பச்சிளங்குழந்தைகளுக்கு பசும்பால் இலவசம் ! ஓசையின்றி தொடரும் சேவை !
பிரசவத்திற்கு இலவசம் இந்த வாசகம் தமிழகத்தில் பிரபலமான ஒன்று. ”வெளியூரிலிருந்து கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு இங்கு இலவசமாக பால் வழங்கப்படும்” இது புதுசு!
பச்சிளங்குழந்தைகளுக்கு பசும்பால் இலவசம் ! ஓசையின்றி தொடரும் சேவை !
”பிரசவத்திற்கு இலவசம்” ஆட்டோவில் இடம்பெற்றிருக்கும் இந்த வாசகம் தமிழகத்தில் பிரபலமான ஒன்று. ”வெளியூரிலிருந்து கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு இங்கு இலவசமாக பால் வழங்கப்படும்” என்ற வாசகம் முற்றிலும் புதியதுதான். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் என்றழைக்கப்படும் எம்.ஜி.ஆர். புறநகர் பேருந்து நிலையத்தில் ஆவின் பாலகம் ஒன்றில் கண்ட காட்சி நம்மை வியப்பில் ஆழ்த்தியது.
”கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமண விழா ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னை சென்றிருந்தபோது, பசியால் அழுத என் தங்கையின் குழந்தைக்கு தாம்பரம் பகுதியில் கடை ஒன்றிலிருந்து பால் வாங்கிக் கொடுத்தோம். பின்னர், அதுவே குழந்தையின் உடல் நலனுக்கு தீங்காகவும் மாறியது. என்னதான் தொலைதூர பயணமாக இருந்தாலும் சட்டென்று வெளியில் பால் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்துவிட மாட்டார்கள். இதுபோன்று கைக்குழந்தையுடன் தொலைதூர பயணங்களை மேற்கொள்ளும் தாய்மார்களின் நம்பிக்கைக்குரிய வகையிலும், குழந்தைகளுக்கும் கெடுதல் தராத பசும்பாலை வழங்க வேண்டும் அவர்களது சிரமத்தை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த சேவையை தொடர்ந்து வருகிறேன்.
இதற்கான செலவுகளை சமாளிக்க எனது மகன்கள் மாதம் ரூ5000/- வழங்குகிறார்கள். இந்த சேவைக்காக எனது நண்பர்களும் உதவி செய்து வருகிறார்கள். என் சேவையை பாராட்டி உயர்நீதிமன்ற நீதியரசர்கள், மாவட்ட ஆட்சியர், மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழ் சங்க தலைவர், வானொலி தொலைக்காட்சி என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த பாராட்டு எனது சேவைக்கு ஊக்கம் தருகிறது.” என்கிறார், முகம் மலர்ந்த புன்னகையோடு பேசிய பாலக உரிமையாளர் குணா சுரேஷ்.
அங்குசம் சார்பில் நாமும் வாழ்த்தி மகிழ்வோம்!
ஷாகுல்
படங்கள் : ஆனந்தன்