“ஸ்டிரைக் செஞ்சா டிஸ்மிஸ் !” மாணவர்களை மிரட்டி கையெழுத்து வாங்கும் கல்வி நிறுவனங்கள் !
“ஸ்டிரைக் செஞ்சா டிஸ்மிஸ் !” மாணவர்களை மிரட்டி கையெழுத்து வாங்கும் கல்வி நிறுவனங்கள் !
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின்போது, ”போராட்டத்தில் பங்கேற்க மாட்டேன். எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராக இருக்கமாட்டேன்.” என்பது போன்ற உறுதிமொழி கடிதம் எழுதிவாங்கும் நடைமுறை கேள்வி கேட்பாறின்றி தொடர்ந்து வருகிறது. இந்த நடைமுறையை, தற்போது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களும் பின்பற்றத் தொடங்கியிருப்பது கவலையளிப்பதாக குறிப்பிடுகிறார், கல்வியாளரும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளருமான பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு.
சமீபத்தில், பாரம்பரியமிக்க கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவர்களிடம், கடிதம் ஒன்றைக் கொடுத்து அதில் கையெழுத்து கேட்ட விவகாரம் சர்ச்சைக்குள்ளானது. ”எந்த ஒரு அரசியல் கட்சியையும் சார்ந்த எந்த ஒரு அமைப்பிலும் நான் உறுப்பினராக இல்லை. கல்வி நிறுவனத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் ஈடுபட மாட்டேன். துறை பேராசிரியர்கள், துறைத்தலைவர்களின் முன் அனுமதியின்றி நீண்ட விடுப்பு எதுவும் எடுக்க மாட்டேன். இதனை நான் மீறும்பட்சத்தில் துறைத்தலைவர் என்னை படிப்பிலிருந்து நீக்கலாம்.” என்பதாக இருந்தது அந்தக் கடிதம்.
”மாணவர்களிடம் உறுதிமொழி படிவத்தை மட்டும் விநியோகம் செய்துள்ளார்கள். திட்டவட்டமாக எந்த மாணவர்களிடமும் அத்தகைய கையெழுத்து பெற மாட்டோம் என்று துறைத்தலைவர் அறிவித்துள்ளார். இருப்பினும், இத்தகைய நடவடிக்கை தவறான ஒரு அணுகுமுறை. இத்தகைய மாணவர் – ஆசிரியர் நலனுக்கு எதிரான நடவடிக்கைகள் இந்த ஒரு கல்வி நிறுவனத்தில் மட்டும் நிகழவில்லை. இது இந்தியா முழுவதும் நிகழ்கிறது.
இது தனி நபர் சார்ந்தது அல்ல. குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களின் முழு ஒப்புதலுடன்தான் இது நடக்கிறது. மேலும், இந்த ஆண்டு தமிழகத்தின் முன்னணி தனியார் கல்லூரிகள் உள்ளிட்டு அரசு கல்லூரிகள் வழங்கிய மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்படிவத்திலேயே இத்தகைய வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. விண்ணப் படிவத்தின் ஒரு பகுதி என்பதாக கருதி, முழுமையாக அதனை படித்துப் பார்க்காமலேயே பெற்றோர்களும் மாணவர்களும் கையெழுத்திட்டு கொடுத்துள்ளனர்.” என்கிறார், அவர்.
மேலும், “இதுபோன்ற நடவடிக்கைகள் உயர்கல்வியின் நோக்கத்தையே தோற்கடிப்பவை. குறிப்பிட்ட ஒரு கல்வி நிறுவனத்தின் உள் விவகாரமாக பார்க்க முடியாது. அறிவுள்ள குடிமக்கள் இருந்தால் மட்டுமே ஜனநாயகம் பயனுள்ளதாக இருக்கும். விவாதம், விமர்சனம் ஆகியவை ஜனநாயகத்தின் அம்சங்கள். பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம்; அமைதியான முறையில் ஆயுதங்கள் இல்லாமல் கூடுவது; சங்கங்கள் அல்லது தொழிற்சங்கங்களை உருவாக்குதல் ஆகிய உரிமைகளை அனைத்து குடிமக்களுக்கும் வழங்குகிறது, இந்திய அரசியலமைப்பின் 19-வது பிரிவு. அரசமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு கண்ணியமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
மேலும், பள்ளி படிப்பை முடித்து உயர்கல்வி பயிலும் மாணவர் என்பவர் விவரம் அறிந்தவர். அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை விமர்சிக்க சட்டப்பூர்வமாக உரிமை பெற்றவர். உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளும் விமர்சனத்திற்குரியவைதான். எந்த ஒரு கல்வி நிறுவனமாக இருந்தாலும், மாணவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறினால், அவர்களின் பிரதிநிதித் துவங்கள் கவனிக்கப்படாவிட்டால், அவர்களின் உண்மை யான கோரிக்கைகள் குறித்து கல்வி நிறுவனத்தின் அதன் நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் போராட்டம் நடத்தும் உரிமை மாணவர்களுக்கு உண்டு. இவைபோன்ற, குடிமக்களுக்கு அரசமைப்பு சட்டம் வழங்கிய அடிப்படை உரிமையையே பறிக்கும் வகையிலான, நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.” என்கிறார், பிரின்ஸ் கஜேந்திரபாபு.
-இளங்கதிர்