“ரூ.2 லட்சம் லஞ்சம்” நீலகிரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கைது.
“ஊட்டி அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியரிடம் ரூ. 2 லட்சம் லஞ்சப்பணம் வாங்கிய நீலகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் சிபு மானிக் வயது (40). இவர் 2018-ம் ஆண்டு முதல் குன்னூர் பார்க்சைட் சிஎஸ்ஐ அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். பள்ளி நிர்வாகம் இவரை பணி நிரந்தரம் செய்ய கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பியது. ஆனால்” “பள்ளிக்கல்வித்துறை இவரை பணி நிரந்தரம் செய்ய மறுப்பு தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டை அணுகி நிரந்தர பணி நிரந்தரத்திற்கான ஆணையை பெற்றார். இவ்வளவு காலம் பணியாற்றியதற்கான நிலுவை தொகையை ரூ.20 முதல் ரூ.25 லட்சம் இவருக்கு வழங்க கோர்ட் உத்தரவிட்டது. ஆனாலும் இவருக்கு பணி நிரந்தர உத்தரவு மற்றும் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து மீண்டும் இந்த உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் ஜான் சிபு மானிக் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து உடனடியாக அவருக்கு நிலுவைத் தொகை வழங்கி பணி நிரந்தரம் செய்ய சென்னை ஐகோர்ட் மீண்டும் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து பணி ஆணை மற்றும் நிலுவைத் தொகை பெறுவதற்கான உத்தரவை வழங்க வலியுறுத்தி ஜான் சிபு மானிக் நீலகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷை அணுகினார்.”
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இவருக்கு பணி ஆணை மற்றும் நிலுவை பணத்தை கொடுப்பதற்கு லஞ்சமாக ரூ.5 லட்சம் பணத்தை நீலகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ் கேட்டுள்ளதாக தெரிகிறது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் ரூ.2 லட்சம் பணம் தர முடிவு ஆகிறது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு லஞ்சம் தர விருப்பம் இல்லாததால் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை ஜான் சிபு மானிக் அணுகினார்.
இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.2 லட்சத்தை ஊட்டி பிங்கர்போஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் உள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷ் வீட்டில் வைத்து அவரிடம் கொடுக்கிறார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப் இன்ஸ்பெக்டர்கள் சாதன பிரியா, சக்தி, ரங்கநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.”
— மணிகண்டன்.