முகநூலில் கட்சி விலகலை அறிவித்த மாவட்ட செயலாளர் – அடுத்த நகர்வு என்ன !
தமிழக அரசியலில் திமுக, அதிமுக என்ற அரசியல் கட்சிகளுக்கு அடுத்த இடத்தில் இருந்தது தேமுதிக விஜயகாந்த் உடல்நிலையில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்குப் பிறகு பிரேமலதா தேமுதிகவிற்கு தலைமை ஏற்கத் தொடங்கினர். அதன் பிறகு தேமுதிக நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் கூட மிகப் பெரிய அளவில் தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த நிலையில் தேமுதிகவின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், கட்சியின் முக்கிய நிர்வாகியாகவும் திருச்சியில் வலம் வந்தவர் கிருஷ்ணகோபால். மேலும் இவர் மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் இவருக்கு அந்த பகுதியை தனி செல்வாக்கும் இருக்கிறது. 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவின் தலைமையிலான மக்கள் நல கூட்டணி சார்பில் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பிறகு தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் தேமுதிக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார், ஆனாலும் இரண்டு தேர்தலிலும் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இவர் நேற்று தனது முகநூல் பக்கத்தில் “கனத்த இதயத்துடன் தேமுதிகவில் இருந்து வெளியேறுகிறேன்” என்று பதிவு செய்துவிட்டு கட்சியிலிருந்து விலகி இருக்கிறார்.
இது குறித்து தகவல் அறிய கிருஷ்ணகோபாலை அங்குசம் இதழ் தொடர்பு கொண்டது, அவர் நம்மிடம் கூறியது ; தேமுதிக தலைவர் கேப்டன் அவர்கள் மீது கொண்ட பற்றால் தேமுதிகவில் இணைந்து செயல்பட்டு வந்தேன். இந்த நிலையில் தேமுதிகவில் இருந்து வெளியேறி இருக்கிறேன். இது நாள் வரை இருந்த கட்சியை குறை கூறுவது சரியாக இருக்காது. நேற்று விலகுவதாக அறிவித்ததில் இருந்து கட்சியின் தலைமையில் இருந்த பலரும் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். ஆனாலும் என் முடிவை மாற்றிக் கொள்வதாக இல்லை.
வேறு கட்சியில் சேர வாய்ப்பு இருக்கிறதா என்று நாம் கேட்டதற்கு, அரசியலில் இருந்து விலகும் எண்ணம் இல்லை, ஆனாலும் தொடர்ந்து பயணிப்பேன். தற்போது மக்கள் மத்தியிலும் மணப்பாறை தொகுதியிலும் நல்ல பெயர் இருக்கிறது, தொகுதி முழுக்க மக்களிடம் மரியாதையை பெற்றிருக்கிறேன். புதிதாக வேறு கட்சியில் சேர்ந்தாலும் அந்த மரியாதையை கிடைப்பதாக இருந்தால் சேர வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை. 2016 ஆம் ஆண்டு முதலே பல்வேறு கட்சியில் இருந்தும் இருந்து அழைப்பு வந்து கொண்டிருக்கிறது. திமுகவில் இருந்தும் அழைப்பு வருகிறது.
மேலும் நான் என்னுடைய பிரச்சினைகளுக்கு யாரிடமும் சிபாரிசு சென்றது கிடையாது, என் தொழில் ரீதியாக ஏற்பட்ட பிரச்சினையில் கூட நீதிமன்றத்திற்குச் சென்று தான் நீதி பெற்றேன். அரசியலிலிருந்து விலகும் எண்ணம் இல்லை என்றாலும் தற்போது வரை அரசியல் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறினார்.