சாத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமைகள் நலச்சங்க கூட்டமைப்பு, மற்றும் விருதுநகர் மாவட்ட சுதேசி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் இணைந்து 350 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சங்கத்தின் தலைவர் ராஜரத்தினம், மாநில துணைச் செயலாளர் அங்குசாமி, மாவட்ட பொருளாளர் தீன தயாளன், மற்றும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு ரூ.10 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர நாற்காலிகள் பார்வையற்றோருக்கான உபகரணங்கள் வழங்கினார்கள்.
பின்னர் இந்த கூட்டத்தில், பின்வரும் 10 அம்சம் கொண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- அரசு வேலைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு (PWDs) Act கட்டாய 4 சதவீதம் ஒதுக்கீட்டின் மூலம் ஆண்டுக்கு 2 முறை சிறப்பு தேர்வு மூலம் வேலை வாய்ப்பை உருவாக்கிட வேண்டும்.
- தமிழகத்தில் 100% உடல் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளின் மாத பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000 இருந்து ரூ.5000 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும்.
- வருவாய்த் துறையின் மூலம் வழங்கப்படும் மாத பராமரிப்பு தொகை ரூ.1500 இருந்து ரூ. 4000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
- அரசு போக்குவரத்து குளிர்சாதனப் பேருந்தில் மாற்றுத்திறனாளிகள் நான்கில் ஒரு பங்கு சலுகை கட்டணத்தில் மாநில முழுவதும் பயணம் செய்ய (இரயில் கட்டணம் சலுகை போல்) அரசாணையை திருத்தம் செய்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
- வீடு இல்லாத வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள தகுதியுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வீட்டு மனை பட்டா வழங்கி வாழ்வுரிமையை உறுதி செய்திட வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டவர்களுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் விரைவாக வீடுகள் வழங்க வேண்டும்.
- உயர்கல்வி வேலைவாய்ப்புகள் இதர அரசு நலத்திட்டங்கள் பெறுவதில் மாற்றுத்திறனாளிக்கான இட ஒதுக்கீட்டை 5% சதவீதம் இருந்து 10% உயர்த்தி வழங்க வேண்டும்.
- தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான வரி, தொழில் வரி, சேவைவரி உள்ளிட்ட அனைத்து வரி விதிப்புகளில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும்.
- சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு பிணையின்றி தகுதியுள்ள நபர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் கடனுதவி விண்ணப்பம் பெற்ற ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும்.
- தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வினை எளிதில் கையாள தடையற்ற சூழலை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.
போன்ற தீர்மானங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நிகழ்ச்சி நிறைவில் தமிழகத்தில் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பணி சிறக்க தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்ளப்பட்டது.
— மாரீஸ்வரன்.