இராகுல்காந்தி பதவி இழப்பு – இடைக்கால தடை இல்லை – இராகுல்காந்தி மனுவை தள்ளுபடி
இராகுல்காந்தி பதவி இழப்பு – இடைக்கால தடை இல்லை
குஜராத் உயர்நீதிமன்றம் இராகுல்காந்தி மனுவை தள்ளுபடி செய்தது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற பரப்புரையில் மோடியை விமர்சனம் செய்து பேசினார். இது தொடர்பாக, குஜராத் மாநிலம் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு கிரிமினல் வழக்காகத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் இராகுல் காந்தி குற்றவாளி என்று தீர்ப்பின் அடிப்படையில் 2 ஆண்டு சிறை தண்டனை மார்ச்சு மாதத்தில் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் மாவட்ட நீதிமன்றத்தில் தண்டனைக்கு இடைக்காலமாக நிறுத்தி வைக்கவேண்டும் என்று மேல்முறையீடு செய்தார். ராகுலின் மேல்முறையீட்டை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டை செய்துகொள்ள அறிவுரை வழங்கப்பட்டது. அடுத்து ராகுல்காந்தி குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தில் தண்டனையை நிறுத்தி வைத்து இடைக்காலத் தடை வேண்டி மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டைத் தொடர்ந்து குஜராத் உயர்நீதிமன்றம் இன்று (07.07.2023) வழங்கிய தீர்ப்பில்,“இராகுல் மேல்முறையீட்டில் இடைக்காலத் தடை வேண்டிய மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கிறார். கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் விரைவில் நடைபெறும். இந்தத் தேர்தலில் இராகுல் போட்டியிட முடியாது. மேலும் குஜராத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார் என்று இராகுல் தரப்பில் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
-ஆதவன்