செய்தி நிறுவனங்களின் உழைப்பில் டிஜிட்டல் நிறுவனங்கள் பெறும் லாபம்!
வருவாய் பகிர்வு குறித்து அரசு உத்தரவிடுமா?
இந்திய ஊடக நிறுவனங்கள் வெளியிடும் செய்திகள் பெருவாரியான மக்களைச் சென்றடைவதற்கு ஃபேஸ்புக் போன்ற டிஜிட்டல் நிறுவனங்கள் உதவுவதால், இந்தியா நன்றியுடன் இருக்க வேண்டுமென இந்த டிஜிட்டல் நிறுவனங்கள் விரும்புகின்றன.
ஆனால், ஏராளமாக செலவு செய்து வெளியிடப்படும் செய்திகளை வைத்து கூகுள், போன்ற டிஜிட்டல் நிறுவனங்கள் ஈட்டும் வருவாய், ஊடகங்களிடம் பகிர்ந்துகொள்ளப்படுவதில்லை. இதுகுறித்து டிஜிட்டல் நிறுவனங்களுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளையும் கண்டும் காணாமல் போய்விட்டன. செய்திகளை சேகரிப்பதற்கு கூகுளும், ஃபேஸ்புக்கும் முதலீடு செய்ய வேண்டியதில்லை. ஆனால் அவற்றை வைத்து இந்நிறுவனங்கள் ஏறக்குறைய ஒரு லட்சம் கோடி டாலர் வருவாய் ஈட்டிவிட்டு ஊடகத் துறைக்கு சொற்பத் தொகையை மட்டும் வழங்குகின்றன.
இந்த அப்பட்டமான கொள்ளையை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். கூகுள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் பெறும் வருவாயை உள்நாட்டு ஊடக நிறுவனங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டுமென ஆஸ்திரேலிய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
கோவிட்-19 கொள்ளை நோயின் தாக்கத்தால் விளம்பர வருவாய் குறைந்துகொண்டே வருகிறது. இந்த நிலையில், டிஜிட்டல் நிறுவனங்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் இடையே நிலவும் இந்தப் பிரச்சினையை அதிகாரிகள் உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். செய்திகளைச் சேகரிக்கும் பணிகளுக்காகவும், தரமான உள்ளடக்கத்தை உருவாக்கவும் ஊடக நிறுவனங்கள் ஏராளமான மனித வளத்தையும் பணத்தையும் முதலீடு செய்கின்றன.
இயற்கைப் பேரிடர்கள், மதக் கலவரங்கள், கோவிட்-19 போன்ற சுகாதார அவசரநிலை போன்ற சூழல்களில் மக்களுக்குத் துல்லியமான செய்திகளை வழங்குவதற்காகப் பத்திரிகையாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்கின்றனர். ஊடகத் துறையைச் சூறையாடுவதில் கூகுளும் ஃபேஸ்புக்கும் வெற்றி கண்டுவிட்டால் அது ஜனநாயகத்துக்கும் பொது ஒழுங்கிற்கும் வாழ்வாதாரத்திற்கும் நல்லதல்ல. பொதுநலன் கருதிச் செய்திகளை வெளியிட ஊடகத் துறை வாய்ப்பளிக்கிறது.
சமூக ஊடகங்களில் பரவும் போலி தகவல்கள், பொய் செய்திகளால் மக்களிடையே அவநம்பிக்கையும், பீதியும், சமூகங்களுக்கிடையே வெறியும் உண்டாகின்றன. இதுபோன்ற போலி செய்திகளிலிருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்க ஊடகத் துறை பெரும் பங்காற்றுகிறது. ஆனால் டிஜிட்டல் நிறுவனங்களோ உண்மைச் செய்திகள், போலிச் செய்திகள் என இரண்டையுமே பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றன. செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளை டிஜிட்டல் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன. ஆனால், சமூக ஊடகங்களில் தீ போல பரவும் பொய்ச் செய்திகளுக்குப் பொறுப்பேற்பதில்லை.
உலகம் முழுவதும் கால்தடம் பதித்துள்ள டிஜிட்டல் நிறுவனங்களைச் சரியான நடவடிக்கைகளை எடுக்கவைக்க தீவிர பேச்சுவார்த்தை தேவை. முன்பு, டிஜிட்டல் நிறுவனங்கள் வருவாயை கட்டாயமாக பகிர வைக்க ஸ்பெயின், பிரான்ஸ் அரசுகள் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. தற்போது பிரான்ஸ், ஆஸ்திரேலிய நாடுகளில் இருப்பதை போல, வருவாய் பகிர்வு குறித்து ஊடக நிறுவனங்களிடம் டிஜிட்டல் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென இந்திய அரசு உத்தரவு பிறப்பிக்கலாம்.
கோவிட்-19 கொள்ளை நோய் தாக்கத்தால் ஆஸ்திரேலியாவில் சில ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்குவதற்கு அந்நாட்டு அரசு அவசர நடவடிக்கை எடுத்து வருகிறது. பன்னாட்டு டிஜிட்டல் நிறுவனங்கள் ஏகபோக உரிமையுடன் இயங்க முயலும்போது, அனைவருக்கும் சமமான தொழில் தளம் அமைத்து தர வேண்டிய அவசியம் உண்டாகிறது.
2018-&19ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஆன்லைன் விளம்பர வருவாயில் ஃபேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் மட்டும் ஏறக்குறைய 70 விழுக்காட்டைப் (ரூ.11,500 கோடி) பெற்றுள்ளன.
இந்தியாவில் ஆன்லைன் விளம்பரச் சந்தையின் மதிப்பு 2022ஆம் ஆண்டில் ரூ.28,000 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூர் சமூகங்களும் தொழில்களும் சீரழிக்கப்படும் காலத்தில், இந்தியர்களின் வியர்வையும் உழைப்பும் கொள்ளையடிக்கப்படாத வகையில் டிஜிட்டல் காலனியாக்கத்தை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.