ்சாயத்துக்களில் பெரும்பான்மை யாக வெள்ளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.
தொகுதிவாரியாக 44% வன்னியர்களும்; 34% வெள்ளாளக் கவுண்டர் சமூகத்தினரும் மீதி இதர சமுதாயத்தினரும் இருக்கிறார்கள். இந்த புள்ளிவிவரங்களை புரிந்துகொண்டு அதற்கேற்ப கச்சிதமாக காய் நகர்த்தி வருகிறார், கே.பி.அன்பழகன் என்கிறார்கள். பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி யிலுள்ள கழக உடன் பிறப்புக்களில் 90% பேர் கே.பி.அன்பழகனின் ஆதர வாளர்கள்தான் என்கிறார்கள்.
திமுகவின் 17 பொறுப்பாளர்களும்; ஒன்றிய செயலாளர்கள் எம்.வி.டி. கோபால், முனியப்பன், அன்பழகன்; நகர செயலர் சீனிவாசன், மாநில விவசாய அணி துணை செயலர் சூடப்பட்டி சுப்பிரமணி; சேர்மன் மனோகரன், மாவட்ட துணை செயலர் ஆ.மணி; கே.பி.அன்பழகனை எதிர்த்து போட்டியிட்ட வக்கீல் முருகன் உள்ளிட்டு பலரும் கே.பி.அன்பழகனின் ஆதரவாளர்கள்தான் என அடித்துக்கூறுகிறார்கள் லோக்கல் உடன் பிறப்புக்கள்.
வீடியோ லிங்
இவங்க வீட்டு விசேசங்களில், கே.பி.அன்பழக ன் தவறாமல் கலந்துகொள்வார்; இவர்களோடு கை குலுக்குவார்; பந்தியில் கை நனைத்துவிட்டுப் போவார். அவர்களும் மாலை மரியாதையோடு உபசரித்து அனுப்பி வைப்பார்கள். கேட்டால், அரசியல் நாகரிகம் என வியாக்யானம் கொடுப்பார்கள். அதே, அதிமுககாரன் வீட்டு விஷேசங்களுக்கு மண்டப வாசலைக்கூட, திமுககாரன் எட்டி பார்த்துவிட முடியாது. ”அதிமுக ஆட்சியில, திமுககாரன் துணிஞ்சி டெண்டரே எடுக்க முடியாது. மீறி எடுத்தாலும் முழுசா வேலையை முடிக்க முடியாது. பில்லை நிறுத்தி வச்சிருவாங்க. இப்போ, பத்து வேலையில ரெண்டு வேலை அதிமுகவுக்கு கொடுத்துடுறாங்க. டெண்டர எடுத்த திமுககாரனும், எடுத்த டெண்டர கே.பி.அன்பழகன் கிட்ட சரண்டர் பண்ணிட்டு கமிஷன வாங்கிட்டு அடுத்த சோலியப் பார்க்க போயிடுறாங்க. மாவட்டம் முழுக்க, டெண்டர் எடுத்து பண்ற வேலையெல்லாம் கே.பி.அன்பழகனோட மருமகன் ரவிதான் பார்த்துக்கிறாரு” என்கிறார்கள்.
”அட அவ்வளவு ஏன்? காரிமங்கலத்துல கட்சிக்கு ஆபீஸ் தொறந்திருக்காங்க. கட்டுமான வேலைக்கு, கல்லு மணலு கொட்டுனதுல இருந்து, கொடி கம்பத்துக்கு பெயிண்ட் அடிச்சி கொடுத்தது வரைக்கும் எல்லாமே கே.பி.அன்பழகன் ஆளுங்க… ஒரு கட்டத்துல, மா.செ. பழனியப்பனே பொறுக்க மாட்டாம, காரியமங்கலம் ஒன்றியம் அன்பழகனை கூப்பிட்டு கொஞ்சம் சூதனமா பன்னுங்கய்யா எவனாவது எசகுபிசகா எழுதிவிடப்போறான்னு சொல்ற அளவுக்குத்தான் பப்ளிக்கா நடந்துச்சு என்கிறார்கள்.
இவ்வாறு, கழகத்தின் முக்கியமான நிர்வாகிகளே, கே.பி.அன்பழகனிடம் ஐக்கிய மாகி கிடக்கையில், தனியொரு பழனியப்பனால் என்ன செய்துவிட முடியும்? கழகத்தின் செல்வாக்கை எப்படி உயர்த்த முடியும்? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
”இது மட்டுமா? திமுக கழக நிர்வாகிகளிடம் உனக்கு என்ன வேணும்? ஆர்ப்பாட்டம் நடத்துறியா? போராட்டம் பன்றியா? கூட்டம் போடுறியா? எல்லாமே நான் செஞ்சித்தாரேன்… நீ அரசியல் பண்ணிக்கோ… இதுதான் கே.பி.அன்பழகன் பார்முலா தருமபுரி அரசியல்” என்கிறார்கள். அதிமுக-வில் எம்.எல்.ஏ. சீட்டு எனக்கு கன்பார்ம் . ஜெயிக்க வச்சா, மந்திரி ஆகிடுவேன். அப்புறம் உங்களை கவனிச்சிக்கிறேன். உள்ளாட்சிய உங்களுக்கு விட்டுத்தாரேன்னு ஓப்பனா டீலிங் பேசிடுவாராம் கே.பி. அன்பழகன்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, திமுக ஒன்றிய செயலாளர்களுக்கு அவரது சொந்த செலவில் இனாவோ கார் வாங்கி கொடுத்தவர்தான் இந்த கே.பி.அன்பழகன். அதோட விளைவுதான் தருமபுரி மாவட்டத்தில் ஐந்து சட்டமன்றத் தொகுதியிலும் திமுக வாஷ்-அவுட் ஆனது. மாரண்டஹள்ளி நகர செயலர் வெங்கடேசன், பாலக்கோடு நகர செயலர் முரளி போன்ற விரல்விட்டு எண்ணும் சிலர்தான், கே.பி.அன்பழகனை எதிர்த்து துணிச்சலான அரசியல் செய்கின்றனர். இவர்களை போன்ற ஆட்களை அடையாளம் கண்டு, அவர்களை மாவட்டப் பொறுப்புக்கு உயர்த்துவதற்குப் பதிலாக, மண்டையில தட்டி, உட்கார வைச்சிடுறாங்க. ரொம்ப வருஷமா கட்சியில இருந்தும், நகர செயலாளர் பதவியைத் தாண்டி இவர்களால் நகர முடியாத அளவுக்குத்தான் இருக்குது பாலக்கோடு திமுக-வின் லோக்கல் பாலிடிக்ஸ். என்கிறார்கள்.
”சமீபத்தில்கூட, இளைஞர் அணிக்கு எம்.ஜி.வெங்கடேசன், சிவகுரு நியமிக்கப் பட்டதுக்குத்தான் எம்.பி. செந்தில்குமார் விசனப்பட்டாரு. மாவட்ட விளையாட்டுத்துறை அமைப்பாளர்னு 51 வயது ஆனந்தனை போட்டிருக்கிறார்கள். அவரு மேல 5 கேசுக்கு மேல பெண்டிங் இருக்கு. ரவுடி பட்டியல்ல அவரு பெயரும் இருக்கு. ஆனந்தன் மாதிரி ஆளுதான், கே.பி.அன்பழகனை எதிர்த்து அரசியல் பன்ன போறாங்களா?”னு தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக புலம்பித் தீர்க்கிறார்கள். ”கே.பி.அன்பழகனோட சொந்த ஊரான, கொரகோடஹள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொன்னேரியில புதுசா நியாய விலைக்கடையை தொறந்தாங்க. விழா நடத்துறது, கொடி கட்டுறது, பேனர் வைக்கிறது தொடர்பா சின்ன சின்ன பிரச்சினைகள் வந்துச்சு. அதுக்கு, ”அவர் ஏரியாவிலேயே சீண்டுவீர்களா? அமைதியா விடுங்கய்யானு” கூப்பிட்டு அட்வைஸ் பன்றாரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.
”நகர சேர்மனை மதிக்காமல், லோக்கல் கே.பி அன்பழகன் எம்.எல்.ஏ.வுக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு விழாக்கள் நடத்தப்படுவதை தட்டிக்கேட்ட நகர செயலர் முரளிய கூப்பிட்டு, “கட்சிக்காரனையெல்லாம் மதிக்கவே மாட்டியாமே? அவ்வளவு திமிரா உனக்கு?”னு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரடியாக கண்டிச்சிருக்காரு. பழனியப்பனோடு பக்கபலமா நின்னு, கே.பி.அன்பழகனை எதிர்க்க வேண்டிய துணை செயலாளர் ஆ.மணி, சாதி பாசத்துல எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விசுவாசியா தன்னை காட்டிக்கிட்டு உள்ளடி வேலை பாக்குறாரு.
வீடியோ லிங்
எம்.பி. செந்தில்குமார் புதுசா தொறந்த பயணிகள் நிழற்கூடத்தில் எம்.பி.படம் பெரிசா இருக்கு, கலைஞர் படம் சின்னதா இருக்குனு ஒத்த ஆளா அடிமட்ட தொண்டன் ஒருவன் நடுரோட்ல உட்கார்ந்து போராடுறான். மாவட்டத்துல 248 கோடிக்கு வேலை நடந்தி ருக்கு. இதுல, ஒன்றியத்துக்கு 1.5%; கிளைக்கு 1% இன்னும் பட்டுவாடா ஆகலைனு 12 ஒன்றிய செயலாளர்கள் பழனியப்பன் மீது திமுக தலைமைக்கு கொளுத்திப்போட்டு கொண்டிருக்கிறார்கள். தருமபுரி மாவட்டம், கே.பி.அன்பழகனின் கட்டுப்பாட்டில் இருப்பது அல்ல பிரச்சினை! திமுக கழக உடன்பிறப்புகளே, அவரது பாக்கெட்டில் இருப்பதுதான் கழகத்திற்கு பிரச்சினை என்கிறார்கள் திமுக-வினர். திமுக தலைமை என்ன செய்யபோகிறது? டஜன் கணக்கில் கேள்விகள் முன்நிற்கின்றது
-விசாகன்